டாஸ்மாக் டார்கெட்: மக்கள் கருத்து!

அரசியல்

கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கிடைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் பேட்டியே கொடுத்துள்ளார்.

இதை பற்றி பொதுமக்களிடம் மின்னம்பலம் கருத்து கேட்டது. அதற்கு பொதுமக்கள் அளித்த கருத்துக்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்:

“இதை அசிங்கமாக நினைக்கிறேன். தமிழ்நாடு அரசு விவசாயத்திலோ அல்லது ஏழைகளை தொழில் முனைவோராக மாற்றுவதிலோ சாதனை செய்யலாம். ஆனால் டாஸ்மாக் மூலமாக வருமானத்தை பெருக்க வேண்டும் என்று நினைப்பது கேவலம். சமுதாயத்தை அழிக்கத்தான் இந்த அரசு வந்திருக்கிறது. கனிமொழி ஆட்சிக்கு வந்த உடன் மதுக்கடைகளை மூடுவதாக சொன்னார்…அப்படி செய்தாரா? ” என்று பிரேமிளா என்ற தாய் கேள்வி எழுப்பினார்.

“மதுக்கடைகளை குறைக்க வேண்டும் . மதுவால் எவ்வளவோ மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தற்போது விற்கப்படும் மதுவில் கெமிக்கல் தான் இருக்கிறது” என்று ராஜேந்திரன் என்ற இளைஞர் கருத்து தெரிவித்தார்.

ராஜேந்திரன்

அன்பு என்பவர் “தமிழ்நாடு அரசு அனைவரையும் குடிகாரர்களாக மாற்ற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. வருடம் வருடம் மது விற்பனையை எப்படி அதிகரிப்பது என்று தான் அரசு யோசிக்கிறது” என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அன்பு

”ஒரு புறம் மதுவை விற்பனை செய்கிறார்கள் மறுபுறம் ட்ராபிக் போலீசார் மூலம் அபராதம் வசூலிக்கிறார்கள். இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். மக்கள் நிம்மதியாக இருப்பதற்கு சரியான சட்டத்தை வகுக்க வேண்டும்” என்று ஜாலில் என்ற நபர் கூறியுள்ளார்.

ஜாலில்

மாயவன் என்பவர் “ 45 ஆயிரம் குடும்பத்தை அழித்துவிட்டனர் இப்போது 50 ஆயிரம் குடும்பத்தை அழிக்க திட்டம் போட்டுள்ளனர். இது தான் இந்த அரசு மக்களுக்கு கொடுக்கும் நன்மை. மது ஒழிப்பதாக சொல்லி விட்டு தற்போது மதுவை வளர்க்கிறார்கள். இதைத்தான் மாறி மாறி இந்த அரசுகள் செய்கிறது” என்றார்.

மாயவன்

பால குரு என்பவர் “மது விற்பனையில் தான் இந்த அரசுகள் டார்க்கெட் செய்கிறதே தவிர கல்வியிலோ மக்களின் வாழ்வாதாரத்திலோ எந்த ஒரு முன்னேற்றத்திற்கும் டார்கெட் வகுக்கப்படுவதில்லை. 100 சதவீத மக்களையும் இந்த திமுக அரசு குடிக்க வைத்து விடும் . இதற்கான ஒரே ஒரு தீர்வு மக்கள் அனைவரும் முதல்வரை பார்த்து மது விலக்கை அமல்படுத்துங்கள் , மதுக்கடைகளை மூடுங்கள் என்று கேட்க வேண்டும்” என்றார்.

பாலகுரு

”ஒவ்வொரு நாளும் மகளிராகிய நாங்கள் முன்னேறி வர வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால், இந்த அரசுகள் மக்களுக்கு சாதகமாக இருப்பதாக கூறிக்கொண்டு மோசடி தான் செய்கிறார்கள். பெண்களால் ஒரு பேருந்து நிலையத்தில் கூட நிற்க முடியவில்லை. குழந்தைகளை இரவு ஏழு மணிக்கு மேல் வெளியில் அனுப்புவதற்கு கூட பயமாக இருக்கிறது” என்றார் பாரதி.

பாரதி

ரவி என்ற நபர், “போலீஸ்காரராகவோ , அரசு அதிகாரிகளாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ பிறந்தால் தான் தமிழ்நாட்டில் வாழ முடியும். சராசரி மனிதனாக இருந்தால் இந்த அரசு நம்மை சாகடித்து விடும் . மது விற்பனை மூலம் வரும் பணம் பாவப்பட்ட பணம். இதில் பெருமையாக பேசுவதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.

ரவி

”வேலை செய்து கிடைக்கும் வருமானத்தை அப்படியே மதுக்கடைகளில் கொடுத்து விடுகிறார்கள். வீட்டில் இருக்கும் பொருட்களையும் அடகு வைத்து குடிக்கிறார்கள். மது அதிகமாகத்தான் ஆகுமே தவிர குறையாது. மதுக்கடைகளை எடுத்தால் தான் நன்றாக இருக்கும்” என்று புவனேஸ்வரி என்பவர் கருத்து தெரிவித்தார்.

புவனேஷ்வரி

ஆட்டோ ஓட்டுநர் வெங்கேடசன், ”ஒரு மாதத்தில் கூட இந்த இலக்கை அரசு அடைந்து விடும் . மது விலையை ஏற்றிவிட்டால் வருமானம் அதிகமாக கிடைக்கும். எவ்வளவு விலை ஏற்றினாலும் குடிக்க குடிமகன்கள் தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

வெங்கடேசன்

”அரசு மதுக்கடைகள் மூலம் 50 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் 50 ஆயிரம் கோடிக்கும் அதிகம் கிடைக்கும். இது ஏறிக்கொண்டு தான் போகும். குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை” என்று பிருந்தா தன்னுடைய கருத்தை மின்னம்பலத்திடம் கூறினார்.

ப்ருந்தா

ஜாஸ்மின் , “இந்த அரசுக்கு இது தேவை இல்லாத வேலை. எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் இருக்கிறது. அதில் அவர்கள் கவனம் செலுத்தலாம். குழந்தைகளின் கல்வி , வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கலாம். இந்த திமுக அரசிடம் நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் திமுக அரசிடம் எதிர்பார்த்தது வேறு. ஆனால், அவர்கள் செய்வது அப்படியே அதற்கு எதிர்மறையாக இருக்கிறது. அது எங்களுக்கு வருத்தமாக உள்ளது” என்றார்.

ஜாஸ்மின்

சுரேஷ் என்பவர், “எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதை நிறுத்த மாட்டார்கள். அரசின் இலக்கு அதிகரித்து கொண்டு தான் போகும். இதனால் நாடு சீரழிந்து தான் போகும்” என்ற கருத்தை பதிவு செய்தார்.

தேவிகா , “சின்ன சின்ன பசங்கள் எல்லாம் மதுக்கடைகளுக்கு சென்று மது அருந்துகிறார்கள். அதனால் அந்த குடும்பங்கள் பாதிப்படைகிறது. குடும்பத்தலைவர்கள் இறந்து போவது வருத்தமாக உள்ளது. மதுக்கடைகளை மூடினால் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்” என்று கூறினார்.

தேவிகா

”மதுக்கடைகள் இல்லை என்றால் அரசாங்கம் செயல்படாது என்ற நிலை இருக்கிறது. மதுக்கடைகள் அதிகமாகத்தான் ஆகிறதே தவிர அது குறையவில்லை.

ஸ்ரீ வித்யா

மதுக்கடைகளை மூடினால் எல்லோருக்கும் சந்தோசமாக இருக்கும். மகளிர் எல்லோரும் கேட்பது அதைத்தான்” என்றார் ஸ்ரீ வித்யா.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“தாமி” படத்தில் தமிழ் நடிகை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *