பெண்களை குறிவைத்து பேசுவதா?: ஹெச்.ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

அரசியல்

பெண்களை குறிவைத்து பேசுவதை ஏற்க முடியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவிற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை மிகவும் கேவலமாக பேசியதாக வேடசந்தூர், நாகர்கோவில் உட்பட ஏழு காவல் நிலையங்களில் ஹெச்.ராஜாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அதுமட்டும் இன்றி சமூக வலைதளமான ட்விட்டரில் (எக்ஸ்) பெரியார் சிலையை உடைப்பேன் என்று ஹெச்.ராஜா பதிவிட்டதாக கூறி தந்தை பெரியார் திராவிட கழகம் புகார் அளித்தது. அந்த புகார் அடிப்படையில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு எதிராக தரக்குறைவான கருத்துகளை ஹெச்.ராஜா கூறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டன.

இப்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தொடரப்பட்ட 11 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (ஆகஸ்ட் 24) நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது ஹெச்.ராஜா தரப்பில் ஆஜரான ஆர்.சி.பால் கனகராஜ், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் எல்லாம் வெறும் செவி வழி செய்திதான். அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று வாதிட்டார். மேலும், பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட் போட்டார் என்பதற்கான ஆதாரமும் சேகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி, ஹெச்.ராஜா மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இந்நிலையில், காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான், அவருடைய பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும் என்பதை சுட்டிக்காட்டினார். எனவே ஹெச்.ராஜா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஹெச்.ராஜா இப்படி பேசுவது இது முதல் முறை இல்லை என்றார். மேலும், இது போன்ற கருத்துகளை அவர் கூறக்கூடாது. பெண்களை குறி வைத்து குற்றச்சாட்டுகளை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதையும் சுட்டிக் காட்டினார்.

பெரியார் சிலை உடைப்பு தொடர்பான ஹெச்.ராஜாவின் பதிவு குறுத்து கருத்து தெரிவித்த நீதிபதி,  “தமிழ்நாட்டில் பெரியாரை எப்படி மதிக்கிறார்கள் என்று தெரியுமா?.  அவருக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்று தெரியுமா? அவரை பற்றி நீங்கள் இப்படி பேசுகிறீர்களே” எனவும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, இந்த வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதிஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

27ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்!

“கொடநாடு வழக்கில் எடப்பாடி சிறைக்கு செல்வார்” – மருது அழகுராஜ்

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

1 thought on “பெண்களை குறிவைத்து பேசுவதா?: ஹெச்.ராஜாவிற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *