இன்று (ஏப்ரல் 24) காலை முதலே தமிழகத்தில் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் நடத்திவரும் ரெய்டு அரசியல் ரீதியான அதிர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது.
பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் மத்திய வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் ரெய்டு நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையின் ஒரு பகுதியாக அண்ணாநகர் திமுக எம்.எல்.ஏ. மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.
பொதுவாக வருமான வரித்துறை ரெய்டு நடக்கும்போது அந்த மாநில போலீஸாரை பாதுகாப்புக்கு வரவழைப்பது வழக்கம்.
ஆனால் இந்த ரெய்டின் போது மாநில போலீஸை அழைக்காமல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரையே முழுமையாக வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள் வருமான வரித்துறையினர்.
மாநிலப் போலீசாரை பாதுகாப்புக்கு கேட்டால் ரெய்டு தகவல் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்கூட்டியே கசிந்துவிடுமோ என்ற எச்சரிக்கைதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
ஜி ஸ்கொயர் தொடர்பான இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில் அண்ணா நகர் ஆறாவது பிரதான சாலையில் கார்த்திக் வீட்டில் நடந்து வரும் ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள்.
கார்த்திக் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடக்கும் நிலையில் அங்கே குவிந்த திமுகவினர், ‘போடாதே போடாதே பொய் வழக்கு போடாதே…’ என்றும், ‘அஞ்ச மாட்டோம் அஞ்ச மாட்டோம் பொய் வழக்குக்கு அஞ்ச மாட்டோம்’ என்றும் முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.
அண்ணா நகர் கார்த்திக் திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளராக இருக்கிறார். இந்த கட்சிப் பதவி மட்டுமல்ல அண்ணா நகர் கார்த்திக் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதால் இந்த ரெய்டின் பின்னணியில் பெரிய ஆபரேஷன் இருக்கிறது என்கிறார்கள் வருமான வரித்துறை வட்டாரங்களில்.
“திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே பல அமைச்சர்களின் சொத்து விவரங்களை மத்திய அரசின் வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகிறது.
அமைச்சர்களை விட ஒரு படி மேலே போய் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களான அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், மாப்பிள்ளை சபரீசன் ஆகியோரின் சொத்து விவரங்கள், அவரது பிசினஸ் பரிவர்த்தனைகள், வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றையும் கண்காணித்து வந்தது.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியன்று பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் முன்னணியினர், அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை அறிவித்தார். இதற்கு எதிராக ஒவ்வொருவராக அண்ணாமலைக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகளை டார்கெட் செய்யாமல் அண்ணா நகர் கார்த்திக் என்னும் ஓர் ஜூனியர் மீது வருமான வரித்துறை பாய்ந்திருப்பதுதான் முக்கியத்துவம்.
பல ஆண்டுகளாக ஸ்டாலின் மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோரோடு நெருக்கமான நட்பு பாராட்டி வருபவர் கார்த்திக். இது பிசினஸ் ரீதியாகவும் தொடர்கிறது. ஸ்டாலின் குடும்பத்தினர் அண்ணா நகர் கார்த்திக் வீட்டுக்கு செல்வதும், கார்த்திக் குடும்பத்தினர் ஸ்டாலின் வீட்டுக்கு செல்வதும் என குடும்ப நட்பாகவும் இது விரிவடைந்துள்ளது.
இந்த நிலையில்தான் அண்ணா நகர் கார்த்திக் அரசியல் ரீதியாகவும் உதயநிதியுடனும் சபரீசனுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். ஐடி விங்கில் அவருக்கு மாநில துணைச் செயலாளர் என்ற பதவி தரப்பட்டது.
ஸ்டாலின் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் சென்றுவரக் கூடிய செல்லப்பிள்ளை என்பதுதான் கார்த்திக்குக்கு இருக்கும் முக்கியத்துவம். இதெற்கெல்லாம் பிறகுதான் அவரது ஐடி விங் துணைச் செயலாளர் என்ற கட்சிப் பதவி.
இந்த அளவுக்கு ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஆகியோருக்கு நெருக்கமான கார்த்திக்கை குறி வைத்து வருமான வரி ரெய்டு நடந்திருப்பதுதான் திமுகவின் மேல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “திமுகவின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் அண்ணா நகர் கார்த்திக். இந்த நட்பு ஆட்சி அதிகாரத்திலும் கட்சி நிர்வாகத்திலும் கூட பிரதிபலித்து வருகிறது. அதாவது கிட்டத்தட்ட எல்லா அமைச்சர்களிடத்திலும் எப்போது வேண்டுமானாலும் பேசக் கூடியவர் கார்த்திக்.
முதல்வர் குடும்பத்தினருக்கு தேவையான சின்னச் சின்ன விஷயங்களில் இருந்து பெரிய பெரிய விவகாரங்கள் வரை அமைச்சர்களுக்கு தெரிவித்து அதை நிறைவேற்றக் கூடியவர் கார்த்திக்தான். அமைச்சர்களுக்கும் முதல்வர் குடும்பத்துக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு வருபவர்.
மேலும் அமைச்சர்கள் மற்றும் முன்னணி பிரமுகர்களிடம் இருந்து கட்சி நிதியைத் திரட்டுவதிலும் கார்த்திக் பங்கு முக்கியமானது என்று தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல்கள் கார் பார்க்கிங் பகுதிகளை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தி அதன் பின் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ரெய்டு வரை வந்திருக்கிறோம்” என்கிறார்கள் வருமான வரி வட்டாரங்களில்.
அண்ணா நகர் கார்த்திக்கை குறிவைத்து நடத்தப்படும் ரெய்டு என்பது கார்த்திக் மீதான ரெய்டு அல்ல…. இது முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கிய நடவடிக்கைகளுக்கான தொடக்கப் புள்ளிதான்.
இது அமலாக்கத்துறை வழியாக அடுத்த கட்டத்தை அடையும் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில். ஏற்கனவே திமுகவினரின் சொத்துப் பட்டியல், பிடிஆர் ஆடியோ என பாஜக பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அண்ணா நகர் கார்த்திக் மீதான ரெய்டு அரசியல் ரீதியாக ஸ்டாலினை ஒடுக்கும் முயற்சி என்று திமுக தரப்பில் கூறுகிறார்கள்.
”இப்படித்தான் 2021 தேர்தல் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கும்போதே சபரீசனின் நீலாங்கரை வீட்டிலும், அண்ணா நகர் மோகன் மற்றும் கார்த்திக் வீட்டிலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. அதேபோல இப்போதும் மிரட்டிப் பார்க்கிறார்கள். எதையும் எதிர்கொள்வோம்” என்கிறார்கள் திமுகவினர்.
அடுத்தடுத்து பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதே இப்போதைய நிலவரம்!
–வேந்தன்
ஒரு பாடலுக்கு ரூ.1 கோடி கேட்கும் ஸ்ரேயா
தோல்வியில் இருந்து மீளுமா ஹைதராபாத் அணி ?