ராஜன் குறை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று வழிநடத்திய தமிழ்நாட்டு இந்தியா கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேறு எந்த மாநிலத்திலும் பெற்ற வெற்றியைவிட தனித்துவமிக்க மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஸ்டாலின் அவர்களின் தலைமைப் பண்பும், தொகுதிப் பங்கீட்டிலும், தி.மு.க வேட்பாளர் தேர்விலும் அவர் காட்டிய பக்குவமும், பிரச்சாரத்தில் அவர் காட்டிய தீவிரமும், கடும் உழைப்பும் என்றால் மிகையாகாது.
இரண்டிரண்டு தொகுதிகளை இணைத்து மாநாடு போன்ற மக்கள் திரள் கூட்டங்களில் அவர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தினமும் பேசினார். தெளிவாகவும், உறுதிபடவும் பா.ஜ.க-வின் பாசிச முகத்தை துகிலுரித்தார். எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வை உறுதிபட எதிர்க்கத் தயங்குவதை அம்பலப்படுத்தினார். தனது ஆட்சியின் சாதனைகளைக் கூறினார். தி.மு.க, இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கைகளின் சிறப்பம்சங்களைக் கூறினார். மன உறுதி, சிந்தனைத் தெளிவு, மிகையற்ற சுருக்கம் ஆகிய அம்சங்களால் சிறந்து விளங்கின அவர் உரைகள். காலை நேரங்களில் மக்களுடன் மக்களாக பொது இடங்களில் கலந்து பழகி ஆதரவு திரட்டினார்.
“நாற்பதும் நமதே!” என்று முழங்கினார் ஸ்டாலின். அந்த முழக்கத்திற்கு ஏற்றபடி நாற்பது தொகுதிகளையும் வென்று காட்டினார். பிரதமர் மோடி நானூறுக்கும் அதிகம் என்று முழங்கினார். அவரால் 240 தொகுதிகளைத்தான் பெற முடிந்தது. அவர் கட்சி ஒன்றிய அரசில் தனிப்பெரும்பான்மையை இழந்துள்ளது. ஆனால், அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் உலவும் பலர் ஸ்டாலின் சாதனையை பாராட்டத் தயங்குவதையும், மோடியின் சரிவுக்குச் சப்பைக் கட்டு கட்டுவதையும் பார்க்க முடிகிறது.
நாற்பதும் நமதே என்பதுடன் “நாடும் நமதே” என்றார் முதல்வர். அதன் பொருள் நாடு சமூக நீதி, கூட்டாட்சி பாதையில் நடைபோடும் என்பதுதான். அதுவும் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் சிறப்பாகவே உள்ளன. முதலில் ஒன்றியத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைகிறது. இதற்கு மாறாக மோடி, “தமிழ்நாடும் பா.ஜ.க வசமாகும்” என்றார். ஏழு முறை பிரச்சாரத்திற்கு வந்தார். ஒற்றைத் தொகுதியில் கூட பா.ஜ.க வெல்ல முடியாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ளது.
இந்த உண்மையை செரிக்க முடியாமல் பிரதமர் முதல், அரசியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ந்துள்ளது என்று ஒரு மாய்மாலத்தை கட்டமைக்கிறார்கள். அது உண்மையா என்று பார்ப்போம்.
தி.மு.க தொடர் வெற்றியின் வரலாற்றுச் சிறப்பு
நாம் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். பத்தாண்டுகளுக்கு முன் 2014-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க தனித்து நின்று, 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதற்கான காரணங்கள் பல. அகில இந்திய அளவில் தி.மு.க இடம்பெற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மன்மோகன் சிங் அரசின் மீது ஊடகங்கள் கட்டியெழுப்பிய மிகப்பெரிய அதிருப்தி அலை, அன்னா ஹசாரே போராட்டம், ஊதிப்பெருக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், தமிழ்நாட்டில் இலங்கை துயர நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிருப்தி என பல காரணங்கள் இருந்தன. தமிழனத் தலைவர் கலைஞரும் மூப்பினால் தளர்வடைந்திருந்தார்.
அந்த 2014 தேர்தலில் மிகப்பெரிய வளர்ச்சி அரசியல் பிம்பமாக கட்டமைக்கப்பட்ட நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க ஒன்றிய அரசில் ஆட்சியமைத்தது. ஆனால், தமிழ்நாட்டில் “அந்த மோடியா, இந்த லேடியா” என்று கேட்ட ஜெயலலிதா பெருமளவில் வென்றார்.
அடுத்த வந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க-வே வென்றது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு காலமானார். பலவிதமான உட்கட்சி குழப்பங்களை பா.ஜ.க தூண்டிவிட்டது. அதன் கைப்பிடிக்குள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கொண்டு வந்தது. அந்த நேரத்தில் மூப்பினால் கலைஞரும் இயற்கை எய்தினார். தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரும் வெற்றிடம் ஏற்பட்டதாக ஊடகங்கள் ஓயாது முழங்கின. அந்த வெற்றிட கற்பனையில் பாரதீய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் கால்பதிக்கத் துடித்தது.
வெற்றிட மாய்மாலத்தைத் தகர்க்கும் வண்ணம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்றார். பாரதீய ஜனதா கட்சியை தமிழகத்தில் ஊன்றவிடாமல் செய்வதே தனது அரசியல் என அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் 2019-ம் ஆண்டு நிகழ்ந்தபோது முற்போக்கு சக்திகளுடன் சிறந்த கொள்கைக் கூட்டணி அமைத்தார். ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தார். அ.இ.அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க கூட்டணியை முறியடித்து 38 தொகுதிகளில் பெருவெற்றி கண்டார். திராவிட சித்தாந்தத்தின் மேன்மையை மீட்டெடுத்து அதன் வரலாற்றுத் தொடர்ச்சியை உறுதி செய்தார்.
அதே கூட்டணியுடன் பயணம் செய்து 2021-ம் ஆண்டு தமிழ்நாட்டு முதல்வரானார். திராவிட மாடல் ஆட்சியமைத்தார். கொரோனாவில் துவண்டிருந்த சமூகத்தை மீட்டெடுத்தார். ஆட்சியிலும், மக்கள்நலத் திட்டங்களிலும், பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தினார். மகளிர் இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய், பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் எனத் தொடங்கி பல்வேறு பிரமிப்பூட்டும் நலத் திட்டங்களை நிகழ்த்திக் காட்டினார். ஒன்றிய அரசை ஆண்ட பா.ஜ.க ஏராளமான இடையூறுகளைச் செய்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் மூலம் முட்டுக்கட்டைகள் போட்டன. அதற்கெல்லாம் தளராமல் பீடு நடை போட்டது திராவிட மாடல் அரசு.
தி.மு.க கூட்டணியை எதிர்கொள்ள முடியாது என்று அறிந்த பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க-வை பிளந்தது. அரசியல் கத்துக்குட்டி அண்ணாமலையை மாநில தலைவராக்கி அ.இ.அ.தி.மு.க-வை தொடர்ந்து சீண்டியது. எப்படியாவது அ.இ.அ.தி.மு.க-வை சிதைத்து தான் அந்த அரசியல் இடத்தை நிரப்ப வேண்டும் என நினைத்தது.
நரேந்திர மோடியின் பிம்பக் கட்டமைப்பையும் மிஞ்சுமளவு அண்ணாமலைக்கு பிம்பக் கட்டமைப்பு செய்யப்பட்டது. மூத்த தலைவர்களெல்லாம் ஓரம் கட்டப்பட்டு அவரே பா.ஜ.க-வின் தனிப்பெரும் தலைவராக முன்னிறுத்தப்பட்டார். ஆங்கிலத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அவரைக் குறித்தும், தமிழ்நாட்டு பா.ஜ.க வளர்ச்சி குறித்தும் எழுதப்பட்டன. திராவிடக் கோட்டையை தகர்க்குமா பா.ஜ.க என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள், கணிப்புகள்.
அதற்கேற்றாற்போல பிரதமர் நரேந்திர மோடியும் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே தமிழ்நாட்டுப் பயணங்களைத் தொடங்கினார். தி.மு.க ஆட்சி முடிவுக்கு வரும் என்றார். மேடையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப் படங்களை வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அ.இ.அ.தி.மு.க வாக்குகளை கவர்வது மட்டுமே அவரது நோக்கம். ஏழெட்டு முறை தமிழ்நாட்டுக்கு வந்தார் பிரதமர்.
இந்த ஆரவாரங்களை அனைத்தையும் அபத்தமாக்கினார் முதல்வர் ஸ்டாலின். சாதாரண வெற்றியல்ல. கிட்டத்தட்ட ஐம்பது சதவிகித வாக்குகளை அள்ளிய வெற்றி. எதிர்த்து நின்ற அ.இ.அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய மும்முனை வாக்குகளையும் கூட்டினாலும் இந்தியா கூட்டணியின் மொத்த வாக்குகளைவிட குறைவுதான் என்னும்படியான பேரலை வெற்றி. ‘கிளீன் ஸ்வீப்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
தமிழ்நாடு பெரியார் மண்தான். ஆனால் உழுது, பயிரிட்டு, களையெடுத்து, உரம்போட்டு பாடுபட்டால்தான் அறுவடை செய்ய முடியும். அதனால்தான் முதிர்ந்த அகவையிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார் ஆசிரியர் வீரமணி.
இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் முற்போக்குக் கருத்தியலை முன்னெடுத்தார்கள். நெடுஞ்சாலையில் வண்டியை நிறுத்தி எதிர்சாரியிலுள்ள கடைக்குச் சென்று ‘அண்ணன்’ ஸ்டாலினுக்கு இனிப்பு வாங்கிய ராகுல், தமிழர்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டார். இப்படி இந்தியா கூட்டணியின் தலைவர்களின் ஒருங்கிணைப்பு ஆத்மார்த்தமாக இருந்தது. அதனால்தான் பா.ஜ.க மாய்மாலங்கள் எதுவும் எடுபடவில்லை.
பாரதீய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்டதா?
தங்கள் கற்பனை கைகூடாததை ஊடகங்களாலும், அரைவேக்காட்டு அரசியல் கருத்தாளர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் எப்படி எப்படியோ கணக்குப் போட்டு பா.ஜ.க வளர்ந்துவிட்டது; வாக்கு சதவிகிதம் அதிகரித்து விட்டது என்று மீசையில் படிந்த மண்ணை துடைத்துக்கொள்கிறார்கள். இது உண்மையா என்பதை ஆராய வேண்டும்.
பா.ஜ.க கூட்டணி என்பது அ.இ.அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ், தினகரன் தலைமையிலான பிரிவுகள், பா.ம.க, த.மா.கா, பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் என பலரையும் உள்ளடக்கியது. இது கிட்டத்தட்ட எண்பது லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. பதினெட்டு சதவிகிதம். ஆனால், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
பத்தாண்டுகளுக்கு முன் பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க என இதேபோல மூன்றாவது அணியாக ஒரு கூட்டணி அமைத்தது அப்போதும் பதினெட்டு சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஆனால், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும், தர்மபுரியில் அன்புமணி ராமதாஸும் வென்றார்கள். அந்த இரண்டு செல்வாக்கு மிக்க தொகுதிகளையும் பா.ஜ.க, பா.ம.க இந்த முறை இழந்துள்ளது. பிறகென்ன வளர்ச்சியைச் சாதித்துள்ளது அண்ணாமலை பா.ஜ.க?
அந்த 2014 தேர்தலுக்கு முன்னும் பா.ஜ.க சில தொகுதிகளை வென்றுள்ளது. அ.இ.அ.தி.மு.க-வுடன் சேர்ந்து 1998-ம் ஆண்டு மூன்று தொகுதிகளிலும், 1999-ம் ஆண்டு தி.மு.க-வுடன் சேர்ந்து நான்கு தொகுதிகளிலும் வென்றுள்ளார்கள். அதன் பின் 2014-ல் மூன்றாவது அணியாகவும் கன்னியாகுமரி தொகுதியில் வென்றார்கள். ஆனால், இந்த முறை இத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்தும், மோடி கியாரண்டி விளம்பரங்களைச் செய்தும், அந்த கன்னியாகுமரி தொகுதியைக் கூட அதே பொன்.ராதாகிருஷ்ணனால் வெல்ல முடியவில்லை.
நாற்பது தொகுதிகளில் மொத்தம் 13 தொகுதிகளில்தான் அ.இ.அ.தி.மு.க அணி, பா.ஜ.க அணி ஆகியவற்றின் கூட்டுத்தொகை இந்தியா அணி கூட்டுத்தொகையை விட அதிகமாக உள்ளது. அந்த 13 தொகுதிகள் பாமக செல்வாக்குள்ள தொகுதிகள், தெற்கே ஓ.பி.எஸ்/தினகரன் அ.இ.அ.தி.மு.க பிரிவுகள் செல்வாக்காயுள்ள தொகுதிகள் மற்றும் அண்ணாமலை, முருகன், தமிழிசை போன்றோர் நின்ற தொகுதிகள். கோவை, நீலகிரி தொகுதிகளை பா.ஜ.க 1998, 1999 ஆண்டுகளில் வென்றுள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் விரிவாக கணக்கில் கொண்டால் பா.ஜ.க வாக்கு சதவிகிதம் அதிகரித்ததாகக் கூற எந்த அடிப்படையும் கிடையாது. மாறாக நான்கு தொகுதிகளில் பா.ஜ.க அணி நாம் தமிழர் கட்சியைவிட குறைவான வாக்குகளைப் பெற்று நான்காமிடத்திற்கு வந்துள்ளது. அந்த தொகுதிகளில் ஒன்று ரங்கராஜன் குமாரமங்கலம் பா.ஜ.க வேட்பாளராக 1999-ல் வென்ற திருச்சி தொகுதி.
ஓ.பி.எஸ், தினகரன் ஆகியோரை அ.இ.அ.தி.மு.க பிரிவுகளாக கருத முடியுமா என்று ஒருவர் கேட்கலாம். கட்சி அணியினர் எடப்பாடி பழனிசாமி பக்கம் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், வாக்காளர்கள் அனைவரும் அவருக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கருத முடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காத வாக்காளர்களும் இருப்பார்கள். தென் மாவட்டங்களில் வாக்காளர் மத்தியில் தீவிர எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பாளர்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் சென்னையிலும், கோவையிலும் கூட ஒரு சில சதவிகிதம் இருக்கலாம் என்பதை மறுக்க முடியாது.
தேர்தல் கள கட்டமைப்பும், வாக்கு வங்கி என்ற கருத்தாக்கமும்
ஒரு கட்சி பெறும் வாக்குகள் அனைத்தும் வாக்கு வங்கியல்ல. வாக்கு வங்கி என்பது என்ன பிரச்சினையானாலும் சரி… நான் காங்கிரஸிற்குத்தான் வாக்களிப்பேன், தி.மு.க-விற்குத்தான் வாக்களிப்பேன், இரட்டை இலைக்குத்தான் வாக்களிப்பேன் என்று இருப்பவர்கள்தான் வாக்கு வங்கி. இவர்கள் எத்தனை சதவிகிதம் என்று யூகிப்பது கடினம்.
ராஜீவ் காந்தி அனுதாப அலை வீசிய 1991 தேர்தலில் தி.மு.க பெற்ற வாக்குகளை அதன் வங்கி என்று நினைக்கலாம். அதே போல ஜெயலலிதா எதிர்ப்பு அலை வீசிய 1996 தேர்தலில் அ.இ.அ.தி.மு.க பெற்ற வாக்குகளை அதன் வங்கி என நினைக்கலாம். அந்த வங்கிகள் கூட இந்த முப்பதாண்டுக் காலத்தில் பலவிதமாக மாறியிருக்கும். இந்த இரண்டு கட்சிகளின் வலு என்பது மிக விரிவான கட்சி கட்டமைப்புகள்தான். அந்தக் கட்டமைப்பின் மூலம் சுலபமாக வாக்காளர்களைச் சென்றடைய முடியும்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் அவர்கள் குறிப்பாக ஆதரிக்கும் கட்சிக்கு அடித்தளம் இருக்கும். பா.ம.க வன்னியர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் ஓரளவு அடித்தளம் கொண்டுள்ளது எனலாம். தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஆதரவு அ.இ.அ.தி.மு.க-விற்கு கணிசமாக இருந்தது. அந்த ஆதரவுத்தளம் எடிப்பாடி பழனிசாமிக்கு நகர்ந்துள்ளதா என்பது கேள்விக்குறிதான். கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் முப்பதாண்டுகளாக தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். அவருக்கென அந்த தொகுதியில் ஆதரவு தளம் உருவாகியுள்ளதாகக் கருதலாம்.
ஆனால் வாக்கு வங்கி, சமூக ஆதரவுத்தளம் போன்றவை மட்டும் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு சில பிரச்சினைகள் தேர்தல் களத்தை கட்டமைக்கின்றன. ஊடகங்களின் பரவல் அதிகரிக்கும்போது இதுபோன்ற பொதுவான பிரச்சினைகள் அதிக தாக்கத்தை செலுத்துகின்றன. ஆங்கிலத்தில் இதை நேரேடிவ் என்று கூறுகிறார்கள். மாநிலத்துக்கு மாநிலம், தொகுதிக்குத் தொகுதி அதன் தாக்கங்கள் வேறுபட்டாலும் பொதுவான கேள்விகள், பிரச்சினைகள் ஒரு தேர்தல் களத்தை கட்டமைக்கின்றன எனலாம்.
உதாரணமாக 1984 நாடாளுமன்றத் தேர்தல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு நடந்தது. அந்த அனுதாப அலையில் ராஜீவ் காந்தி தலைமையில் பெரும் வெற்றி பெற்றது காங்கிரஸ். ஆனால், அதற்கு அடுத்த 1989 தேர்தலில் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் என்று மிகப் பெரிய பிரச்சினையை ஊடகங்கள் கட்டமைத்ததில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
மன்மோகன் சிங் ஆட்சியின் மீது கட்டமைக்கப்பட்ட அதிருப்தி, ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வளர்ச்சி அரசியல் பேசி ஆட்சிக்கு வந்த மோடி, அதற்கு அடுத்த 2019 தேர்தலில் புல்வாமா தாக்குதல், பதிலடியாக பாகிஸ்தான் மீது பாலாகோட் சர்ஜிகல் ஸ்டிரைக் என்று தேசபக்தி அலையை உருவாக்கி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
ஆனால், இந்த முறை மோடியின் பிம்பத்தையே மையப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர நினைத்தது பா.ஜ.க. தனி மனித பிம்பத்தை மையப்படுத்திய பாசிச கலாசாரத்தை முழுமையாக உருவாக்க நினைத்தது. மோடி அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டாவை அவரே முன்னின்று செய்தார். அதற்கு முன் ராமேஸ்வரம் வந்து மங்கல நீராடினார். அந்தக் கோயிலின் மூலம் ராமர் வழிபாடு என்பதைவிட, மோடி வழிபாடு அதிகரிக்க வேண்டுமென நினைத்தார்.
ஜெர்மனியின் ஹிட்லர் ஆயிரமாண்டு ஆட்சி குறித்து பேசியதைப் போல ஆயிரம் ஆண்டு ஆட்சி குறித்து பேசினார் மோடி. தேர்தலில் பா.ஜ.க கியாரண்டி என்று கூறாமல் மோடியின் கியாரண்டி என்று விளம்பரம் செய்தார். தான் சாதாரண மனிதப் பிறவி அல்ல என்றார்.
தமிழ்நாடு சென்ற முறை பாகிஸ்தான் எதிர்ப்பு தேசபக்தி அலையில் மூழ்கவில்லை. மாறாக திராவிட சமூக நீதி அரசியலுக்குத் திரும்பியது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் சில தொழில்நுட்பங்களைக் கையாண்டு தன் மகனை மட்டும் தேனியில் வெற்றி பெறச் செய்தார். எதிர்த்து நின்ற காங்கிரஸ் இளங்கோவன் வெளியூர்க்காரர் என்பதும் உதவி செய்தது. ஆனால், இந்த முறை மோடி தனி நபர் பிம்ப பிரச்சாரத்தை தமிழ்நாடு முழு முற்றாக நிராகரித்துள்ளது. ஒற்றைத் தொகுதி கூட மோடி பிம்பத்தில் சிக்கவில்லை.
கூட்டாட்சி தத்துவத்தின் கோட்டையாக, திராவிட தமிழ் அடையாளத்தின் திரட்சியாக, சமூக நீதி விளைநிலமாக தமிழ்நாடு தனித்துவத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முஸ்லீம்களை எதிரியாக்காமல் இந்து அடையாளத்தை உருவாக்க முடியுமா?
அரசாட்சியும், தேர்தலும்: விரைந்து சிதையும் மக்களாட்சி விழுமியங்கள்
நாடாளுமன்றத்திற்குத் தேர்தல்! அது நடப்பதோ மாநில அரசியல் களங்களில்தான்!
ஹெல்த் டிப்ஸ்: தொடர் தும்மல்… நிறுத்துவது எப்படி?
பியூட்டி டிப்ஸ்: இளவயதில் கருவளையங்கள்… எளிமையான தீர்வு உண்டா?
கிச்சன் கீர்த்தனா: வெஜ் ரோல் சப்பாத்தி!
எல்லா வாக்காளர்களுக்கும் காசு கொடுத்து திமுக ஓட்டு வாங்கியது இந்த பதிவு போட்டவருக்கு தெரியவே தெரியாதா