பாஸ்கர் செல்வராஜ்
அம்பேத்கர் போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு என்னும் நிர்வாகத்தில் பங்கு ஒரு உற்பத்தி காரணி. இந்த உற்பத்தி உரிமையை நிலைநாட்டும் அரசியல் அதிகாரம் இன்றி ஒடுக்கப்பட்ட மக்கள் இந்தியா முழுக்க அதை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது. ஒன்றிய அரசியல் பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்திவரும் மூவர்ணம் இம்மக்களுக்கு கல்வியறிவை மறுத்து குடத்தில் இட்ட விளக்காக இந்திய வளர்ச்சியை தங்களுக்குள் குன்றிப்போக வைக்கிறார்கள்.
தமிழகத்தில் பார்ப்பனிய எதிர்ப்பின் மூலம் அரசியலதிகாரத்துக்கு வரும் திராவிட அரசியல் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி அம்பேத்கர் பெற்ற உரிமையை இங்கே நிலைநாட்டுகிறது. அதன்மூலம் நிலத்தோடு மற்ற உற்பத்திக் காரணிகளான மனிதவளம், நிர்வாகத்தைத் தமிழகம் அடைகிறது.
தொண்ணூறில் வரும் உலகமயம் அதுவரையிலும் ஒன்றியத்தினால் அடைகாக்கப்பட்டு தமிழகத்துக்குக் கிடைக்கப் பெறாமல் செய்யப்பட்ட மூலதனம் தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்குகிறது. இதனால் தமிழகம் வேகமாக தொழில்மயமாக்கத்தை அடைகிறது.
தொழில்மயமான தமிழகமும் பெருகாத நடுத்தர வர்க்கமும்
இப்படி, தொழில்மயமான தமிழகத்தில் தொழிலாளர்களின் நிலை மற்ற மாநில சூழலில் இருந்து மாறுபட்டது என்று சொல்லும் சூழல் நிலவுகிறதா என்று கேட்டால்… ஆம் என்று பதில் சொல்லும் துணிச்சல் நேர்மையான வர எவருக்கும் வராது. இந்தியாவில் வாங்கும் திறனுள்ள நடுத்தர வர்க்கத்தின் அளவு சுமார் 10 கோடி; சீனாவில் 50 கோடி.
இந்தியாவில் தொழிலாளர் உரிமைகளுடன் கூடிய முறையான தொழிலாளர்களின் (Formal workers) எண்ணிக்கை 3.18 கோடி. இந்த மாதம் 25,000 ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கொண்ட பத்து விழுக்காட்டில், 3.18 கோடி முறையான வேலையில், 10 கோடி நடுத்தர வர்க்கத்தில் தமிழகத்தின் பங்கு என்ன? 8 கோடி தமிழர்களில் இது எத்தனை விழுக்காடு என்று சிந்தித்தால் இதன் உண்மை விளங்கும். பொதுவாக புள்ளிவிவரங்களைக் கொண்டு தமிழகத்தின் மேன்மையை பேசும் நாம் இது குறித்தெல்லாம் வாய் திறப்பதேயில்லை.
பல புள்ளிவிவரங்கள் வழியாக நாம் நிறுவுவது தமிழகத்தில் கடும் வறுமையை (Extreme poverty) ஒழித்திருக்கிறோம், கல்வியைப் பரவலாக்கி இருக்கிறோம், உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மனிதனின் அடிப்படையான உரிமைகளை அனைவருக்கும் சாத்தியப்படுத்தி இருக்கிறோம் என்பதுதான். இந்த சாதிய சமூகத்தில் இதை எல்லாம் எட்டுவது அவ்வளவு எளிதல்ல. அந்த வகையில் இது மாபெரும் சாதனை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
ஆனால் பொருளாதார உடலில் காலும் தலையும் சிறப்பாக இருக்கிறது எனப் பெருமையாகப் பேசிவிட்டு வயிறு சுருங்கி விலா எலும்புகள் தெரிய உடல் சிறுத்திருப்பது குறித்துப் பேசாமல் தவிர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும். அது நோய்வாய்ப்பட்ட உடலை மேலும் நொடிந்து போகத்தானே செய்யும்.
தொடர்ந்து தாராளமய பாதையில் தமிழகம்
ஒன்றியம் அரச வேலைகளை ஒழித்துக் கட்டுகிறது என்றால் இதுவரையிலான திராவிட அரசியலும் அதைத்தான் செய்து வந்திருக்கிறது. ஏன் இப்போதைய திமுக அரசும் தாராளமயமாக்க கொள்கையின் அடிப்படையில் அரசு வேலைகளை தனியார் மயமாக்குவதைத்தான் செய்கிறது. அதன்மூலம் தனது செலவினங்களை ஒன்றியத்தைப் போலவே குறைக்க நினைக்கிறது. ஒன்றியமும் அதற்கு கேடயம் வழங்கி இந்த அரசை பாராட்டுகிறது.
ஆனால் எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிவிட்டு இட ஒதுக்கீட்டை அரசு எங்கு போய் செயல்படுத்தப் போகிறது என தலைமைச் செயலகச் சங்கம் கேட்கிறது. தனியாரிடம் கொடுப்பதற்கு அரசு சொல்லும் இரு காரணங்கள்…
1. அரசு ஊழியர்களின் திறன் குறைவு, 2. அரசின் வருவாயில் 92 விழுக்காடு அரசு ஊழியர்களுக்கே சென்றுவிடுகிறது. நீங்கள் வைக்கும் தேர்வுகளில் அத்தனை ஆயிரம் பேரில் சிறப்பாக செயல்பட்டவர்கள்தானே அரசு வேலையில் சேருகிறார்கள். மாறும் சூழலுக்கு ஏற்ப அவர்களுக்கு தகுந்த பயிற்சியும் அதில் கற்று தேர்பவர்களுக்கு பதவி, ஊதிய உயர்வு கொடுத்து ஊக்குவிப்பதும் இனிவரும் காலங்களில் இந்தத் திறனையும் சேர்த்து தேர்வுகளை நடத்துவதும்தானே முறை. அதற்கு பதிலாக வேலையை தனியாரிடம் கொடுப்பது எப்படிச் சரியாகும்?
அந்நிய நிதிமூலதனத்தைக் கொண்டு சாதித்தது என்ன?
அரசு ஊழியர்களுக்கு அவ்வளவு கொடுக்கிறோம் என்பதைவிட இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருந்தும் தமிழகத்தின் செல்வமும் அரசின் வருமானமும் அவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதுதானே உண்மை. அதற்கு தீர்வு அரசு வேலைகளை ஒழிப்பதா? இல்லை… செல்வத்தையும் வருமானத்தையும் பெருக்குவதா? அதோடு அரசு ஏதோ ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுப்பதாக நினைக்கிறது.
ஆனால், ஒரு சராசரி நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு உயரும் விலைவாசிக்கு ஏற்ப பொருட்களை வாங்கி நுகரத்தான் ஊதியத்தைக் கொடுக்கிறது. இந்த வேலைகளையும் ஒழித்துக்கட்டி வாங்கும் திறனற்ற வர்க்கத்தைப் பெருக்கி யாருக்கான அளிப்புக்கு உற்பத்தியைப் பெருக்கப் போகிறீர்கள்? வாங்கும் திறனுள்ள மேற்குலக ஏற்றுமதிக்கா? வேலைவாய்ப்பைப் பெருக்க அந்நிய முதலீட்டை ஈர்த்திருக்கிறோம் எனக் கூறுவதன் மூலம் ஆம் என்றே அரசு பதில் சொல்கிறது. அங்கும் மக்களின் வாங்கும் ஆற்றல் குறைந்து ஏற்றுமதி சரிந்து கொண்டிருக்கிறதே!
அதையும்மீறி இப்படி அரசு கொண்டுவருவது எந்தவிதமான வேலைவாய்ப்பு? 10,000-15,000 ரூபாய் வருமானம் தரும் ஒப்பந்தத் தொழிலாளர் வாய்ப்பு. இதுவரையிலான இந்த அவர்களது நிதிமூலதனத்தையும் தொழில்நுட்பத்தையும் நம்முடைய நிலம், மனிதவளம், நிர்வாகத்தையும் கொண்டு அவர்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது அதன்மூலம் நாமும் பலனடைவது என்ற ஏற்றுமதி பொருளாதார ஏற்பாட்டில் நாம் சாதித்திருப்பது இந்த வேலைவாய்ப்புகள்தான்.
இல்லையில்லை… நாம் தொழில்மயமாகி நகரமயமாக்கம் நடந்து வளர்ந்த நாடுகளைப்போல உற்பத்தியில் (GSDP) விவசாயத்தின் பங்கு 12.9 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது என சிலர் வாதிடலாம். தொழில்மயமான வளர்ந்த நாடுகளில் எல்லாம் உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு மட்டும் குறையவில்லை. அதில் ஈடுபடும் தொழிலாளர்களின் அளவும் 5-8 விழுக்காடாகக் குறைந்திருக்கும்போது தமிழகத்தில் அது இன்னும் அதிகமாக இருப்பது ஏன்?
உற்பத்தியில் தொழிற்துறை வளர்ச்சியா? விவசாயத்தின் வீழ்ச்சியா?
அங்கெல்லாம் விவசாய உற்பத்தி இயந்திரமயமாகி அந்தப் பொருட்களின் உற்பத்தி பெருகியிருக்கிறது. அதில் ஈடுபடும் தொழிலாளர்களின் அளவு குறைந்திருக்கிறது. மனிதனின் உழைப்பு எவ்வளவு குறைகிறதோ அந்த அளவு அந்தப் பொருட்களின் மதிப்பு வீழும் என்பது மார்க்சின் மதிப்புவிதி. இப்படி மதிப்பு குறைந்த பொருட்களைப் பெரும்பான்மை நுகர்வது அதிகரிக்கும்.
அதுவல்லாத பகுதிகளில் அதன் விலைகள் உயர்வாகவே இருக்கும். தமிழகத்தில் இன்றும் உணவுப் பொருட்கள் விலைவாசி உயர்வில் முக்கிய பங்கு வகிப்பதும் நமது குழந்தைகளும் பெண்களும் ஊட்டச்சத்தின்றி இருப்பதும் மார்க்சின் இந்த விதிக்கு முரணாக இல்லையே! அப்படி என்றால் நமது உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு குறைவாக இருப்பது அதில் ஈடுபடும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைவைக் காட்டுகிறதே ஒழிய தொழிற்துறை, சேவைத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி அல்ல என்றாகிறதே!
இதை விவசாய வளர்ச்சியைப் புறக்கணித்து தொழிற்துறை வளர்ச்சியை ஊக்குவித்ததால் அதன் பங்கு அதிகரித்திருக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வடக்கின் தொழிலாளர்கள் இங்கு வேலை தேடிப் படையெடுப்பது அங்கு தொழில்மயமாக்க பொருளாதார வளர்ச்சிக் குறைவைக் காட்டுகிறது என்றால் நம்மவர்கள் மேற்கு ஆசிய நாடுகளுக்குப் படையெடுப்பது இங்கு நாம் சாதித்திருக்கும் தொழிற்துறை வளர்ச்சி முழுமையானது அல்ல என்பதைத்தானே காட்டுகிறது.
இந்த அரைகுறை தொழில்மயமாக்கத்தினால் உருவாக்கப்படும் செல்வமும் நம்முடன் தங்குகிறதா என்றால் அதுவும் இல்லை. ஒன்றிய பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியமும் உலக முதலாளித்துவ ஏகாதிபத்தியமும் எரிபொருள் விலையை உயர்த்தியும் ரூபாயின் மதிப்பை கு(லை)றைத்தும் எளிதாக அதைக் கறந்து சென்று விடுகிறார்கள். அதன் விலைவாசியைக் கட்டுப்படுத்தி இந்த சுரண்டலைத் தடுக்க நம்மிடம் எந்த வழிவகையும் இல்லை.
அந்நிய மூலதனம் கொண்டுவரும் சமூக பிரச்சினைகள்
இந்த மூலதன தொழில்நுட்பம் அவர்களுடையது, மற்றது நம்முடையது என்ற ஏற்பாட்டில் பொருட்களின் விலைகளை உற்பத்தி செய்யும் நாம் தீர்மானிக்காமல் அவர்களே தீர்மானிக்கிறார்கள். அதுவும் உலகப்பொது டாலரில். ஆனால், கூலி மட்டும் உள்நாட்டு ரூபாயில். பொருட்களின் விலையை உயர்த்தி ரூபாயின் மதிப்பை அதன் வாங்கும்திறனை குறைத்து உற்பத்தியின் மூலம் உருவாகும் உபரியை மட்டுமல்ல… அடிப்படை ஊதியத்தையும் சேர்த்தே கறந்து சென்று விடுகிறார்கள்.
அது இங்கு மூலதனம் திரளாமலும் நடுத்தர வர்க்கம் பெருகாமலும் தடுத்து, மக்களை வாங்க வக்கற்றவர்களாக மாற்றி சமூகம் முன்னேறாமல் தேங்கி நிற்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம். சமூகம் முன்னேறுவது இருக்கட்டும்… குடும்பங்கள் இந்த வருமானத்தைக் கொண்டு தமது குழந்தைகளுக்கு சத்தான உணவைக்கூட கொடுக்க முடியவில்லையே! சத்துக் குறைவான குழந்தைகளையும் பெண்களையும் கொண்ட இந்தியச் சூழலில் இருந்து தமிழகம் பெரிதாக வேறுபடவில்லையே!
இவை எல்லாம் தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தையும் சேர்த்து நிதிமூலதனம் உறிஞ்சுவதால் அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கை கொடுக்காமல் மறுப்பதால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகள்.
இப்படி உழைப்பாளர்களை உறிஞ்சுவதால் உழைத்துக் களைத்த அவர்கள் ஓய்வின் மூலம் தங்களை மீட்டுருவாக்கம் செய்துகொள்ளவும், உழைத்து ஓடாய் தேய்ந்து விட்டில்பூச்சிகளைப்போல வீழ்ந்து மடிபவர்களை மாற்றீடு செய்ய மனிதர்களை உற்பத்தி செய்யும் திறனையும் இழந்து விடுகிறார்கள்.
அது குழந்தை பிறப்பு விகிதத்தைக் குறைத்து அந்த சமூகத்தின் பிரச்சினையாக (Demographic problem) மாறிக்கொண்டிருக்கிறது. உடனே அதற்கு இது காரணமல்ல என்றுகூறி எண்ணற்ற காரணங்களை அடுக்குவார்கள் அறிஞர் பெருமக்கள். உழைப்பாளரின் ஊதியம் முன்பைவிட எவ்வளவு உயர்ந்திருக்கிறது பார் என்று பட்டியலை நீட்டுவார்கள்.
குறைகூலியும் மக்கள் இனங்கள் அருகிப்போவதும்
அந்தப் பணத்தின் வாங்கும் ஆற்றலைப் பேசுவதற்கு முன்னர் இந்த ஊதியம் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்று சிந்திப்போம். சந்தையில் ஓர் ஊழியரின் தேவையையும் அவரின் திறனையும் பொறுத்து அவரின் வருமானம் கூடும்; குறையும் என்பதுதான் தாராளமயவாதிகளின் வாதம்.
ஆனால், ஒரு சமூகத்தில் வாழும் தொழிலாளரின் கூலி அந்தச் சமூகத்தின் வரலாற்று வளர்ச்சியைப் பொறுத்தது என்கிறார் மார்க்ஸ். வரலாற்று வளர்ச்சிக்கேற்ப அந்தச் சமூகத்தின் உழைப்பும் உற்பத்தித்திறனும் பெருகும். அதற்கேற்ப அவர்களின் ஊதியமும் தேவையும் பெருகும் என்பது அவரின் வாதம். எது சரி? ஒருவேளை உழைப்புத்திறனும் அதற்கேற்ற தேவையும் பெருகி அதற்கு ஏற்ற ஊதியத்தைத் தர மறுத்தால் என்ன நடக்கும்?
ஜப்பான், தென்கொரியா, தைவானில் என்ன நடக்கிறதோ அதுதான் நடக்கும். இந்தப் பகுதிகள் எல்லாம் மனிதவளத்தைப் பெருக்கி ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் மூலதனத் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வளர்ந்த நாடுகளாக மாறியவை. இங்கெல்லாம் உலகிலேயே குறைவான குழந்தை பிறப்பு விகிதமும் அதிகமான தற்கொலைகளும் இருக்கின்றனவே ஏன்? உலகின் வளர்ந்த நாடுகளில் எல்லாம் இல்லாத இந்தப் பிரச்சினைகள் இங்கு மட்டும் நிலவுவதை எப்படிப் புரிந்துகொள்வது?,
அந்நிய நிதிமூலதன சுரண்டலுக்கு ஆட்பட்ட சமூகங்கள் அருகிக்கொண்டிருப்பதற்கு அறிஞர் பெருமக்கள் என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்? இவர்களைப் பின்பற்றி ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் இப்படியான சமூக மாற்றத்தைத்தான் நாம் சாதிக்கப் போகிறோமா? இந்த ஏகாதிபத்திய காலகட்டத்தில் மூலதனத்தைக் கைப்பற்றி கட்டுப்படுத்தாமல் போனால்… அதற்கான போராட்டமின்றிப் போனால்… அந்த சமூகமே அருகிபோய் விடும் என்ற பாடத்தை இவர்களிடம் கற்காமல் இதே திசையில் கண்ணை மூடிக்கொண்டு பயணிக்கப் போகிறோமா?
மூலதன உற்பத்திக் காரணியைக் கைப்பற்றுவதே தீர்வு
இல்லை, உற்பத்திக் காரணிகளான நிலம், மனிதவளம், நிர்வாகத்தோடு தொழில்நுட்ப செய்கையறிந்து (Know-how) அதைக் கைக்கொள்வதோடு மூலதனத்தையும் கைப்பற்றி கட்டுப்படுத்துவதை நோக்கி நாம் நகரப் போகிறோமா? அதற்கான திசையில் நாம் பயணிக்க ஏதுவாக உலக மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒன்றிய பார்ப்பனியமும் அதை உள்வாங்கி தனது பாதையை மாற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. டாலர்மைய ஒழுங்கில் இருந்து விலகி ரூபாய் வர்த்தகத்துக்கு மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதை மூவர்ணத்துக்கு ஏற்ற வகையில் நகர்த்திக் கொண்டிருக்கிறது. நாம் நமது மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இதைப் பயன்படுத்த முனைய வேண்டும்.
கடந்த காலத்தில் தவறவிட்ட மூலதன உற்பத்திக் காரணியை கைக்கொள்வதை நோக்கி நகர வேண்டும். அதன்மூலம் ஒன்றிய மூவர்ணத்திடமும் அந்நிய நிதிமூலதனத்திடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்ய வேண்டும். ரூபாய் மூலதன-நிதியை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சமூக மாற்றத்தைச் சாதிப்பதில் குறியாக இருக்க வேண்டும்.
போராடி கைப்பற்ற முயலாத அரசு
ஆனால், இதற்கு நேர்மாறாக, ஒன்றியமே இந்த தாராளமய கட்டமைப்பை தளர்த்திக் கொண்டிருக்கும்போது, தமிழக அரசு இம்மியளவும் பிசகாமல் தாராளமயப் பாதையில் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்றுமதி பொருளாதாரத்தையே இலக்காகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வரவு செலவைக் கட்டுப்படுத்திக் கொண்டே சில மக்கள்நல திட்டங்களையும் செயல்படுத்துவதில் மனநிறைவு கொள்கிறது. எல்லா துறைகளிலும் தனியார் முதலீட்டை ஊக்குவித்து அரசு முதலிடுவதில் இருந்து தள்ளியே நிற்கிறது.
ஒரு வருடத்துக்கு முன்பு பரிவர்த்தனை வங்கியைத் தொடங்க விண்ணப்பிக்கப் போவதாக அரசு அறிவித்தது. அதன்பிறகு அதுகுறித்த எந்த தகவலும் இல்லை. நமது மக்களின் சொத்தான கோயில் நகைகளை அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கியில் கொண்டுபோய் சேமிக்கிறது. அவர்களின் நலனுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் அஞ்சலக சேமிப்பில் அனைவரும் சேமியுங்கள் என்று முதல்வரே முகவராய் இருந்து உலக சேமிப்பு நாளில் தமிழர்களை ஊக்கப்படுத்துகிறார்.
நமது மக்களின் சொத்தையும் சேமிப்பையும் நம்மைவிட அவர்கள் சிறப்பாகக் கையாண்டு செழிப்புறச் செய்வார்கள் என்று இந்த அரசு கருதுகிறதா? இல்லை… அவர்களைப்போல இவற்றை நிர்வகிக்கும் திறன் நம்மிடம் இல்லை என மறைமுகமாக அரசு ஒப்புக்கொள்கிறதா?
உண்மை தெரிய வேண்டுமா? வீட்டுக்கு வாருங்கள்
இந்த இடதுசாரி வாதங்கள் எல்லாம் அரசுக்கு ஒப்புமையற்றதாக இருக்கலாம். அரசுக்கு ஆலோசனை சொல்லும் வலதுசாரி அறிஞர்களும் நிபுணர்களும் ஆக்கபூர்வமான திசையில்கூட அரசை செலுத்தலாம். இந்த வாத பிரதிவாதங்களை எல்லாம் புறம்தள்ளி உண்மையில் அரசின் இந்த பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் வாழ்வில் எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று முதல்வர் அறிய விரும்பினால் ஒருநாள் தினக்கூலி தொழிலாளர்களின் வீட்டுக்கு வாருங்கள். தட்டு முழுக்க நிரம்பியிருக்கும் சோற்றில் அவ்வீடுகளில் இருக்கும் அம்மாக்கள் ஊற்றும் இருகரண்டி குழம்பில் எத்தனை காய்கறிகள், பயிறுகள் விழுகிறது என்று பாருங்கள். தமிழகக் குழந்தைகளின் உடல் ஏன் இப்படி ஊட்டச்சத்தின்றி இருக்கிறது என்பதை நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.
உண்மை தெரிந்து தெளிவீர்கள்
ஏன் இவ்வளவு குறைவான காய்கறிகள் என்று அவர்களிடம் வினவுங்கள். எங்களின் வருமானத்தில் இவ்வளவுதான் வாங்கமுடிகிறது என்று கூறி தங்களது இயலாமையை நினைத்து தலைகுனிவார்கள். முன்பு தனது இருபது ரூபாய் வருமானத்தில் வாங்கிய காய்கறிகளைக்கூட தனது மகன்/ள் வருமானத்தில் வரும் இருநூறு ரூபாயில் வாங்க முடிவதில்லை; அப்போது உணவுக்கான அனைத்து இடுபொருட்களையும் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை; இன்று காசின்றி தண்ணீர்கூட கிடைப்பதில்லை என அங்கு இருக்கும் பாட்டிகளின் அனுபவக் கூற்றுகள் இந்த ஒரு தலைமுறைகால மாற்றத்தை உங்களுக்கு எடுத்துரைக்கும். அந்த எளிய அனுபவமொழி இந்த கடினமான இந்த பொருளாதாரக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லும்.
எங்கள் வீடுகளின் உணவு குறித்து கேட்கிறீர்கள்; ஆனால் நீங்கள் போடும் உப்புமா, கிச்சடி கூட எங்கள் அம்மா போடும் கலோரிகள் நிறைந்த காலை உணவு போலத்தான் இருக்கிறது என்று அங்கிருக்கும் துடுக்கான குழந்தைகள் உங்களை கேட்டுவிடலாம். ஏதோ தங்களின் பைகளில் இருந்து எடுத்துக் கொடுப்பதைப்போல உங்களிடம் அமைச்சர்களாக இருக்கும் பண்ணையார்களில் ஒருவர் இலவச குடிகளுக்கு இவ்வளவு திமிரா என்று கேட்டு அவமதிப்பதற்குள் அங்கிருக்கும் பெரியவர்கள் நமது வீட்டைப்போல நமது அரசும் வருமானமற்று கடனிலும் வறுமையிலும் உழல்கிறது; சூழலை புரிந்துகொண்டு கொடுப்பதைக் குறை சொல்லாமல் உண்டு, வளர்ந்து நம் நாட்டுக்கு நன்மை பயக்க வேண்டும் எனக் குழந்தைகளுக்கு அறிவுறுத்தலாம்.
போராட்டத்தில் இணைவோம்!
பொதுவாக தகப்பனிடத்தில் இருந்து குழந்தைகளிடம் பேசும் தாங்கள் என்ன செய்வது? எங்களால் இயன்றவரை செய்கிறோம். இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செய்கிறோம் என்று குழந்தைகளிடம் பொறுமையாகப் பதில் கூறலாம். எதுவுமே எங்கள் அதிகாரத்தின்கீழ் இல்லை; எதைச் செய்யவும் ஒன்றியம் எங்களை அனுமதிப்பதில்லை; இவற்றை எல்லாம் மாற்றத்தான் நமது சுயாட்சி உரிமைகளுக்காக போராடுகிறோம் எனப் பெரியவர்களைப் பார்த்து நீங்கள் சமாதனம் சொல்லலாம்.
இப்போதைக்கு உங்களின் சமாதானத்தை ஏற்று உங்கள் போராட்டத்தில் இணைந்து உங்கள் கரங்களை வலுப்படுத்துவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது? இது நடக்கும் வரையிலும் இந்த தாராளமயக் கொள்கையும் ஒப்பந்தத் தொழிலாளர் வாய்ப்பும்தான் என்பது தெளிவாக தெரிகிறது. அதற்கு ஏற்ப வரிவிலக்கு சலுகைகள் அளித்து அந்நிய முதலீட்டை ஈர்ப்பது என்பதும் நடைமுறை ஆகிவிட்டது. போகட்டும்…
இட ஒதுக்கீட்டை குறுக்கும்போது விரிவாக்குவதே மாற்று அரசியல்
இட ஒதுக்கீட்டை அவர்கள் இருக்கும் இட ஒதுக்கீட்டு வாய்ப்பைச் சுருக்கி அதையும் அவர்களின் மூவர்ணத்துக்குக் கொடுக்கிறார்கள். அதற்கு எதிரான சட்டப் போராட்டத்தோடு அந்த வாய்ப்புகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரிவாக்குவதுதானே அதற்கு எதிரான சரியான அரசியலாக இருக்க முடியும்.
விசிக, சிபிஐ கட்சிகள் இட ஒதுக்கீட்டைத் தனியாருக்கும் விரிவாக்க கோருகிறார்கள். அரசு அதுகுறித்து இதுவரையிலும் மௌனம் சாதிக்கிறது. தொழிற்துறை வளர்ச்சிக்கும் அந்நிய முதலீட்டை ஈர்க்கவும் அது தடையாக இருக்கும் என அரசு கருதுகிறதோ என்னவோ? அப்படி கருதினால் இப்போதைக்கு சட்டமாக்கக்கூட தேவையில்லை.
காலம் கனியும்போது பார்த்துக் கொள்ளலாம். இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால் இன்னும் 2-3 விழுக்காடு வரிச் சலுகை என்று அரசு அறிவிக்கலாமே! இந்த விருப்பத்தெரிவுக்கு முதலாளிகளிடம் இருந்து என்ன எதிர்ப்பு வந்துவிடப் போகிறது. ஒன்றியம் எந்தவிதத்தில் இதைத் தடுத்துவிடப் போகிறார்கள்.
இப்போது இருக்கும் வாய்ப்போடு ஒடுக்கப்பட்டவர்களுக்கு இன்னும் கூடுதல் வாய்ப்பு கிடைக்குமே! எத்தனையோ விஷயங்களில் தமிழகம் முன்முயற்சி எடுத்து இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறது. இந்த முயற்சியிலும் தமிழகமே முன்முயற்சி எடுத்து முன் நிற்கட்டுமே! இதை முதன்முறையாக முன்னெடுத்த முதலாமவர் என வரலாறு முதலமைச்சரை நினைவுகொள்ளுமே!
பின்குறிப்பு: முதல்வரை நோக்கி இப்படிப் பேசுவதை மரியாதை குறைவாக எண்ணினால் மன்னியுங்கள். நம் தந்தை பெரியார் எதையும் ஒளிவுமறைவு ஒப்பனையின்றி இப்படிப் பேசத்தான் பழக்கி இருக்கிறார். அவர் தந்த சுயமரியாதை அதிகாரத்திடம் கூனிக்குறுகி கூழைக்கும் பிடு போட்டு குழைந்து நின்று பேச அனுமதிப்பதில்லை.
நிறைவடைந்தது
சமூகநீதியற்ற அம்பேத்கரை ஏற்கும் காங்கிரஸும் சிபிஎம்மும் – பகுதி 1
‘உயர்’சாதிக்கான இட ஒதுக்கீடு மூவர்ண நிர்வாகத்தை நிலைநிறுத்தவே! – பகுதி 2:
கட்டுரையாளர் குறிப்பு
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
அருமையான கட்டுரை. மிக நல்ல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. அரசு இவற்றை ஏற்றால் நன்மை விளையும். எனக்கும் அரசு வலதுசாரியில் அதிகமாகச் செல்ல ஆரம்பித்துவிட்டதே என்ற மனக்குறை உண்டு. ஆனால் திராவிட மாடல் என்பது எப்போதும் இடதுசாரிதான். (சாரி=பக்கம்)
அருமையான கட்டுரை. 3 தொடர்களையும் படித்தேன். வள்ளுநர்கள் கூறும் புள்ளிவிவரத்தை ஆசிரியர் வேறு கோணத்திலிருந்து பார்த்து அதன் அபாயத்தை விளக்கி பயமூட்டுகிறார். பின்குறிப்பு சிறப்பு.
நெற்றிக்கன் திறப்பினும் குற்றம் குற்றமே.
புரியாத கட்டுரை…. Edit செய்திருக்கலாம்