தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது தொடர்பாக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 1) விளக்கமளித்தார்.
தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ரூ. 5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ வேல்முருகன் இன்று (ஏப்ரல் 1) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, “சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும் என்பதே அரசின் விருப்பமாக உள்ளது. பராமரிப்பு பணிகளுக்குக் கூட 40 சதவீதம் குறைவாகத்தான் வசூல் செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரியை சந்திக்கும் போதெல்லாம் சுங்கக் கட்டணத்தை நிறுத்த கோரிக்கை வைத்து வருகிறேன். 14 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஏற்கனவே இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் சுங்கக் கட்டணம் உயர்வு என ஒன்றிய அரசு கூறுகிறது.
எவ்வளவு தூரம் பயணிக்கிறோமோ அதற்கு ஏற்றால் போல் சுங்க கட்டணம் வசூலிக்கும் நடைமுறை வர உள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருக்கிறார்” என்று கூறினார்.
பிரியா
ஆருத்ரா கோல்டு மோசடி: ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை!
8 புதிய மாவட்டங்கள்: அமைச்சர் முக்கிய தகவல்!