மணிப்பூர் பெண்களுக்கு நடந்த அநீதிக்கு கண்டனம் தெரிவித்து இன்று (ஜூலை 22) தமிழக மாணவர், மகளிர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2 மாதத்திற்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் வன்முறையில் எரிந்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஜூலை 19ஆம் தேதி 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தசூழலில் மணிப்பூர் கொடூரத்தை கண்டித்தும் மணிப்பூரில் ஆட்சியில் உள்ள பாஜக அரசை நீக்க கோரியும் தமிழக மாணவர் காங்கிரஸ் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி தலைமையில் சென்னை சாஸ்திரி பவன் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவரும் மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எம்.பி. ரஞ்சன் குமார்,
சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவருமான எம்.எஸ்.திரவியம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று, மணிப்பூர் அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதுபோன்று தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் அண்ணா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சுதா ராமகிருஷ்ணன்.
“மணிப்பூர் இனக்கலவரத்தை திட்டமிட்டு நடத்தி வருபவர்கள் இரண்டு பேர். ஒருவர் மோடி, மற்றொருவர் அமித் ஷா. மணிப்பூரில் 80 நாட்களாக கலவரம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 60 கோடி பேர் பெண்கள்.
இந்த 60 கோடி பெண்களையும் அவமதிக்கும் வகையிலான ஒரு சம்பவம் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிறது” என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தின் போது, பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த அங்கிருந்த போலீசார், பிரதமரின் உருவபொம்மையை அங்கிருந்து அகற்றினர்.
இதேபோல் திருநெல்வேலியிலும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பெண்களை நிர்வாணமாக இழுத்து சென்ற விவகாரத்தில் கைதான குற்றவாளியின் உருவ பொம்மையை தூக்கிலிட்டும், பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மொட்டை அடித்துக்கொண்ட பெண்!
மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைக்கு எதிராக கோவா மாநிலம் பனாஜியில் கோவா பிரதேச இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, மணிப்பூர் சம்பவத்தால் வேதனையடைந்த பெண் ஆர்வலர் ஒருவர்எதிர்ப்பின் அடையாளமாக தலை முடியை மொட்டை அடித்துக்கொண்டார்.
மோனிஷா
கொரிய ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கம்…. அரை நிர்வாணமாக அடித்து செல்லப்பட்ட பெண்கள்!
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣