அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழகத்தில் பொது இடங்களில் நேரலையாக ஒளிபரப்புவதற்கு காவல்துறை தடை விதித்ததை எதிர்த்து, பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா இன்று (ஜனவரி 22) பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறுகிறது. அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் நேற்று (ஜனவரி 21) ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், “தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்த புனிதமான நேரத்தில் அனைத்து வகையான பூஜைகள், அர்ச்சனை மற்றும் அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு காவல்துறை அதிகாரிகள் மூலம் தன்னிச்சையான அதிகாரத்தைப் பயன்படுத்துவது, அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உடனடி தலையீடு இல்லாவிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையும், அரசியலமைப்பு இயந்திரத்தின் தோல்வியும் ஏற்படும்.
எனவே, இந்த ரிட் மனுவை தலைமை நீதிபதி நீதிமன்றத்திலோ அல்லது வேறு ஏதேனும் நீதிமன்றத்திலோ நீதியின் நலன் கருதி இன்றிரவு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று மிகவும் மரியாதையுடன் வேண்டிக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று காலை அவசர வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: வெடிப்புகள் இல்லாத உதடுகளைப் பெற…