DMK vs BJP

தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றியம்; அரசியல் முரணா? பொருளாதாரக் கொள்கை முரணா? : பகுதி 1

அரசியல் சிறப்புக் கட்டுரை

கடந்த அதிமுக ஆட்சியின் பார்ப்பனிய அடிமைச்சேவகமும் அவர்களை கைப்பாவைகளாகக் கையில் வைத்துக் கொண்டு பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் ஆடிய அராஜக ஆட்டமும் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியது அல்ல. மாநில உரிமைகளையும் மக்களின் நலனையும் பலிகொடுத்து தங்களது ஆட்சியையும் சொத்தையும் காத்துக்கொண்டு தமிழர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தி மக்களிடமும் அரசியல் அரங்கிலும் அதிமுக அந்நியப்பட்டது. இந்த அரசியல் சூழலை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட திமுக பார்ப்பனிய – பாசிச பாஜக எதிர்ப்பு, மக்கள்நலத் திட்டங்களோடு தனது பழைய வேரான மாநில சுயாட்சியைக் கையில் எடுத்ததன் மூலம் தனது தலைமையின் பின்னால் அனைவரையும் அணிவகுக்க வைத்தது. அதிமுகவைக் கொண்டு பார்ப்பனியம் இங்கே மீண்டெழ முயற்சி செய்வதைத் தடுக்க ஜனநாயக ஆற்றல்கள் அனைத்தும் “பாசிச பாஜகவை வீழ்த்துவோம்” என ஒருமித்த குரலில் ஒன்றிணைந்து முழங்கின. கம்யூனிஸ்டுகளும் விசிகவும் தாங்கள் எதிர்பார்த்த அளவு தேர்தலில் நிற்க இடம்கொடுக்காத இக்கட்டான சூழலிலும் திமுகவிடம் விட்டுக்கொடுத்து தமது பார்ப்பனிய பாசிச எதிர்ப்புக் கொள்கையில் உறுதியாக நின்றார்கள்.

திமுக அரசுக்கான ஆதரவும் விமர்சனமும்    

 திமுக தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தது. வந்த முதல்நாள் முதல் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழல். போர்க்கால அடிப்படையில் உடனடியாக களத்தில் இறங்கி எதிர்கொண்டது. சீர்கெடுக்கப்பட்ட நிர்வாக இயந்திரத்தைச் சீர்செய்து ஓய்வின்றி உழைத்த திமுக அரசும் அதன் நிர்வாகமும் மக்களைக் காத்து அவர்களின் மனங்களை வென்றன. பொது முடக்கத்தை அறிவித்து மக்களை வீதியில் நடக்கவைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மறுத்து, எரிபொருள் வரியை உயர்த்தி விலைவாசியைக் கூட்டிக் கொண்டிருந்தது ஒன்றியம். அதன் செயல்பாடுகளுக்கு நேரெதிராக பெட்ரோல் வரி குறைப்பு, குடும்பங்களுக்கு நேரடியாக பணம் மற்றும் மளிகை தொகுப்பு கொடுத்தல் ஆகியவற்றோடு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிப்படி மகளிர் கட்டணமில்லாப் பயணம், பெண்கள் படிக்க உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தி சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது திமுக அரசு. அடுத்து பெருமழையால் சென்னை நிரம்பியதையும் திறம்படக் கையாண்டு தன்மீதான மக்களின் நன்னம்பிக்கையைத் தக்கவைத்துக் கொண்டது. உள்ளாட்சித் தேர்தலின்போது கட்சியின் உடன்பாட்டை மீறி விசிகவின் பதவிகளை திமுகவினர் கைப்பற்றியதைப் பொறுப்புடன் தலையிட்டு சுமுகமாகத் தீர்த்து கூட்டணி அறத்தை நிலைநாட்டியது.

 இந்த ஓராண்டில் இப்படி பாராட்டுகளைப் பெற்ற அதேசமயம் குடிசைவாழ் மக்களை அப்புறப்படுத்தியது, பசுமாடுகளை பராமரிக்க சென்னையில் இடம் ஒதுக்கியது, தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்துக்கு அனுமதி மறுத்து பின்பு அதில் பின்வாங்கியது, திருவாரூரின் வீதிக்கு கலைஞர் பெயரை வைக்க பாஜக காட்டிய எதிர்ப்பை அடுத்து கைவிட்டது, மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்துக்கு மீண்டும் பார்ப்பனிய கும்பலுக்குத் தர முன்வந்து எதிர்ப்பு வந்தவுடன் பின்வாங்கியது, ஜி ஸ்கொயர் விவகாரத்தில் பத்திரிகையாளர்களின் மீது வழக்கு தொடுத்து பின்பு திரும்பப்பெற்றது, திமிராக நடக்கும் சிதம்பரம் தீட்சிதர்களை சட்ட நெறிமுறைப்படி அணுகாமல் தடவிக் கொடுத்துக் கொண்டிருப்பது போன்ற விவகாரங்களில் திமுக அரசு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஒன்றிய தலைமையமைச்சர் மோடிக்கு சிவப்புக்கம்பளம் விரித்து பெரும் கூட்டத்தைக் கூட்டி தனது கோரிக்கைகளை திமுக அரசு முன்வைத்தபோது விசிகவும் கம்யூனிஸ்டுகளும் தனியாக ஒன்றியத்தை கண்டித்து சென்னைக்கு வெளியில் போராட்டம் நடத்தினார்கள். சென்னையில் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையாவை அழைத்து கலைஞர் சிலையை திறந்த நிலையில் திமுகவைத் தவிர்த்த அனைத்து ஜனநாயக ஆற்றல்களும் மதுரையில் ஒன்றுகூடி வர்க்க-வருண பேதத்தை எதிர்த்த சிவப்புச்சட்டை பேரணி நடத்தினார்கள்.

 திமுக அரசு பதவியேற்றது முதல் பாஜக எதிர்ப்பு அரசியலில் உறுதிகாட்டி 2024 தேர்தலுக்கு காங்கிரஸ் தலைமையில் அணியமாகும் தேசிய அரசியலை முன்னெடுத்து வந்தது. திமுக அரசைத் தட்டிவைக்கும் விதமாக நீட் உள்ளிட்ட சட்டவரைவை கிடப்பில் போடுவது, சமூகநலத் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்களை இல்லாமல் ஆக்கி தமிழக அரசின் கைகளுக்கு கடிவாளம் இடுவது, கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல் இழுத்தடிப்பது போன்ற நிர்வாகரீதியாக ஒன்றிய பாஜக அரசு நெருக்கடி கொடுத்து ஜனநாயக முறையையே கேலிப்பொருளாக்கி வந்தது. பல்வேறு வகைகளில் தனது எதிர்ப்பைக் காட்டியும் பலனின்றிப் போய் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியும் நிச்சயமாக வெற்றிபெறும் என்று சொல்லமுடியாத சூழலில் திமுக அரசு இந்துத்துவர்களுடன் மென்மையான அரசியல் சமரசம் செய்துகொண்டு அனுசரித்துச் செல்ல முனைகிறது. இதில் மாற்றுக்கருத்து கொண்ட கூட்டணியினர் போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இருவருமே தமது வழியில் வெற்றிபெற முடியும் என உறுதியாகச் சொல்லமுடியாத நிலையில் அவரவர் பாதையில் செல்ல அனுமதித்து விமர்சனத்தைத் தவிர்க்கிறார்கள்.

அரசியல் முரணா? பொருளாதாரக்கொள்கை முரணா?

 ஒன்றியத்தின் தமிழகத்துக்கு எதிரான ஜனநாயக விரோதப் போக்கை திராவிட-பார்ப்பனிய அரசியல் முரண்பாடாகப் புரிந்துகொண்டு தமது அரசியல் நகர்வுகளை இருதரப்பும் செய்வதைக் காணமுடிகிறது. அது ஓரளவு உண்மை என்றாலும்கூட மேற்கைப் போலல்லாமல் இந்திய சமூகத்தின் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு இடைவெளி உண்டு. மேற்கைப்போல இங்கும் முதலாளித்துவ உற்பத்தி நடைபெற்றாலும் இந்திய சமூகம் முழுமையாக வர்க்க சமூகமாக மாறிவிடவில்லை. அவர்களைப்போல இந்திய மக்கள் தனது பொருளாதார நலனை மட்டும் முன்னிறுத்தி வாக்களிப்பதுமில்லை; இங்கே “சாதிய இனக்குழு” (இனக்குழு அல்ல; அதில் ஏற்றத்தாழ்வு கிடையாது) அடையாளம் இங்கே முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது. ஆகவே இரண்டையும் சற்று பிரித்துப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. தற்போதைய ஒன்றிய – தமிழக முரணை திராவிட – பார்ப்பனிய அரசியலைத் தாண்டி பொருளாதாரக் கொள்கை சார்ந்து பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

 இதுவரையிலான ஒன்றிய-தமிழக பொருளாதாரக் கொள்கைகள் முந்தைய அரச முதலாளித்துவமும் (பார்ப்பனிய)தனியார் முதலாளித்துவமும் இணைந்த சமூக சந்தைப் பொருளாதாரம் (Social Market Economy) என்ற கலப்பின (Hybrid) பொருளாதாரக் கொள்கை காலத்திலும் பிந்தைய தொண்ணூறுகளுக்குப் பிறகான ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆதிக்கத்தை அனுமதித்த படிப்படியாக அரச முதலாளித்துவத்தை கைவிட்ட உலகமய காலத்திலும் ஒன்றுபோலவே இருந்து வந்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு இதில் பெரும் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அவசரநிலை காலத்தைப் போன்று ஒன்றியத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி மாநிலங்களை ஒடுக்குவது உச்சத்தைத் தொட்டிருக்கிறது. 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தப் பாதையின் தொடக்கம் எனலாம். அதன் பிறகான ஜிஎஸ்டி தொடங்கி கொரோனா கால மின்னணு இணையதள வர்த்தகத்தை வரைமுறையின்றி அனுமதித்தது வரை முறைசாராப் பொருளாதாரத்தின் மீதும் மாநில அதிகாரங்களின் மீதும் அடுக்கடுக்கான தாக்குதல்களைத் தொடுத்து இதுவரையிலான இந்தியப் பொருளாதாரக் கொள்கையையும் ஜனநாயக நெறிமுறைகளையும் இடித்துத் தரைமட்டமாக்கி வருகிறது.

 இந்த நடவடிக்கைகளின் நோக்கம் தனியார் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் இயங்கிவந்த வங்கி, காப்பீடு, கல்வி, மருத்துவம், விவசாயம், சிறு, குறு நிறுவனங்களின் உற்பத்தி, சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட முறைசாரா, அரச முதலாளித்துவ உற்பத்தி மற்றும் சேவையை அவர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருவது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை நிதி நிறுவனங்களுக்கு வெளியில் இயங்கிவந்த மூலதனத்தை முடக்கி எல்லா தொழில்களும் இவர்களின் நிதிமூலதனத்தின்கீழ் நடைபெறுவதாக மாற்றி அமைத்தது. அதன் பிறகான ஜிஎஸ்டி அறிமுகம் மாநில அரசுகளின் வரி விதிக்கும் உரிமையைப் பறித்து இறையாண்மையற்ற வெறும் நிர்வாகக் கட்டமைப்பாக மாற்றியமைத்தது. இதைத் தொடர்ந்து மாநில அரசுகளின் அதிகாரத்தின்கீழ் இருக்கும் விவசாயம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் தலையிட்டு சட்டங்களை இயற்றி மாநிலங்களை அதைச் செயல்படுத்த நிர்பந்தித்தது.

வெறும் அரசியல் முரணல்ல; பொருளாதாரக் கொள்கை முரண்

 விவசாயிகளின் எதிர்ப்பை அடுத்து அதில் பின்வாங்கினாலும் மற்ற சட்டங்கள் தொடர்கின்றன. அமெரிக்க பெருநிறுவனங்களின் தொழில்நுட்பம் மற்றும் நிதிமூலதனத்துடன் இயங்கும் பைஜூஸ் போன்ற பல இணையதளக் கல்வி நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக வளர்ந்திருக்கின்றன. அம்பானி, அதானி, டாட்டாவின் நிறுவனங்கள் மருத்துவத்துறையில் பெருமளவு முதலீடு செய்து வருகின்றன. இணையதள பெருநிறுவனங்கள் உணவு, மளிகைப் பொருட்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியா முழுவதும் எந்த தடையுமின்றி சந்தைப்படுத்தி மிக வேகமாக 55 (2021) பில்லியன் டாலர் அளவு இந்த சந்தையை கைப்பற்றி இருக்கிறார்கள். இதில் அறுபது விழுக்காட்டை அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே கைப்பற்றி இருக்கின்றன. வேறுபட்ட வளர்ச்சியையும் வருமானத்தையும் வாங்கும்திறனையும் கொண்ட இந்திய ஒன்றிய மக்கள் இந்தியா முழுக்க ஒரே விலையில் இவர்கள் எண்ணெய், மளிகைப்பொருட்களை விற்பதால் ஏற்படும் விலையுயர்வை எதிர்கொள்கிறார்கள்.

“ஒரே நாடு ஒரே சந்தை ஒரே வரி” என்ற பெயரில் ஒருசிலரிடம் சந்தையைக் கொடுத்ததன் விளைவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 135 கோடி இந்திய மக்கள் எட்டு விழுக்காடு பொருட்களை இந்த இருவரிடம் மட்டும் வாங்கும்போதே இந்த நிலையென்றால் 2030இல் 350 பில்லியன் டாலராக (1 பில்லியன் டாலர் = 8 ஆயிரம் கோடி ரூபாய்) இந்த வணிகம் உயரும்போது இதன் விளைவு என்னவாக இருக்கும்? கல்வி, மருத்துவத்துக்கும் நீட், குயட் என்ற பெயரில் தனியாருக்கான சந்தையை விரிவாக்கி இந்தியா முழுக்க ஒரே விலையில் கொடுத்தால்?

ஆக, இந்த அரசியல் பொருளாதாரக் கொள்கைகளும் நிறுவனங்களின் நகர்வுகளும் உணவு, கல்வி, மருத்துவத்தை சந்தைக்குரிய பண்டமாக சந்தையே “முழுமையாக” தீர்மானிப்பதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. சந்தை முழுமையாக ஒருசிலரின் கைப்பிடிக்குள் போகும் இந்தச் சூழலில் அவர்களை தீர்மானிக்க அனுமதித்தால் தேவை அதிகரிக்கும்போது விலைகளை உயர்த்தி லாபத்தைப் பெருக்குவார்கள். தேவை குறைந்தால் உற்பத்தியைக் குறைத்து விலையை வீழாமல் பாதுகாத்து மக்களை வெறும்பயலாக்குவார்கள். இது ஜிடிபி எண்ணை வேகமாக உயர்த்தி நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கி பங்குச்சந்தை குறியீட்டு எண்ணை அதிகரிக்கும்போது பொருளாதார வளர்ச்சி கீதம் பாடுவார்கள். அதிக விலைகளின் மூலம் மக்களை உறிஞ்சி அவர்களின் வாங்கும்திறனை வேகமாக சரித்த பின்னர் பொருளாதார சுருக்க சோககீதம் பாடி அரசைக் குற்றம் சாட்டுவார்கள். இந்த சந்தை (செயல்)பாட்டுக்கு இந்த துறைகளில் எல்லாம் அரசு பங்கேற்பது அதற்கு எதிராகப் பாடும் அசுர கானத்தைப் போன்றது. ஏனெனில் அரசு குறைவான விலையில் இந்த சேவைகளைத் தரமாக வழங்கும்போது இவர்களால் விலையைக் கூட்டி லாபத்தைப் பெருக்க முடியாது. உணவுத்துறையில் வலுவான இருப்பைக் கொண்ட தமிழ்நாட்டின் விலைவாசி உயர்வு இந்தியாவைவிட குறைவாக இருப்பது அதை உறுதி செய்கிறது.

இந்த அரச கட்டமைப்பை உடைக்க இவற்றின் விலைகளை அவர்களே தீர்மானிப்பதற்கு ஏற்ப ஒன்றியம் இந்த துறைகளை சட்டம் இயற்றி தனியார்மயமாக்குகிறது. உணவு, கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் வலுவான அரச இருப்பை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாதிரியைப் பின்பற்றும் தமிழ்நாடு இந்தக் கொள்கைக்கு உடன்பட மறுத்து விலகிக்கொள்ள சட்டம் இயற்றுகிறது. ஜனநாயக சட்டநெறிமுறைப்படி தடுத்து நிறுத்த முடியாத ஒன்றிய பாஜக அரசு நிர்வாக ரீதியாக குறுக்கு வழியில் தடையை ஏற்படுத்துகிறது. ஆகவே இது வெறும் திராவிட – பார்ப்பனிய அரசியல் முரணல்ல; பொருளாதாரக் கொள்கை முரண்.
இந்த தனியார்மயக்கொள்கை எப்படி வங்கி, காப்பீடு உள்ளிட்ட நிதித்துறைகளில் செயல்படுத்தப்படுகிறது; அது எப்படி தமிழகத்திற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது என்பதை அடுத்தடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்.

பகுதி 2 – நாளை தொடரும் …

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ்,

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *