சுரண்டலுக்கும் சூறையாடலுக்கும் மாறிய ஒன்றிய அரசின் முதலாளித்துவம் : பகுதி 2 

Published On:

| By Minnambalam

BSE

பார்ப்பனிய – பாசிச எதிர்ப்பு மற்றும் மாநில சுயாட்சி அரசியலையும் மக்கள் நல பொருளாதாரத் திட்டங்களையும் முன்வைத்து எதிர்க்கட்சிகளை தனது தலைமையில் ஒருங்கிணைத்து வெற்றி பெற்றது திமுக. ஆட்சிக்கு வந்த திமுக அரசு முதல் ஓராண்டில் அந்த பாதையில் பயணித்து மக்களின் வரவேற்பையும் பெற்றது. நீட் உள்ளிட்ட சட்ட வரைவுகளைக் கிடப்பில் போடுவது, நிதி ஆதாரங்களைப் பெற முடியாமல் இழுத்தடித்தும் நிர்வாக ரீதியாக ஒன்றிய பாஜக அரசு தரும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள திமுக அரசு இந்துத்துவர்களுடன் மென்மையான அரசியல் சமரசம் செய்து கொண்டு அனுசரித்துச் செல்ல முனைவது விமர்சனத்துக்கு உள்ளாகிறது. இந்த தமிழக-ஒன்றிய முரணை திராவிட – பார்ப்பனிய அரசியல் முரணாகப் புரிந்துகொண்டு நகர்வுகளைச் செய்வதைக் காண முடிகிறது. இது வெறும் திராவிட – பார்ப்பனிய அரசியல் முரணல்ல. உணவு, கல்வி, மருத்துவம் ஆகிய முக்கிய துறைகளில் அரசின் இருப்பை அடிப்படையாகக் கொண்ட திராவிட மாதிரிக்கும் உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவில் எஞ்சியிருக்கும் இந்த அரச முதலாளித்துவத்தை ஒழித்து அவற்றை முற்றிலும் தனியார்மயமாக்கும் பொருளாதார “சீர்திருத்தங்களை” முன்னெடுத்து அவற்றின் விலைகளை சந்தையையே தீர்மானிக்கும் வகையில் மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைக்குமான முரண்.

உள்ளே நுழைந்த நிதி மூலதனம் உயரப் பறந்த சந்தை

 உணவு, கல்வி, மருத்துவத்தில் மட்டுமல்ல; பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அதன் அதிகாரத்தின்கீழ் இருந்துவந்த மற்ற துறைகளையும் எப்படி தனியார்மயமாக்கி வருகிறது என்பதைப் பார்த்து வருகிறோம். ஒன்றியத்திடம் இருந்த தொலைத்தொடர்பு துறையை அம்பானியின் ஜியோவுக்கு தாரை வார்த்ததும் குஜராத் பனியாக்களுக்கு கடனை வாரிக்கொடுத்து அது வாராக்கடனாகி வங்கித் துறையை கபளீகரம் செய்து வந்ததும் ஊரறிந்தது. கொரோனாவுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதாரச் சுருக்கத்தை எதிர்கொள்ள ட்ரம்ப் நிர்வாகம் செய்த பெருநிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொடுத்து, அவர்கள் அந்தப் பணத்தை முதலீட்டு, அளிப்பைக்கூட்டி (சந்தையில் தேவை இல்லாதபோது) பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது என்ற அதேமுறையை இவர்களும் பின்பற்றினார்கள். முப்பது விழுக்காடாக இருந்த முதலாளிகள் மீதான வரியை 22 விழுக்காடாக ஒன்றிய பாஜக அரசு குறைத்தது. இது முதலாளிகளின் செல்வத்தை உயர்த்தி ஒன்றியத்துக்கு வரவேண்டிய வருவாயைக் குறைத்தது.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கு இந்திய மூலதன சந்தையை இன்னும் அகல திறந்துவிட்டது. ஒன்றியத்திடம் இருந்த வங்கி, காப்பீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீட்டை அதிகரித்தது. முக்கியமான பசையான துறையான காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டை 49 விழுக்காட்டில் இருந்து 74 விழுக்காடாகவும் வங்கித்துறையில் எந்த வரைமுறை நோக்கமுமின்றி புதிய நிதிய நுட்பத்தையும் (Fintech) அனுமதித்தது. இப்படி உள்ளே நுழைந்த கடன் நிதிமூலதனம் ஊரே முடங்கிக் கிடந்தபோது இந்தியப் பங்குச்சந்தையை மிக உயரத்தில் பறக்கவிட்டது. நிறுவனங்கள் ஈட்டும் ஒரு ரூபாய்க்கு முதலீட்டாளர்கள் எவ்வளவு ரூபாயை விலையாகக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லும் பங்குகளின் விலைக்கும் அந்த பங்குகள் ஈட்டும் வருவாய்க்குமான விலை-வருவாயீட்டல் விகிதம் (P/E ratio) 2021 பிப்ரவரியில் (36.21) வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2008இல் இது 10.36 எனும் அளவில் இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்கும் நமக்கும் என்ன தொடர்பு?

பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை உயர்வு அது ஈட்டும் அல்லது எதிர்காலத்தில் ஈட்டப்போகும் வருமானத்தின் மீது கட்டப்படும் பந்தயம். கொரோனா முடக்கத்தின்போது இவ்வளவு அதிக விலைக்குப் பந்தயம் கட்ட காரணம்…

1. வரைமுறையின்றி அமெரிக்க அரசு அச்சிட்ட டாலர் நிதி மூலதனம் முதலீட்டாளர்களுக்கு வட்டியின்றி கிடைத்தது.

2. இந்தியாவில் மின்னணு வர்த்தகப் பொருளாதார மாற்றத்தின் மூலம் கோடிக்கணக்கான சிறு வர்த்தகர்கள் ஆதிக்கம் செலுத்திவந்த முறைசாரா சில்லறை வர்த்தகச் சந்தையை “முறையாக” வரி செலுத்தி வணிகம் செய்யும் இந்தப் பெருநிறுவனங்கள் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு.

2020-21இல் இதுவரையிலும் இல்லாத அளவாக 81.72 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்குள் வந்தது. அதில் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை(44%), கட்டுமானம் (13%), சேவை (8%) ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டும் 65 விழுக்காடு சென்றது.

 பங்குச் சந்தை உயர்வு கொண்டுவந்த ஏகபோகம், விலைவாசி உயர்வு

 இப்படி மிகை மதிப்பிடப்பட்ட பங்குகளைக் கொண்ட இந்த நிறுவனங்கள் அந்த மிகை மதிப்பை நிலைநிறுத்த அதிக வருவாயை ஈட்டி லாபத்தைப் பெருக்க வேண்டும். அப்படிப் பெருக்க இந்த குதிரைகள் இப்போது வேகமாக ஓடிப் பந்தயத்தில் வெல்ல வேண்டும் அல்லது மற்ற பந்தயக் குதிரைகளைப் போட்டியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். கையில் மூலதனம் பெருகி கொழுத்திருந்த பெருநிறுவனங்கள் போட்டி நிறுவனங்களைக் கையகப்படுத்தி போட்டியற்ற சூழலை உருவாக்கி பொருட்களின் விலைகளை ஒருபுறம் உயர்த்தியும் மறுபுறம் தங்களின் மீதான வரிகளை தளர்த்த வைத்தும் லாபத்தைப் பெருக்கின. இப்படி இவர்களுக்கு வரிச்சலுகை கொடுத்ததால் தனது வருமானத்தை இழந்த ஒன்றியம் அந்த இழப்பை சரிசெய்ய ஒன்று கடன் வாங்க வேண்டும் இல்லையேல் மக்களின்மீதான வரியைக் கூட்ட வேண்டும். காப்பீடு, வங்கித் துறைகளைத் தவிர்த்து அதனிடம் இருக்கும் மற்றுமொரு துறையான எரிபொருள் துறையிலும் தனியார் கோலோச்ச வசதியாக அதன்மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்கி உலகச் சந்தை விலைக்கு நிர்ணயிக்கும் கொள்கை முடிவை அறிவித்துச் செயல்படுத்தியது. ஒன்றியத்திடம் முழுமையாக இருந்த இந்த எரிபொருள் சந்தையை ஜியோ, எஸ்ஸார் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பத்து விழுக்காட்டை வேகமாகப் பிடித்தன.

 எஞ்சியிருக்கும் தொண்ணூறு விழுக்காடு எரிபொருள் சந்தையைத் தனியாரிடம் கொடுத்து அவர்கள் சந்தை விலைக்கு விற்பதற்குப் பதிலாக அரசே சந்தை விலைக்கு விற்று வருமானத்தைப் பெருக்கியது. அதுவும் போதாதபோது அதையே தனது வருமானத்தைப் பெருக்கும் காமதேனு பசுவாக பாவித்து அதன்மீது வரியைக் கூட்டிக்கொண்டே சென்றது. இப்படி ஒருபுறம் தனியார் நிறுவனங்கள் சந்தைப்படுத்தும் பொருட்களின் விலையை உயர்த்தியும் மறுபுறம் ஒன்றியம் எரிபொருளின் விலையையும் உயர்த்தியதால் சந்தையில் விலைவாசி உயர்ந்து மக்கள் கழுத்தை நெறிக்கிறது. அதனாலென்ன நிறுவனங்களின் லாபம் கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவாக 9.5 ட்ரில்லியனாக (ஜிடிபியில் நான்கு விழுக்காடு) உயர்ந்திருக்கிறதே! ஒன்றியத்தின் வரி வருவாய் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 45 விழுக்காடு வளர்ந்திருக்கிறதே!

இவர்களின் வருமான வளர்ச்சி மக்களின் பணத்தை, செல்வத்தை மங்களம் பாடியதால் வந்தது. கையில் இருந்த காசை இழந்த மக்கள்  வங்கிகளில் நகையை வைத்து வாங்கிய கடன் 28,163 (2019) கோடியில் இருந்து 63,770 (2021) கோடிகளாக உயர்ந்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குடும்பங்களின் கடன் 32.5 (2019-20) விழுக்காட்டில் இருந்து 37.3 (2020-21) விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் செலுத்த முடியாத அளவும் (Delinquencies) அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்குப் பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 145.2 (2019-20) லட்சம் கோடியில் இருந்து 147.7 (2021-22) லட்சம் கோடிகளாக அதிகரித்து (1.7%) வளர்ச்சிப்பாதையில் செல்லும்போது வேலைவாய்ப்பு 40.89 கோடியிலிருந்து 40.18 கோடியாக வீழ்கிறது (1.7%). சமீபத்திய சிஎம்ஐஇ புள்ளிவிவரம் 40.4 கோடி என்கிறது. இன்னும் கொரோனாவுக்கு முந்தைய அளவைக்கூட எட்டவில்லை. உற்பத்தியைப் பெருக்காமல் இப்படி விலைகளை உயர்த்தி, பொருளாதார வளர்ச்சி படம் காட்டுகிறார்கள். வேலைவாய்ப்பும் அருகி கையில் இருக்கும் காசையும் இந்த இருவரிடமும் வரியாகவும் லாபமாகவும் இழந்த மக்கள் வாங்க வழியற்றவர்களாக மாறி தெருவில் நிற்கிறார்கள்.

 மக்கள் சேமிப்பை தின்று செரிக்கும் சித்துவிளையாட்டு

 ஒன்றிய பாஜக அரசும் நிறுவனங்களும் நேரடியாக விலையையும் வரியையும் உயர்த்தி மக்களை சுரண்டுகிறார்கள் என்றால் இந்தியாவுக்குள் நுழையும் அந்நிய நிதி மூலதனம் பங்கு விலைகளை செயற்கையாக உயர்த்தி தூண்டில் போட்டு எல்லோரும் உள்ளே வந்ததும் விற்றுவிட்டு வெளியேறி லாபம் பார்க்கும் பங்குச்சந்தை சித்துவிளையாட்டின் மூலம் இந்திய நடுத்தர வர்க்கத்தையும் உள்ளூர் நிதி நிறுவனங்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்குகிறார்கள். எப்படி இந்த சித்துவிளையாட்டு விளையாடப்படுகிறது என்பதை பங்குகளின் விலைக்கும் அந்த பங்குகள் ஈட்டும் வருவாய்க்குமான விலை-வருவாயீட்டல் விகிதத்தைக் (P/E ratio; வி/வா விகிதம்) கொண்டு மின்ட் பத்திரிகையில் விளக்குகிறார் விவேக் கவுல்.

2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்காவில் இப்போது போலவே பணத்தை அச்சடித்து வெளியிட்டு வட்டி விகிதத்தை பூஜ்யமாக குறைக்கிறார்கள். அந்த மலிவான டாலர் காகிதம் இந்தியாவுக்குள் நுழைகிறது. வி/வா விகிதம் சரிந்திருந்த நிலையில் எல்ஐசி உள்ளிட்ட உள்ளூர் நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்று வெளியேறுகின்றன. விலை குறைவான பங்குகளை மலிவான பணத்தைக் கொடுத்து வாங்கும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் வி/வா விகிதத்தை படிப்படியாக உயர்த்துகிறது. தூண்டில் இரையைப் பார்த்து உள்ளூர் நிதி நிறுவனங்கள் வாயைப் பிளந்துகொண்டு உள்ளே வருகின்றன. வெளியூர்க்காரர்கள் குறைவான விலைக்கு வாங்கிய பங்குகளை அதிக விலைக்கு விற்று வெளியேறி லாபம் பார்க்கிறார்கள். மீண்டும் கொரோனாவுக்குப் பிறகு அதே மலிவான பணம், வெளிநாட்டு மூலதனம் நுழைவு, வி/வா உயர்வு, இரையைப் பார்த்து உள்ளே நுழையும் உள்ளூர்க்காரர்கள், அந்நிய மூலதனம் விற்று வெளியேறி லாபம் பார்ப்பது என்பது இப்போதும் நடக்கிறது.



விளையாட்டு நடுவரான ஒன்றியம் கட்டும் பந்தயம்

இந்த விளையாட்டில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை இந்த முறை ஒன்றிய பாஜக அரசு ஏற்படுத்தியது. கொரோனாவின்போது எதிர்பார்த்ததைப் போலவே இணையதள வர்த்தகப் பெருநிறுவனங்கள் மிகக்குறுகிய காலத்தில் சில்லறை வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றினாலும் மிகை மதிப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்கு விலைக்கு ஏற்ப வருமானம் ஈட்டுவது நடவாத காரியம். அமெரிக்காவில் வட்டி விகிதத்தை உயர்த்தும் நிலையில் மதிப்பு குறைவான வெற்று டாலர் காகிதத்தைக் கொண்டு வந்தவர்கள் மதிப்புக் கூட்டப்பட்ட சொத்தாக மாற்றி எடுத்துச் செல்கிறார்கள். செயற்கையாக விலைகூட்டப்பட்ட பங்குகள் எதிர்பார்த்த அளவு வருமானத்தை ஈட்டாது என்ற உண்மை உடையும்போது பந்தயத்தில் ஓடவிடப்பட்ட குதிரைகள் (நிறுவனங்கள்) பந்தயத்தில் தோல்வியையோ, பின்னடைவையோ சந்தித்து தனது மதிப்பை இழப்பதும் அதனால் பங்குச்சந்தை சரிவதும்தான் சந்தைவிதி. இந்த விதியை மாற்றி அந்தப் பந்தயத்தைக் கண்காணிக்கும் ஒன்றிய அரசே எல்ஐசி உள்ளிட்ட பொதுத் துறை நிதி நிறுவனங்களை விட்டு பந்தயம் கட்ட வைக்கிறது. அது ஒன்றிய பாஜக அரசுக்கு வேண்டப்பட்டவர்களின் நிறுவனங்களின் சந்தை மதிப்பை வீழாமல் நிலைநிறுத்துகிறது.

 இதனால் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பெல்லாம் மிகப்பெரிய அளவில் சரியும்போது இந்தியப் பணக்காரர்களின் பங்குச் சந்தை மதிப்பு மட்டும் மிகக்குறைவாக (-2.6%) வீழ்கிறது. அதிலும் அம்பானி – அதானியின் சொத்து மதிப்பு வீழாமல் மடமடவென உயர்கிறது. குறைந்த மதிப்புகொண்ட பங்குகளை மலிவான பணத்தைக் கொண்டு வாங்கி அதைச் செயற்கையாக அதிக மதிப்புகொண்டதாக மாற்றி எல்லோரும் உள்ளே வரும்போது விற்று வெளியேறி லாபம் பார்க்கிறது அந்நிய மூலதனம். அப்படி வெளியேறும்போது பங்கின் விலைகளைக் குறையாமல் ஒன்றிய பாஜக அரசின் ஒத்துழைப்புடன் உள்ளூர் பொதுத்துறை நிதி நிறுவனங்களை வாங்க வைத்து செயற்கையாக பங்கின் மதிப்பைத் தக்கவைத்து இந்திய முதலாளிகள் தங்களின் செல்வமதிப்பைக் கூட்டிக் கொள்கிறார்கள். விலை அதிகமாக இருக்கும்போதும், அது வீழாமல் இருக்க உண்மை மதிப்புக்கும் அதிகமான விலையைக் கொடுத்தும் வாங்கும் எல்ஐசி உள்ளிட்ட உள்ளூர் நிதி நிறுவனங்கள் தங்களது பணத்தை இதில் இழக்கிறார்கள். ‘நான் உமி கொண்டுவருகிறேன். நீ அரிசி கொண்டுவா நாமிருவரும் ஊதி ஊதித் திண்ணலாம்’ என்பதைப்போல அந்நிய நிதிமூலதனக் கும்பலும் பார்ப்பனிய முதலாளித்துவ கும்பலும் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் இந்த பங்குச் சந்தை விளையாட்டின் மூலம் நமது பொதுத் துறை நிதி நிறுவனங்களை தின்று செரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனியாருக்கும் ஒன்றியத்துக்கும் சாதகமான பணக் கொள்(ளை)கை

 இந்தக் கதை இதோடு முடியவில்லை. இந்திய பொதுத் துறை நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் மட்டும் முதலீடு செய்வதில்லை; ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் தங்களிடம் உள்ள நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புச் செல்வத்தைக் கடனாகக் கொடுக்கின்றன. உதாரணமாக எல்ஐசி நிர்வகிக்கும் 41 ட்ரில்லியன் ரூபாய் சொத்தில் 38.09 விழுக்காடு ஒன்றிய கடன் பத்திரங்களிலும், 24.25 விழுக்காடு மாநில அரசுகளின் கடன் பத்திரங்களிலும், 24.56 விழுக்காடு பங்குகளிலும் முதலீடு செய்திருக்கிறது. நிறுவனங்கள் இந்த முதலீட்டைக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்து, விற்று, லாபமீட்டி கடன் பத்திரமானால் வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்; பங்கு வெளியீட்டில் முதலீட்டைப் பெற்றால் முதலிட்ட தொகைக்கு ஏற்ப வருமானத்தை பங்குதாரருக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். அரசுகள் வாங்கும் கடனை நாட்டில் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் பெருகும் வரி வருமானத்தைக் கொண்டு இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். அப்படி ஒன்றும் இங்கே பொருளாதாரம் ஆகா ஓகோவென வளராத நிலையில் கடன் வாங்கியவர்களான ஒன்றியமும் பெருநிறுவனங்களும் கூட்டுக்களவாணிகளாக இருக்கும் நிலையில் குறைவான வட்டிக்கு வாங்கிய கடனை வாங்கிய தொகைக்கும் குறைவாகத் திருப்பி செலுத்த ஒரு குறுக்கு வழியைக் கையாள்கிறார்கள்.

 ஒன்றியமும் நிறுவனங்களும் பொருட்களின் விலையையும் அவற்றின் மீதான வரிகளை உயர்த்தி தங்களது லாபத்தையும் வருவாயையும் பெருக்க அது விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறது. அது பணத்தின் வாங்கும் ஆற்றலை அதன் உண்மை மதிப்பைக் குறைத்திருக்கிறது. இப்படிப் பணம் இழக்கும் மதிப்பை நிலைநிறுத்த இந்திய மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி அந்த மதிப்பிழப்பை சரி செய்ய வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல் குறைவான வட்டி விகிதத்தை தொடர்ந்து வந்தது. வருங்கால வைப்புநிதிக்கான வட்டியையும் தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்தார்கள். இது மக்கள் கையிலும், சேமிப்பாகவும் இருக்கும் பணத்தின் மதிப்பைக் குறைக்கும். அதாவது அதிக பணத்தைக்கொண்டு குறைவான பொருட்களையே வாங்க முடியும். அதேசமயம் கடன் வாங்குபவர்களுக்கு மலிவாகக் கடன் கிடைக்கும். லாபமாகவும் ஜிஎஸ்டி வரியாகவும் குவியும் அதிக பணத்தைக்கொண்டு வாங்கிய பணத்துக்கும் குறைவான மதிப்பில் கடனை வட்டியுடன் அடைத்து விடலாம். இது கடன் கொடுத்த நிதி நிறுவனங்களை நட்டத்தில் தள்ளும்; மத்தியதர வர்க்கத்தின் சேமிப்பை இல்லாமல் ஆக்கி வாங்க வக்கற்றவர்களாக மற்றும்; ஏழைகளை பட்டினியில் தள்ளிக் கொல்லும். இந்த வட்டிவிகித அணுகுமுறையை தனது தலையங்கத்தில் சுட்டிக்காட்டும் மின்ட் பத்திரிகை கொஞ்சமாவது சமனைப் பேணுங்கள் (Balance please) என இறைஞ்சுகிறது.

இப்படி பங்குச்சந்தை விளையாட்டிலும், வட்டி விகித மாறாட்டங்களிலும், வாராக்கடன் மூலமும் இந்தியப் பொதுத் துறை நிதி நிறுவனங்களை நட்டப்படுத்தி ஒன்றுமில்லாமல் ஆக்கும்போது நடுத்தர வர்க்கம் இந்த பொதுத் துறை நிறுவனங்களை விட்டு தனியாருக்குச் செல்வது தவிர்க்கவியலாதது. 1991இல் தொண்ணூறு விழுக்காடு சந்தையை வைத்திருந்த பொதுத் துறை வங்கிகள் 2007 வரையிலும் மக்களின் சேமிப்பு மற்றும் கடன் வழங்குதலில் 70.7 விழுக்காடு சந்தையை தங்களிடம் வைத்திருந்தன. இந்த சீர்திருத்த நடவடிக்கைக்குப் பிறகு அது முறையே 60.2%, 55.2% ஆக குறைந்திருக்கிறது.  ஒன்றிய பாஜக ஆட்சிக்கு வருமுன்னர் மூன்று விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்த வாராக்கடன் இப்போது ஆறு விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. காப்பீட்டுத் துறையில் நான்கில் மூன்று பங்கு சந்தையை வைத்திருந்த எல்ஐசி 2020 ஜூன் மாதத்துக்குப் பிறகு 13 விழுக்காடு சந்தையை இழந்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள் தங்களது பங்கை தொடர்ந்து இரு மடங்காக அதிகரித்து வருகின்றன. 2008இல் 37.82 விழுக்காடாக இருந்த மக்களின் சேமிப்பு விகிதம் 28.2 விழுக்காடாக இப்போது குறைந்திருக்கிறது. இப்படி மக்களின் செலவுகள் அதிகரித்து, சேமிப்பு குறைந்து, பொதுத்துறை நிறுவனங்களில் சேமித்த பணத்தையும் இழந்து, இந்த நிதிச்சந்தையும் தனியாரின் கைகளுக்குச் சென்றால் என்ன பிரச்சினை?



 தமிழக நிதியைப் பறிக்கும் பொருளாதாரக் கொள்(ளை)கை

அனைவருக்கும் சமமாக வாய்ப்பளித்து உண்மையாக உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும்போது வேலைவாய்ப்பு பெருகும். அதன்மூலம் உருவாகும் நடுத்தர வர்க்கத்தின் தேவைக்கான அளிப்பைக் கூட்டுவதற்கு மேலும் உற்பத்தியைப் பெருக்குவது, அது மேலும் நடுத்தரவர்க்கம் மற்றும் முதலாளிகளின் பெருக்கத்துக்கு வழிவகுக்கும். இந்தச் செல்வச்செழிப்பான முதலாளிகள், நடுத்தர வர்க்கத்தின் மீது நேரடி வருமான வரியை விதித்து மற்ற மக்களின் மீதான மறைமுக வரியைக் குறைக்கும்போது எல்லோரின் வாங்கும் திறனும் அதிகரிக்கும். பெருகும் பொருளாதார வளர்ச்சி அரசின் வரி வருவாயையும் முதலாளிகளின் லாபத்தையும் கூட்டும். மாறாக உள்ளூர் உற்பத்தியைப் புறக்கணித்து உலகம் முழுக்க உற்பத்தியாகும் நுகர்வுப்பொருட்களை சந்தையில் அனுமதித்து அதை நாடு முழுவதும் எந்த தடையுமின்றி சந்தைப்படுத்த பொதுவான சேவை வரி (GST) முறையை உருவாக்கி சேவைத் துறை சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும்போது மக்கள் கையிலும் சேமிப்பிலும் வைத்திருக்கும் பணத்தைக் கொண்டோ அப்படி இல்லாதவர்கள் கடன் வாங்கியோ இந்தப் பொருட்களை நுகர்வார்கள்.

 சந்தையின் இந்த தேவைக்குப் பலரும் உற்பத்தி செய்து விற்பனை அளவைக் கூட்டி, லாபத்தைப் பெருக்கும்போது வேலைவாய்ப்பு பெருகும். பொருட்களின் விலை குறையும். ஆனால், இந்தப் பொருட்களின் உற்பத்தியை ஒருசிலரின் கைகளில் வைத்துக்கொண்டு சந்தையில் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப விலையை உயர்த்தி லாபத்தைப் பெருக்குகிறார்கள். அது இந்த நிறுவனங்களின் பங்குகளுக்கு கிராக்கியை உண்டாக்கி அதன் மதிப்பைக் கூட்டி பெரு நிறுவனங்கள் தங்களது செல்வமதிப்பைக் கூட்டிக் கொள்கின்றன. இது வேலைவாய்ப்பையும், நடுத்தர வர்க்கத்தின் அளவையும், மக்களின் சேமிப்பையும், வாங்கும் திறனையும் குறைத்து மக்களை கடனாளியாக்குகிறது. ஒன்றியம் இந்தப் பெரு நிறுவனங்களின் மீதான நேரடி வரிவிதிப்பைக் குறைத்து அவர்களுக்கு வரிச்சலுகை அளித்துவிட்ட நிலையில் தனது வருமானத்தைப் பெருக்க நடுத்தர வர்க்கத்தின் மீதான நேரடி வரிவிதிப்பைக் கூட்டவேண்டும் அல்லது மற்றவர்களின் மீதான மறைமுக வரிவிதிப்பைக் கூட்டவேண்டும் அல்லது தனது செலவினத்தைக் குறைக்க வேண்டும். அது மக்களின் மீதான வரியைக்கூட்டி அதை மாநிலங்களுடன் பங்கிட வேண்டிய தேவை இல்லாத செஸ் வரி விதிப்பாக மாற்றி தனது பாதிப்பைத் தவிர்த்து மாநிலங்களை வருமானம் இன்றி தவிக்கவிடுகிறது. நாம் வரிவிதிக்கும் உரிமையை அவர்களிடம் கொடுத்துவிட்டு வரவேண்டிய நிதி வருவாயை இழந்து புலம்பிக் கொண்டிருக்கிறோம். மக்கள் விலைவாசி உயர்வால் வாடுகிறார்கள். பொருளாதாரம் வளர வழியின்றி சுருங்குகிறது. அதைப் பெருக்க முதலாளிகளிடம் பணத்தைக் கொடுத்து உற்பத்தியைக் கூட்டச் சொல்கிறார்கள். அவர்கள் இருக்கும் நிறுவனங்களைக் கையகப்படுத்தியும் மக்கள் சொத்துகளைக் கைமாற்றச் சொல்லியும் தனது செல்வத்தை மேலும் பெருக்கிக் கொண்டு சந்தையில் ஏகபோக உரிமையை (முற்றுரிமை – Monopoly) நிலைநாட்டிக் கொள்கிறார்கள்.      

முன்பு பிஎஸ்என்எல்லை ஒன்றுமில்லாமல் ஆக்கி ஜியோவும் மற்றவர்களும் அதைப் பதிலீடு செய்ததைப்போல படிப்படியாக பொதுத் துறை நிதி நிறுவனங்களின் சொத்தை அதாவது மக்கள் பணத்தை அரசும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களும் தின்று செரித்து ஒன்றுமில்லாமல் ஆக்க மறுபுறம் மற்ற தனியார் நிதி நிறுவனங்கள் இந்த நிதிச் சந்தையைப் பிடித்து வருகின்றன. இது இந்திய நடுத்தர வர்க்கத்தை சேமிக்க ஊக்குவித்து அப்படி உருவாகும் வங்கி மூலதனத்தை அரசு முதலிட்டு ஏற்படுத்தும் கீனிசிய பொருளாதார சுழற்சிக்கு இடமில்லாமல் செய்கிறது. ஒன்றியத்தின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் 620.7 பில்லியன் டாலர்கள். வெளியூர் டாலர் கடனும் அதிகரித்து உள்ளூர் நிதிச்சந்தையையும் நிதி மூலதனக் கும்பல் கைப்பற்றி வரும் நிலையில் சுணங்கும் பொருளாதார வளர்ச்சியை வீழும் வேலைவாய்ப்பைச் சரிசெய்ய அரசுகள் முதலீட்டுப் பொருளாதார சுழற்சியை ஏற்படுத்த தேவையான மூலதனத்தை எங்கிருந்து பெறுவார்கள்? தொடர்ந்து தனியாரிடம் இருந்து வாங்கும் கடன் நம்மை எங்கு கொண்டுபோய் நிறுத்தும்? 

நாளை தொடரும் …

பகுதி 1

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ்,

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share