தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(மார்ச் 1) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி சென்னை அறிவாலயத்தில் இன்று நேரில் வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “ஒளிமயமான தமிழ்நாட்டை உருவாக்க முதல்வர் ஸ்டாலின் அல்லும்பகலும் உழைத்து கொண்டிருக்கிறார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பாராட்டினார்.
நான் முதலிடத்தில் வருவது மட்டுமல்ல, தமிழகமும் முதலிடத்துக்கு வரவேண்டும் என்று கடந்த பிறந்தநாளின் போது தெரிவித்தார். அதற்காக பல்வேறு திட்டங்களை நாள்தோறும் அறிவித்து முன்னெடுத்து வருகிறார்.
திராவிட இயக்க சரித்திரத்தில் புது ஒளியாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று மதிமுக சார்பில் வாழ்த்துகிறேன்” என்று வைகோ தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், “திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான அண்ணன் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் அவரை நேரில் சந்தித்து விசிக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம். சமூக நீதி, மதச்சார்பின்மை, அம்பேத்கரின் சமூக கட்டமைப்பு போன்றவற்றை பாதுகாப்பதற்கு அவர் நீடுழி வாழ வேண்டும். அரசியலில் தலைமை தாங்க வேண்டும்.
அனைத்து ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் திமுக எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் விசிக ஆதரவளிக்கும்.” என்று தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர், திமுக தலைவர், அன்பு சகோதரர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-ஆம் பிறந்தநாளில், அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்து தரப்பினரின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நல்லாட்சி வழங்கிட வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “இன்று 70-ஆம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பொதுவாழ்வு பணி தொடர வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “திமுக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். குன்றாத நலத்துடன் இன்னும் பல்லாண்டுகள் மக்கள் பணியை மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர், “தமிழக முதல்வர் திரு. முக.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரேநாளில் இரண்டு முதல்வர்களுக்கு வாழ்த்து கூறிய பிரதமர்
மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை!
ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை: என்ன நடந்தது?
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பிறந்தநாள் வாழ்த்து!