மத்திய பட்ஜெட் : அரசியல் தலைவர்களின் வரவேற்பும்; எதிர்ப்பும்!

அரசியல்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து மத்திய பட்ஜெட்டில் எதுவும் இல்லை என திருச்சி சிவா எம்.பி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5வது முறையாக இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்தார்.

இதில் புதிய விதிமுறைப்படி ரூ.7 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பை தவிர வேறு எந்த அறிவிப்பும் பெரிய அளவில் சொல்லும்படி இல்லை.

குறிப்பாக சிலிண்டர் மானியம், பெட்ரோல் விலை குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

tamilnadu political leaders reviews

இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வரவேற்றும், விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்

அந்தவகையில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, ”இந்திய இளைஞர்களின் முக்கிய பிரச்சனையான வேலை வாய்ப்பை பெருக்க பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.

மேலும், யூரியா உர மானியம், நூறு நாள் வேலை திட்டத்துக்கான நிதி, ஊட்டச்சத்து திட்டத்துக்கான மானியம் ஆகியவை குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை பாதுகாக்க பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

அதேநேரத்தில் கர்நாடகாவுக்கு 5000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதன் மூலம் இது தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்பது தெளிவாகியுள்ளது.” என்று பேசியுள்ளார்.

அடுத்த 25 வருடத்தின் அச்சாணி

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிகையில், “இந்த பட்ஜெட் உரையை ஆரம்பிக்கும்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த வரும் 25 ஆண்டுகள் அமிர்த காலமாக இருக்கும் என்று நம்முடைய பிரதமர் கூறியிருப்பதாக தெரிவித்தார்கள். 25 வருடத்திற்கு இந்த பட்ஜெட் அச்சாணியாக அமையும்.

பட்ஜெட் முடிந்த பின்னர்தான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வரும் என்பது தெரியும்.

எல்லா வருடங்களையும் போல, இந்த ஆண்டும் மத்திய அரசு தமிழகத்திற்கு குறிப்பாக உள்கட்டமைப்புக்கு மிக அதிகமாக நிதி ஒதுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பு மட்டுமல்ல, நம்முடைய நம்பிக்கை.” என்று தெரிவித்தார்.

மக்களுக்கு பயன்படாத பட்ஜெட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கூறுகையில், “ ஓரிரண்டு அறிவிப்புகளை பாஜக தேர்தலுக்காக அறிவித்துள்ளது. இது மக்களுக்கு பயன்படாத பட்ஜெட்.

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சில திட்டங்களுக்கு இந்த ஆண்டு நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

வரிக்குறைப்பு வரவேற்கத்தக்கது

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “நான் குறைவான வரிவிதிப்பு அரசில் நம்பிக்கை கொண்டுள்ளதால், எந்த ஒரு வரிக்குறைப்பும் வரவேற்கத்தக்கது தான்.

ஏனென்றால், மக்கள் கையில் அதிக பணம் கொடுப்பது பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்வதற்கான சிறந்த வழி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கான சிறப்பு திட்டங்கள் இல்லை

அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறுகையில், “மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி உச்சவரம்பு அதிகரிப்பு, இயற்கை விவசாயத்திற்கு ஊக்குவிப்பு உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.

எனினும் நேரடி வேலைவாய்ப்பு அறிவிப்பு, மூத்த குடிமக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை திரும்ப வழங்குவது குறித்து எதுவும் பேசப்படவில்லை. தமிழ்நாட்டிற்கான சிறப்பு திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.” என்று தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

உலக பணக்காரர்கள் பட்டியல் : அம்பானியிடம் தோல்வி கண்ட அதானி

எடப்பாடி வேட்பாளருக்கு போட்டியாக பன்னீரின் வேட்பாளர்: இரட்டை இலை முடங்குகிறதா?

+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *