சுதந்திர போராட்ட தியாகியும், தகைசால் தமிழரான மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா (102) இன்று காலமானார்.
கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணியளவில் உயிரிழந்தார். அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த சங்கரய்யாவின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் சங்கரய்யாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
என்றென்றும் நம்மோடு வாழ்வார்!
அதன்படி தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட காலத்திலேயே மாணவர் இயக்க போராட்டங்களுக்கு தலைமையேற்றவரும், சிபிஐ(எம்) தமிழ்நாடு முன்னாள் மாநிலச் செயலாளராக பணியாற்றியவரும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், விடுதலைப் போராட்ட வீரரும், நூற்றாண்டு கண்ட தகைசால் தமிழருமான தோழர் என்.சங்கரய்யா (102) காலமானார். போராட்ட வரலாறாக என்றென்றும் நம்மோடு வாழ்வார்! தோழருக்கு செவ்வணக்கம்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “தமிழகத்தின் மூத்த தலைவரும் முதுபெரும் தலைவருமான ‘தகைசால் தமிழர்’ தோழர் சங்கரய்யா(102) அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல்லாண்டுகள் சிறையில் வாடியவர். தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் வளர்வதற்கு பெரிதும் பங்களிப்பு செய்தவர்.
அவரது மறைவு பொதுவுடைமை இயக்கங்களுக்கும் உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் நேர்ந்த ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டை கடந்தும் போராடி வந்தவர்!
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “இந்திய விடுதலைப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இடது சாரி இயக்கங்களின் தலைவர்கள் வாழ்க்கை போராட்டங்களால் நிரம்பியிருக்கும். ஆனால், தோழர் சங்கரய்யா போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர். பள்ளிப் பருவத்தில் தொடங்கி, நூற்றாண்டை கடந்த பிறகும் கூட மக்கள் உரிமைகளுக்காகவும், சமூகக் கேடுகளுக்கு எதிராகவும் போராடி வந்தவர். தமிழ்நாட்டு மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர்.
2001 சட்டப்பேரவைத் தேர்தலிலும், அதற்கும் முன்பும், பின்பும் தோழர் சங்கரய்யா அவர்களுடன் நானும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல அறிமுகமும், ஒருவர் மீது மற்றொருவருக்கு மரியாதையும் உண்டு.
தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அத்தகைய சிறப்பு மிக்க தலைவரின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இடதுசாரி இயக்கங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
தோழர் சங்கரய்யா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பாட்டாளிகளுக்காக தன்னை அர்ப்பணித்த வீரத்தியாகி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான திரு.சங்கரய்யா காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தன்வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத்தியாகி சங்கரய்யா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ”கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன்.
தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர்.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். தோழர் என். சங்கரய்யா அவர்களது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி வர்க்கத்தினரின் துயர நாள் இது!
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மாபெரும் தோழர் மறைந்தார். நூறாண்டு தாண்டிய தன் வாழ்வில், நினைவு தெரிந்த பருவம் முதல் ஒரு நாளையும், ஒரு நொடியையும் தனக்கென வாழாத் தகைமையைக் கைக்கொண்ட முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா நம்மை நீங்கினார்.
சுதந்திர வேட்கையிலும் அதன் பிறகு பொதுவுடைமைக் கொள்கையிலும் ஆழ்ந்திருந்த தோழர், ஒவ்வொரு நாளையும் எளிய மக்களின் நலனுக்காகவே செலவிட்டார். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திரமல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான். பெரும்பான்மையாய் வாழும் பாட்டாளி வர்க்கத்தினரின் துயர நாள் இது. அவர் ஏந்திய பதாகையை நாமும் நம் நெஞ்சில் ஏந்த வேண்டும். மறைந்த தோழருக்கு என் மனம் கலங்கிய அஞ்சலி” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மக்களுக்காக களப்பணி ஆற்றியவர்!
தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
உழைக்கும் மக்களின் தோழராக வாழ்ந்த சங்கரய்யா இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் மூத்த தலைவர்களோடு பயணித்தவர். கல்லூரி பருவத்திலிருந்தே பொது வாழ்க்கைக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டவர். சீரிய சிந்தனையாளர். “ஜனசக்தி” இதழின் ஆசிரியராகப் பணியாற்றியதோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்குவதற்கு முக்கிய பங்காற்றியவர்.
உழைக்கும் மக்களின் நலனுக்காக தொடர்ந்து களப்பணி ஆற்றியவர். தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலத்திலும் பல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்தவர். எளிமையான வாழ்க்கை வாழ்ந்த சங்கரய்யாவின் இழப்பு உழைக்கும் மக்களுக்கும் கம்யூனிஸ்ட் பேரியக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாது ஒரு பேரிழப்பு.
அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று தனது இரங்கல் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சங்கரய்யாவின் 102 ஆண்டுகால பெருவாழ்வு: ஒரு பார்வை!
ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!
’தகைசால் தமிழர்’ சங்கரய்யா காலமானார்!
“சிறந்த இயக்குனர்” விருது வென்ற பார்த்திபன்