தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, எருதுவிழா போன்ற விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்று ஏடிஜிபி சுற்றறிக்கை வெளியிட்டதாக கூறியுள்ள சவுக்கு சங்கருக்கு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இன்று (பிப்ரவரி 2) எருதுவிடும் விழா நடத்த அனுமதிக்காததை கண்டித்து நடைபெற்ற போராட்டம் கல்வீச்சு காரணமாக கலவரமாக மாறியது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.
பின்னர் போக்குவரத்து சரிசெய்யப்பட்டபின் 4 மணி நேரமாக நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.
இதுதொடர்பாக யு ட்யூபர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.
அதில், “தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை உளவுத்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு தோல்வி அடைந்துள்ளது. ஓசூரில் நடந்த எருதுவிடும் விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால், ஏராளமானோர் திரண்டு வந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.” என்று தெரிவித்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு பதிவில், “ ஜல்லிக்கட்டு, கம்பலா போன்ற அனைத்து விலங்கு விளையாட்டுகளுக்கும் தடை விதித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் விலங்கு விளையாட்டுகளுக்கு அனுமதி கோரிய அனைத்து கோரிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் டி.ஐ.ஜி.,க்கள் இதுகுறித்து எஸ்.பி.,க்களுடன் கலந்துரையாடி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியின் இந்த உத்தரவு மார்ச் இறுதி வரை அமலில் இருக்கும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஓசூரில் நடந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.” என்று அதில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து சவுக்கு சங்கரின் பதிவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில், “இது முற்றிலும் தவறான தகவல். அத்தகைய சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக தொண்டரின் வீட்டில் 16 அடி உயர கலைஞரின் பேனா!
குடியால் தம்பி கொலை, பணிமனை அமைக்க கூட இடமில்லை: குமுறும் ’நாம் தமிழர்’ வேட்பாளர்
இயக்குனர் சண்முகப்பிரியன் காலமானார்!