தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சார்பில் இன்று (மே 23) தமிழக டிஜிபியை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சந்தித்து, பிரதமர் மோடி மீது புகார் அளித்துள்ளனர்.
இன்று (23.05.2024) வியாழக்கிழமை பகல் 1.30 மணியளவில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவாலை, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் வழக்கறிஞர் டி.செல்வம், வழக்கறிஞர் பி. தாமோதரன், வழக்கறிஞர் என். அருள் பெத்தையா, வழக்கறிஞர் துறை தலைவர் வழக்கறிஞர் கே.சந்திரமோகன் உள்ளிட்டோர் சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தனர்
அதில், “கடந்த மே 20 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால், ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவிகளை ஆறு ஆண்டுகளாக காணவில்லை. இந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்’ என்று நேரடியாக மக்கள் மன்றத்தில் தமிழ்நாட்டின் மீது குற்றம் சுமத்தி பேசியுள்ளார்.
இந்த அவதூறு பேச்சின் நோக்கம் என்னவென்றால் தமிழ்நாட்டு மக்களை திருடர்களை போல இந்திய மக்கள் மன்றத்தில் தவறாக சித்திரித்துள்ளார். மேலும் ஒடிசா மக்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் மீது வெறுப்பையும், மோதல் உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் மோடியின் பேச்சு அமைந்துள்ளது.
நேரடியாக எந்த மக்கள் அல்லது எந்த தனி நபர் அவ்வாறு கூறினார்கள் என்பதை மோடி தன் பேச்சில் தெளிவாக குறிப்பிடவில்லை. எனவே மோடியை நேரடியாக விசாரித்தால்தான் தமிழ்நாட்டின் மீதான அவரது குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை தெரியவரும்.
மோடியின் அவதூறு பேச்சால் இனிவரும் காலங்களில் தமிழக பக்தர்கள் சுதந்திரமாக, பாதுகாப்பாக இனி பூரி ஜெகநாதரை தரிசிக்க முடியுமா என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின் போது, தன்னை சந்தித்த காஷ்மீர் பெண்கள்,. இன்னமும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக சொன்னதாக தெரிவித்திருந்தார். அவர் காஷ்மீரில் சொன்ன கருத்துக்கு அவரை டெல்லி காவல்துறையினர் அழைத்து விளக்கம் சொல்லுமாறு விசாரித்தனர்.
ராகுல் காந்தியை எப்படி டெல்லி காவல்துறையினர் தாமாக முன் வந்து விசாரித்தார்களோ, அதேபோல மோடியை இந்த கருத்துக்காக தமிழக போலீஸ் விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் நற்பெயருக்கும், தொன்மையான கலாசாரத்தை பின்புலமாக கொண்டுள்ள தமிழர்கள் மீதும் களங்கம் கற்பிக்கும் விதமாக அவதூறு பேசிய நரேந்திர தாமோதர் தாஸ் மோடியை தமிழக காவல்துறை சட்டப்படி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் செல்வப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
புகார் மனுவை பெற்றுக்கொண்ட தமிழக காவல்துறை இயக்குனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என்று அவரை சந்தித்த காங்கிரஸ் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
–வேந்தன்
“மோகன்லாலுக்கு மரியாதையே கிடையாது” – நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஆவேசம்!