பொங்கல் தினமான ஜனவரி 15 அன்று நடைபெற உள்ள எஸ்பிஐ வங்கி கிளார்க் பணிக்கான முதன்மைத் தேர்வு தேதியை மாற்ற முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 5,486 கிளார்க் பணிக்கான முதல்நிலைத் தேர்வு 2022-ல் நடத்தப்பட்டது. இதையடுத்து, அடுத்தகட்ட முதன்மைத் தேர்வு ஜன. 15-ம் தேதி நடைபெறும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளில் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தேர்வை வேறு நாளில் நடத்த வேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டு வந்தது.
முற்றுகைப் போராட்டம்
எதையும் மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில், 100-க்கும் மேற்பட்டவர்கள் எஸ்பிஐ முதன்மைத் தேர்வை, வேறு தேதிக்கு மாற்ற வலியுறுத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வட்டார அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அதன்பின்னர், வங்கி அலுவலகத்தில் 12 மணி நேரம் சு.வெங்கடேசன் எம்.பி நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தில் எம்.பி.க்கள் திருமாவளவன், செல்லக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், சு.வெங்கடேசனுக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேற்று தேர்வு தேதியை மாற்றக்கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் எஸ்பிஐ முதன்மை தேர்வு தேதியை மாற்ற முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பதற்றமாக மாற்றியிருக்கும் கொண்டாட்டம்
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழர் திருநாளில் SBI முதன்மைத் தேர்வுகள் கூடாது என நேற்று 12 மணி நேரம் காத்திருந்து போராடினோம்.
மாண்புமிகு தமிழக முதல்வரும் தொடர்ந்து முயற்சி செய்தார். ஆனால் இனிமேல் தேர்வுத்தேதியை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது ஒன்றிய நிதியமைச்சகம்.
20 நாட்களுக்கு முன்பே தெரிந்தும் கயமைத்தனத்தை கடைபிடிக்கிறது ஒன்றிய அரசு. எங்கள் திருநாளினை தேர்வு நாளாக்கி எங்கள் கொண்டாட்டத்தை பதற்றமாக மாற்றியிருக்கிறீர்கள்.
13 000 தேர்வர்களும், பலநூறு அலுவலர்களும் நாளை பொங்கல் கொண்டாடாமல் தேர்வு மையம் நோக்கி அலைந்து கொண்டிருப்பர். எங்களின் பண்பாட்டையும், உரிமையையும், அவமதிப்பதும் அலட்சியப்படுத்துவதுமே பாஜக அரசின் தினசரி பணியாக இருக்கிறது.
தமிழர் விரோத பாஜகவை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது.” என்று தெரிவித்துள்ளார்.
தேர்வு நடத்துவது ஏற்கத்தக்கதல்ல.
அதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியானது, “பாரத ஸ்டேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு ஜன.15-ம் தேதியன்று நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களிலும் பண்டிகை கொண்டாடப்படும் தினத்தன்று தேர்வு நடத்துவது ஏற்கத்தக்கதல்ல.
தமிழர்களின் மிக முக்கியப் பண்டிகையான பொங்கல் தினத்தன்று நடத்தப்படவுள்ள வங்கித் தேர்வுக்கான தேதியை மாற்ற வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கைவிடுத்தும், எஸ்பிஐ வங்கி நிர்வாகம் அதை ஏற்க மறுப்பது கண்டனத்துக்குரியது.” என்று தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
”எஸ்.பி.ஐ முதன்மை தேர்வு தேதியை மாற்ற முடியாது!” : மத்திய அரசு கறார்
வெளிநாடு வாழ் தமிழர் நலன் விழா 2023!