”95% வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே?” நேரில் சென்ற எம்.பி.க்கள் அதிர்ச்சி!

அரசியல்

‘மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று கூறினார்.

இதனை அப்பட்டமான பொய் என்று நேரில் சென்று ஆய்வு செய்த எம்பிக்கள் சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று காலை மதுரை வந்தார்.

பின்னர் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டலில் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

95% பணிகள் நிறைவு!

அப்போது பேசிய நட்டா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமையவுள்ளது.

மாணவர் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணி தொடங்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைப்பார்” என்று கூறியிருந்தார்.

சுற்றுச்சுவரை தவிர ஒன்னுமில்ல!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து அதற்கான இடம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டு 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதற்காக விசாலமான சாலை மற்றும் 90 சதவீதம் முடிந்த சுற்றுச்சுவர் தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கவில்லை.

தோராயமாக 222 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த மருத்துவமனைக்கு உண்டான கட்டுமானப் பணிகள் இதுவரை முழுமையாக தொடங்கப்படாமலேயே உள்ளது.

நேரில் ஆய்வு செய்த எம்.பி.க்கள்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95% வேலைகளை முடிவடைந்ததாக பாஜக தலைவர் நட்டா நேற்று பேசி இருந்த நிலையில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது இருவரும் நட்டாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘95 சதவீதம் முடிந்த எய்ம்ஸ் எங்கே?’ என்ற பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

ஜே.பி.நட்டா சொல்வது அப்பட்டமான பொய்!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்காக தனது பங்கு நிதியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அமைச்சரவையில் இன்னும் ஒப்புதல் பெறவில்லை என எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ”எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து சுமார் 400 கோடி ரூபாய் வரை கூடுதலாக நிதி ஒதுக்கி திட்டத்தினை விரிவுப்படுத்தினார்கள்.

இதன்படி திட்ட மதிப்பீட்டின் தொகை அதிகப்படியான காரணத்தினால் ஒன்றிய அரசும் தனது பங்கிற்கு நிதியை அதிகப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது உயர்த்தப்பட்ட தொகைக்கு மத்திய அமைச்சரவையில் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை.

இதனால் இன்னும் ஒப்பந்த பணி கூட விடப்படவில்லை. இதுதான் தற்போதைய நிலை. ஜே.பி.நட்டா சொல்வது அப்பட்டமான பொய் என்பது மக்களுக்கு தெரியும்.” என்றார்.

புல்புல் பறவைகள் முடித்த 95% பணிகள்!

இது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “பாஜக ஆட்சி : புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி நானும் எம்.பி மாணிக்கம் தாகூரும் சென்றோம்.

கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்டிடத்தை திருடிட்டாங்க!

அதேபோல் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ”டியர் ஜேபி நட்டா, 95 சதவீதம் முடிந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நன்றி. நானும், மதுரை எம்.பி சு.வெங்கடேசனும் தோப்பூரில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக செய்து வரும் துரோகம்!

இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், 95 சதவீத கட்டுமான பணிகள் முடிந்ததாக ஜே.பி நட்டா கூறிய மதுரை எய்ம்ஸ் பகுதியில் தான் நிற்கிறோம்.

ஆனால் இங்கே ஒன்றுமே கட்டப்படவில்லை. இப்படிதான் மத்திய அரசும், பாஜகவும் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது.

இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களும் மதுரை எய்ம்ஸ் குறித்தும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார் அசோக் கெலாட்

பிரதமர் கல்வி உதவித்தொகை: இந்தியில் வினாத்தாள் – கிளம்பிய எதிர்ப்பு!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.