தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 22) நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
அவரிடமிருந்த துறைகள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார். இந்தசூழலில் செந்தில் பாலாஜி இல்லாத முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அதேபோல தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ஜூலை 17-ஆம் தேதி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி நிரந்தர வைப்புத்தொகை அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது.
தமிழக அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ச்சியான அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், ஆளுநர் விவகாரம், விலைவாசி உயர்வு, காவேரி பிரச்சனை, தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் அமலாக்கத்துறை சோதனைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்