விரைவில் அமைச்சர்கள் மீதான ஊழல் லிஸ்ட் : அண்ணாமலை

அரசியல்

அமைச்சர்களின் அடுத்தகட்ட ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 10) நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கடற்கரை ஓர மாவட்டங்களில் நிபுணர்களை நியமித்து பேரிடரின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக மழை பாதிப்பு விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்துப் பேசிய அண்ணாமலை, “முதல்வருக்கு யாரை வேண்டுமானாலும் அமைச்சராக்குவதற்கு அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் நாம் தொடர்ந்து வைக்கக் கூடிய குற்றச்சாட்டு திமுக ஒரு குடும்ப ஆட்சி. குடும்ப ஆட்சியை முன்னிலைப்படுத்தித்தான் திமுக அரசே இயங்குகிறது என்று சொல்கிறோம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் சில விஷயங்களைச் செய்கிறார்கள் என பாஜக குற்றச்சாட்டை முன் வைக்கிறது.
இந்த நேரத்தில் முதல்வரின் மகனை அமைச்சர் ஆக்குகிறார்கள் என்றால், மறுபடியும் குடும்ப ஆட்சிக்காகத்தான் முதல்வர் வேலை செய்கிறார் என்பது மக்களின் கருத்து.
கனிமொழிக்குத் துணை பொதுச் செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தமிழக பாஜக சொல்வது பொய்யில்லை என்பது ஊர்ஜிதமாகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்வது போல தமிழகத்தில் பல முதல்வர்கள் இருக்கின்றனர். பேரலல் பவர் ஸ்ட்ரக்சர் இருக்கிறது. அதை மறுப்பதற்காகத்தான் எல்லோருமே முதல்வர் தான் என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் உண்மையை மறுக்க முடியாது” என குறிப்பிட்டார்.
ஆளுநரும், ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகளும் சந்தித்தது குறித்துப் பேசிய அவர், “ஆன்லைன் விளையாட்டை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தீர்வு வேகமாகக் கிடைக்க வேண்டும். ஆனால் ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகள் ஆளுநரை ஏன் சந்தித்தனர் என எங்களுக்குத் தெரியாது” என்றார்.
தொடர்ந்து அவர், “இன்னும் சிறிது காலத்தில் அமைச்சர்களின் ஊழல் குறித்த அடுத்தகட்ட பட்டியல் வெளியிடப்படும். இரண்டு மூன்று அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆதாரத்தைச் சேகரித்திருக்கிறோம். சாமானிய மக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்துள்ளது” என்று கூறியுள்ளார்.

பிரியா

7.20 லட்சம் பேர் தற்கொலை: அதிர்ச்சித் தகவல்!

முதல்வர் காரில் தொங்கிய மேயர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “விரைவில் அமைச்சர்கள் மீதான ஊழல் லிஸ்ட் : அண்ணாமலை

  1. இனி தான் ஆதாரம் திரட்டணுமா, சொல்லுவதற்கு முன்பே கையில் இருக்கணுமே…. நீதி மன்றத்தில் சொல்லு ராசா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *