“தைரியமான ஆண்மகனாக அண்ணாமலை இருந்தால், அவர் என்மீது வழக்கு போடட்டும்” என தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று (ஜூலை 27) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின்சார வாரியத்தில் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.
பிறகு தமிழக பாஜக மின்கட்டண உயர்வை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி,
“பிஜேபி ஆளும் கர்நாடகா, குஜராத், உத்தப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தமிழகத்தைவிட மின்கட்டணம் உயர்வு. ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகவும் குறைந்த மின்கட்டணத்தில் மின்விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. குறிப்பாக, 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. அதிலும் அரசு மானியம் முழுவதுமாக 3,500 கோடி ரூபாய் கூடுதலாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்கையில், ஊடகத்தில் தன் முகத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை தொடர்ந்து இது போன்ற பொய் புகார்களை தெரிவிக்கிறார்.
அண்ணாமலை தைரியமுள்ள ஓர் ஆண்மகனாக இருந்தால், தமிழக அரசு செய்யும் தவறுகளை, குறிப்பாக மின்சார வாரியத்தில் நடைபெறும் தவறுகளை, தங்களிடம் இருக்கக்கூடிய விவரங்களைக் கொண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து எங்கள் மீது வழக்கு தொடுக்கட்டும். அந்த தைரியத்தை விட்டுவிட்டு வெறும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்திகள் வரவேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரமல்ல இது. அதற்காக என்னுடைய நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. நாங்கள் வழக்கைச் சந்திக்கிறோம். தனியார் துறை சம்பந்தமான ஆவணங்களை எடுத்து வெளியிடும் அண்ணாமலை, ஏன் மத்திய அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுக்க முன்வரவில்லை?
அண்ணாமலை பதில் சொல்வாரா?
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகக் குறைந்த விலையில் 143 டாலருக்கு நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் மத்திய அரசோ, 203 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிறது. இதற்கு அண்ணாமலை பதில் சொல்வாரா?” என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பினார்.
ஜெ.பிரகாஷ்