கட்சியின் நிறுவன நாள் விழா, சட்டப்பேரவை துவக்கம் என அதிமுகவுக்கு இன்று அக்டோபர் 17ஆம் தேதி இரட்டை முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தத்தில்..
தற்போதைய நிலவரப்படி அதிமுகவின் சட்டமன்ற கட்சி துணைத் தலைவராக இருந்த பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அவரது இடத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இன்று சட்டமன்றம் கூடும் நிலையில் பன்னீர்செல்வத்தின் இருக்கை எங்கே இருக்கும் என்ற கேள்வி அதிமுக மட்டுமல்ல, பிற கட்சிகள் இடையேயும் நிலவுகிறது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளார்கள்.
பன்னீர்செல்வம் தரப்போ, ‘நீண்ட சட்டப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தற்போதுள்ள நிலைமை நிலவுகிறது. இந்த நிலையில் எடப்பாடி தரப்பு கொடுக்கும் தகவல்களை வைத்து சபாநாயகர் முடிவெடுக்கக் கூடாது’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பரபரப்பான நிலையில்தான் நேற்று அக்டோபர் 16ஆம் தேதி மாலை அதிமுக தலைமை கழகத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களோடு ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.
இந்த கூட்டத்தில் அதிமுகவின் 51 வது ஆண்டு நிறுவன தின விழாவை கொண்டாடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி இன்று காலை 8.30 மணி அளவில் அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமைக் கழகத்திற்கு வந்துவிட வேண்டும் என்றும்,
அங்கே எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடி ஏற்றி வைத்துவிட்டு அதன் பிறகு சட்டமன்றத்திற்கு புறப்பட்டுச் செல்வது என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் பன்னீர்செல்வத்திற்கு சபாநாயகர் எந்த இருக்கையை ஒதுக்குகிறார் என்ற கேள்வி நேற்றைய கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
‘இந்த நேரத்தில் சட்டமன்றத்திற்குள் அதிரடி செய்ய சி.வி.சண்முகம் இல்லாமல் போய்விட்டாரே?’ என்றும் சில எம்எல்ஏக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
நேற்று நடந்த கூட்டம் சென்னையில் இருந்தவர்களை வைத்து நடந்த ஆலோசனை கூட்டம் தான் என்றும்… அதிமுக எம்எல்ஏக்களில் பலர் நேற்று இரவு தான் சென்னை வந்ததால் இன்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
அதிமுக தலைமை கழகத்தில் கொடியேற்றி வைத்துவிட்டு தனது பெரும்பான்மை ஆதரவு எம்.எல்.ஏக்களோடு சட்டமன்றத்திற்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி… அங்கு ஏற்படும் சூழ்நிலையை பொறுத்து உடனடியாக வெளிநடப்பு செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
வணங்காமுடி
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை: சட்டப்பேரவையில் இன்று முடிவு!
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: எடப்பாடி ஆலோசித்தது என்ன?