சபாநாயகருடன் சந்திப்பு: சட்டப்பேரவையில் பங்கேற்பாரா எடப்பாடி

Published On:

| By Prakash

சபாநாயகருடனான சந்திப்புக்குப் பிறகு சட்டப்பேரவையில் பங்கேற்பது பற்றி பழனிசாமி தரப்பு முடிவு செய்ய இருக்கின்றனர்.

தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (அக்டோபர் 17) கூடியது. அப்போது முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு, சட்டசபை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அவரது தரப்பு எம்.எல்.ஏக்களும் நேற்றைய சட்டசபை கூட்டத்தொடரைப் புறக்கணித்தனர்.

அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், பன்னீர்செல்வம் அவரது இருக்கையிலேயே அமர்ந்தார்.

இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்திற்குப் பிறகு இரண்டு நாட்கள், அதாவது இன்றும் நாளையும் (அக்டோபர் 18 மற்றும் 19) கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று (அக்டோபர் 18) தொடங்கப்பட இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியன சட்டமன்றத்தில் வெளியிடப்படுகிறது.

இந்தச் சூழலில்தான் இன்று தலைமைச் செயலகத்தில் வருகை தந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்துள்ளனர்.

சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு உடன் பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், ’எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர்செல்வத்துக்கு பதில் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை நியமிக்க கோரியதை அங்கீகரிக்க வேண்டும்’ என வலியுறுத்தி வருகின்றனர்.

சபாநாயகருடனான சந்திப்புக்குப் பிறகு சட்டப்பேரவையில் பங்கேற்பது பற்றி பழனிசாமி தரப்பு முடிவு செய்ய இருக்கின்றனர்.

ஜெ.பிரகாஷ்

நாட்டின் பல இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

மும்பை இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share