கோட்டையைப் பற்றி கனவுகூட காணாதீர்கள்: எடப்பாடிக்கு டி.ஆர்.பாலு பதில்!

Published On:

| By Prakash

“எடப்பாடி பழனிசாமி கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம்” என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

சேலம் அதிமுகவின் கோட்டை என்றும், சேலத்தைப்போன்று பிற பகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தால், அதிமுக ஆட்சியைப் பிடித்திருக்கும் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, இன்று (ஜூலை 16) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சொந்த கட்சியில் ஆதரவு தேடும் பழனிசாமி அதிகார சண்டையை மறைக்க திமுக மீது பாய்கிறார். முந்தைய அரசின் திட்டங்களைப்போல் கிடப்பில் போடாமல் நிறைவேற்றுவதுதான் திமுக அரசின் சிறப்பு. முந்தைய ஆட்சிக்காலத்தில் முடிக்காமல் கிடப்பில் போட்ட திட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்குப் பலன் தரச் செய்வதுதான் கழக ஆட்சி. உங்களைப் போல மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை முடக்கிப் போடும் ஆட்சியல்ல.

அண்மையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதே சேலம் மாவட்டத்தில் அதிமுக மண்ணைக் கவ்வியிருக்கிறது. அதே மக்களின் பேராதரவுடன் சேலம் மாவட்டம் திமுக கோட்டையாகத் திகழ்கிறது. எடப்பாடி நகராட்சி உள்பட பெரும்பான்மையான இடங்களில் திமுகவும் தோழமைக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்றிருப்பதைப் பழனிசாமியால் தூக்கத்திலும் மறக்க முடியாது. சேலம் மட்டுமல்ல, தமிழ்நாடே இப்போதும் இனி எப்போதும் திமுக கோட்டைதான்.

அதிமுக ஆட்சியில் கோட்டைக்குள் ரெய்டு, டிஜிபி அலுவலகத்தில் ரெய்டு, ஒவ்வொரு அமைச்சர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டுகளை நடத்திய பிஜேபி அரசை நோக்கி ஒரு வார்த்தைகூட இதுவரை பேச வாய் இல்லாத – முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தன் வயிற்றுப் பிழைப்புக்காக திமுகவைத் திட்டுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். கோட்டை பற்றி இனி கனவுகூட காணவேண்டாம். உங்களைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளை தமிழ்நாட்டு மக்கள் இனிமேல் கோட்டைக்குள் ஒருபோதும் நுழைய விடமாட்டார்கள். அதிமுகவை டெல்லி எஜமானர்களிடம் அடமானம்வைத்து, தன்னையும் தான் கொள்ளையடித்த சொத்துகளையும் பாதுகாத்துக்கொள்ளும் பழனிசாமி தலைமையிலான அட்டைக்கத்தி வீரர்கள் உங்கள் வெற்று வீரத்தை திமுகவிடம் காட்டி, தொடர்ந்து வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel