தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து இன்று (ஜூலை 20) தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக பார்க்கப்படுவது உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஆசியம்மாள் மாற்றப்பட்டு, புதிய ஐ.ஜியாக செந்தில்வேலன் நியமிக்கப்பட்டுள்ள நடவடிக்கைதான்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணம் அதைத் தொடர்ந்த போராட்டம், கலவரத்தைத் தொடர்ந்து, இது, உளவுத்துறையின் தோல்வி என விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் இன்று (ஜூலை 20) 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில் முதன்மை மாற்றமாக… உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஆசியம்மாள் மாற்றப்பட்டு, புதிய ஐ.ஜியாக டாக்டர் செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியம்மாள், அமலாக்கப் பிரிவு ஐ.ஜியாக மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்.
ஐ.ஜி. செந்தில்வேலன், மத்திய அரசின் உளவுப் பிரிவில் திறமையாகச் செயல்பட்டவர். தாய்லாந்து நாட்டில் இந்திய உளவுப் பிரிவில் இருந்த செந்தில்வேலன் அந்தப் பணிக் காலம் முடிவடைந்து சில நாட்கள் முன்புதான் தமிழகத்திற்கு மீண்டும் வந்தார்.
அவருக்கு போலீஸ் துறையில் நிறைய அனுபவங்கள் உண்டு. 2008 ஆம் ஆண்டு கடலூரில் ஏ.எஸ்.பி.யாக இருந்தபோது, அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர் சிவசாமி கொலை வழக்கை திறம்படக் கையாண்டவர். 2011ம் ஆண்டு பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை உறுதியாக சமாளித்தவர். அடிப்படையில் மருத்துவரான செந்தில்வேலன், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றவர். ஆனால் பின்னர், ஐ.பி.எஸ். தேர்வு எழுதி காவல் துறைக்கு வந்தார்.
கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்த இந்த நிலையை திறமையாகச் சமாளிக்கூடிய திறமை செந்தில்வேலனுக்கு உண்டு என்ற நம்பிக்கையில்தான், உளவுப்பிரிவின் புதிய ஐ.ஜியாக தமிழக அரசு அவரை நியமித்துள்ளது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி என்ற பெருமை பெற்ற ஆசியம்மாள், இந்த முக்கியப் பதவியில் இருந்து மாற்றப்படுவதற்கு காரணம், கள்ளக்குறிச்சி சம்பவத்தை சரியான முறையில் கையாளவில்லை என்பதால்தான் என்கிறார்கள்.
வணங்காமுடி