தமிழ்நாட்டில் இருந்து இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்காக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளராக அழைக்கப்பட்டுள்ளார். அதேபோல நீரஜ் மிட்டல் ஐ.ஏ.எஸ். மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை செயலாளராக டெல்லி செல்கிறார். இதற்கு மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு நேற்று (ஆகஸ்ட் 31) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இரு அதிகாரிகளில் தமிழக அரசின் தொழில்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சின் டெல்லி பணிமாற்றம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் சர்ச்சைகளில் அடிபடாதவரான கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சிகளில் வரிசையாக தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை நிர்வகித்து வந்தவர் என்பதால் இவரது டெல்லி பயணம் பேசுபொருளாகியுள்ளது.
யார் இந்த கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.? இவரது மத்திய அரசுப் பணிக்கான பின்னணி என்ன? பத்து பாயின்ட்டுகளில் பார்ப்போம்.
1. கிருஷ்ணன் கேரியர்
புதுக்கோட்டையை சேர்ந்த கிருஷ்ணன், ஜூன் 29, 1967-ல் பிறந்தவர். இளநிலை வரலாறு (ஹானர்ஸ்) பட்டப்படிப்பையும், பொருளாதாரத்தில் முதுநிலை பட்டப்படிப்பையும் படித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு மொழிகள் தெரியும். தமிழ் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். இவரது தந்தை சரண்யன், ஆந்திர கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். கிருஷ்ணன் 1989 கேடர் ஐ.ஏ.எஸ், அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மிகவும் திறமையான, நேர்மையான அதிகாரி. அதேசமயம், ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப திறமையாக செயல்படுபவர். இது வரை காண்ட்ராவெர்சியில் சிக்காதவர் ; கெட்டப்பெயர் எடுக்காதவர்.
ஐ.ஏ.எஸ். சில் இவர் தேர்வானதும் கோவை மாவட்ட உதவி கலெக்டராக (பயிற்சி) முதன் முதலில் பணியில் சேர்ந்தார் கிருஷ்ணன். 1990 ஜூன் முதல் 1991 ஆகஸ்ட் வரை உதவி கலெக்டர். ஆகஸ்ட் 1991 முதல் செப்டம்பர் 1992 வரை சப் கலெக்டராக கடலூரில் நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு அண்டர் செக்ரட்டரி, டெபுடி செக்ரட்டரியாக நிதித்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையில் உறுப்பினர் செயலாளராக பணியாற்றியிருக்கிறார். மாவட்ட ஆட்சியராக முதல் வாய்ப்பு இவருக்கு விருதுநகர் மாவட்டம் கிடைத்தது. விருதுநகர் மாவட்ட கலெக்டராக 1997-ல் இவரை நியமித்தார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர். மூன்று வருடம் கலெக்டராக விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றியவர் கிருஷ்ணன். அதன்பிறகு இணை செயலாளராக நிதித்துறையில் பணியாற்றிய கிருஷ்ணனை முதன்முறையாக 2000 ஜூலையில் மத்திய அரசு டெல்லிக்கு அழைத்துக் கொண்டது. 4 ஆண்டுகள் டெபுடி டைரக்டர் அந்தஸ்தில் இருந்தார் கிருஷ்ணன்.
2. கிருஷ்ணனை கண்டுபிடித்த மன்மோகன்
மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு 2004-ல் அமைந்தபோது, ஜூன் 2004 முதல் மார்ச் 2007 வரை அன்றைய நிதித்துறை அமைச்சரின் தனிச் செயலாளராக (ப்ரைவேட் செக்ரட்டரி) பணியாற்றினார் கிருஷ்ணன். இவரது பொருளாதார அறிவை அறிந்துகொண்ட அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் தான், நிதித்துறை அமைச்சரின் தனிச் செயலாளராக நியமித்தார்.
மன்மோகன்சிங், பொருளாதார மேதை. அந்த வகையில், அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் நகரில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (இண்டர்நேஷனல் மானட்டரி ஃபண்ட்) நிர்வாக இயக்குநரின் சீனியர் அட்வைசர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக நடந்த ஆலோசனையில், யாரை நியமிக்கலாம் என விவாதிக்கப்பட்ட போது கிருஷ்ணனை தேர்வு செய்தார் மன்மோகன்சிங். மார்ச், 2007 முதல் டிசம்பர் 2010 வரை வாஷிங்டனில் ஐ.எம்.எஃப்.பில் பணியாற்றினார் கிருஷ்ணன்.
3. மன்மோகன் -கலைஞர் இடையே பாலம்!
தமிழகத்தில் 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தது. கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியின் நிதித்தொடர்பான பிரச்சனைகள் மத்திய அரசின் கவனத்துக்கு செல்லும் போதெல்லாம் நிதித்துறை அமைச்சருடன் மட்டுமல்லாமல் கிருஷ்ணனிடமும் விவாதித்து உடனடி தீர்வு காண்பார் மன்மோகன்சிங். அதேபோல, மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குரிய நிதியை உடனடியாக பெற்றுத்தருவதற்கு கிருஷ்ணனிடம் பலமுறை விவாதித்துள்ளார் அன்றைய முதல்வர் கலைஞர். கலைஞரிடமிருந்து ஒரு உத்தரவு வந்தால் அதனை பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்த்து வைத்ததில் பெரும் பங்கு கிருஷ்ணனுக்கு உண்டு. திறமையான அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசு பணிகளுக்கே சென்று விட்டால் தமிழகத்திற்கு என்னதான் பலன்? என்று ஒருமுறை தனது செயலாளர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார் கலைஞர். அவரது கேள்வி சரியானது என உணர்ந்த அவரது செயலாளர்கள், திறமையான அதிகாரிகளை தமிழகத்திற்கு அழைத்துக் கொள்வது தேவையாக இருக்கிறது என கலைஞரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
4. மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்த கலைஞர்
அந்த வகையில், மத்திய அரசு பணியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அழைக்கப்பட்ட முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக கிருஷ்ணனை தேர்வு செய்தார் கலைஞர். வாஷிங்டனில் சர்வதேச கண்காணிப்பு நிதியத்தின் சீனியர் அட்வைஸராக இருந்த கிருஷ்ணனை, ஜனவரி 2011-ல் மாநில அரசு பணிக்கு அழைத்து வந்து அவரை வணிகவரித்துறையின் கமிஷனராக நியமித்தார் கலைஞர். அப்போது மரியாதை நிமித்தமாக கலைஞரை கிருஷ்ணன் சந்தித்து வாழ்த்துப்பெற்ற போது, ’2011 தேர்தலிலும் திமுக வெற்றி பெறும், அப்போது நிதித்துறை செயலாளர் நீதான்யா’ என்று உரிமையோடு சொன்னவர் கலைஞர்.
5. ஜெயலலிதாவிடம் கிருஷ்ணன் போட்ட கண்டிஷன்
கலைஞர் சொன்னபடி 2011 தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனாலும் கலைஞரின் வார்த்தை பலித்தது. கலைஞரைப் போல் ஜெயலலிதாவும் கிருஷ்ணனைப் பற்றி அறிந்துகொண்டதால்… 2011-ல் ஆட்சியை பிடித்த ஜெயலலிதா, நிதித்துறையின் (செலவினங்கள்) முதன்மைச் செயலாளராக கிருஷ்ணனை நியமித்தார். இந்த மாற்றத்தை கவனித்த கலைஞர், நிதித்துறைக்கு சரியான நபரை நியமித்திருக்கிறார் அந்த அம்மையார் என்று ஆற்காட்டாரிடம் சொன்னதை திமுக சீனியர்களே சொல்கிறார்கள்.
ஜெயலலிதா ஆட்சியில் ஜூலை 2011 முதல் ஜூலை 2013 வரை நிதித் துறையின் (செலவினங்கள்) முதன்மை செயலாளராக இருந்தார் கிருஷ்ணன். பொதுவாக, அதிகாரிகளை அடிக்கடி பந்தாடுபவர் என்ற விமர்சனம் ஜெயலலிதாவுக்கு உண்டு. அதை உடைத்தவர் கிருஷ்ணன். அதாவது, 2 ஆண்டுகள் ஒரே துறையில் இருந்தவர் இவர்தான்.
இதற்கும் ஒரு பின்னணி உண்டு. “நிதித்துறையில் நியமிக்கப்பட்டதும் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த கிருஷ்ணன், ஜெயலலிதாவிடம், மேடம் ஒரு விசயம் சொல்லலாமா? என கேட்க, தைரியமாக சொல்லுங்கள் என்றார் ஜெயலலிதா. அப்போது பேசிய கிருஷ்ணன், ‘நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகளை அடிக்கடி நீங்கள் மாற்றுகிறீர்கள் என்ற எதிர்மறை விமர்சனம் உங்கள் மீது இருக்கு மேடம். ஒரு அதிகாரி ஒரு துறையில் நியமிக்கப்பட்டால் அவரை 2 வருடங்களாவது அதே துறையில் பணியாற்ற அனுமதியுங்கள். அப்போதுதான் அவரது ஆற்றல் துறைக்கும் அரசுக்கும் பயன்படும். நிதித்துறையில் பெரும் பொறுப்பில் என்னை நியமித்துள்ளீர்கள். குறைந்தபட்சம் 2 வருடங்களாவது இந்த பதவியில் இருக்க வேண்டும். அது சாத்தியமில்லை என கருதினால் இந்த துறையில் என்னை நியமிக்காதீர்கள் மேடம்’ என ஜெயலலிதாவிடமே நேருக்கு நேர் சொன்னவர் கிருஷ்ணன்.
இதைப் புரிந்துகொண்ட ஜெயலலிதா… எத்தனையோ அதிகாரிகளை மாற்றியவர், கிருஷ்ணனை மட்டும் தொந்தரவு செய்யவே இல்லை. மிகச்சரியாக இரண்டு வருடங்கள் கழித்து, கிருஷ்ணனை திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றினார் ஜெயலலிதா. தனது அரசின் திட்டங்கள் பேசப்பட வேண்டும் ; திட்டங்களால் மாநிலத்தில் வளர்ச்சி பெருக வேண்டும் என்பதற்காகவே இத்துறையில் 2013 ஜூலையில் நியமித்தார் ஜெயலலிதா. 2016-ல் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த ஜெயலலிதா, பல அதிகாரிகளை மாற்றிய நிலையிலும் அந்த துறையில் இருந்து கிருஷ்ணனை மட்டும் மாற்றவே இல்லை.
6. கிருஷ்ணனின் நிர்வாக ஸ்டைல்
தனக்கு இணையான அதிகாரிகளாக இருந்தாலும், ஜூனியர் அதிகாரிகளாக இருந்தாலும், ஐ.ஏ.எஸ். அல்லாத அதிகாரிகளாக இருந்தாலும் அனைவருக்கும் மரியாதை கொடுப்பவர். உட்கார வைத்து பேசுவார். துறை சார்ந்த மீட்டிங் இருந்தால், அதிகாரிகளிடம் நிறைய கேள்விகளை முன் வைத்து விவாதிப்பார். எந்த ஒரு கோப்புகள் அவரது பார்வைக்கு வந்தாலும் அதனை நிலுவையில் வைத்ததில்லை. உடனுக்குடன் க்ளியர் செய்பவர் கிருஷ்ணன். அதேபோல் எந்த ஒரு விவகாரமானாலும் உடனடியாகவும் விரைவாகவும் முடிவு எடுப்பதில் அசகாய சூரர். அதாவது ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் இவருக்கு அதிகம் உண்டு என்கிறார்கள் ஜூனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். அதேசமயம், ஒரு கோப்பினை உடனடியாக க்ளீயர் செய்து அனுப்புங்கள் என அமைச்சர் உத்தரவு போடுகிறார் எனில், அந்த கோப்பு தொடர்பான பொருள், அரசுக்கும் அமைச்சருக்கும், தனக்கும் கெட்டப் பெயரை ஏற்படுத்தும் என்பதை தெரிந்தால் அந்த கோப்பினை க்ளியர் செய்ய மறுத்துவிடும் குணம் இவருக்கு உண்டு. அதனாலேயே இடம் மாறுதலையும் எதிர்கொண்டார் கிருஷ்ணன்.
7. எடப்பாடி ஆட்சியில் ஏற்பட்ட நெருடல்!
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறையின் முதன்மைச் செயலாளராக இருந்தார் கிருஷ்ணன். அப்போது தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கும் கிருஷ்ணனுக்கும் அப்ரூவல் விவகாரத்தில் முட்டல் மோதல் நடந்தது. அதனையறிந்த நிதி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சரான ஓபிஎஸ்., கிருஷ்ணனுக்காக சண்முகத்திடம் மல்லுக்கட்டினார். ஆனால் ஓபிஎஸ் சின் சமாதானத்தை ஏற்காத தலைமைச் செயலாளர் சண்முகம்… வீட்டுவசதி துறையிலிருந்து நிதித்துறையின் முதன்மை செயலாளராக கிருஷ்ணனை இடமாற்றினார்” என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
8. தொடர்ந்த நிதித் துறையில் இருந்து தொழில் துறை
தலைமைச்செயலாளராக 2019 டிசம்பரில் கிருஷ்ணனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட பிறகும், நிதித்துறையிலேயே தொடர்ந்து பணியாற்றினார். திமுக ஆட்சி 2021-ல் அமைந்த போதும் கூட உடனடியாக, நிதித்துறையில் இருந்து இவர் மாற்றப்படவில்லை. 2021 நவம்பர் மாதம் தான் இவரை தொழில்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இடமாற்றினார் முதல்வர் ஸ்டாலின். இப்போது வரை இதே துறையில் இருக்கிறார் கிருஷ்ணன். தொழில்துறையின் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கும் கிருஷ்ணனுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனது. அதே கெமிஸ்ட்ரி தொழில் துறையின் தற்போதைய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவிடமும் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் தங்கம் தென்னரசுவிடம் இருந்த அளவுக்கு 100 % இருப்பதாகச் சொல்ல முடியாது என்றும் தகவல்கள் கிடைக்கின்றன. சில முரண்பாடுகள் அமைச்சருக்கும் இவருக்கும் இருக்கிறது என்கிறார்கள் தொழில் துறை அலுவலர்கள்.
9. தலைமைச் செயலாளர் பதவி கிடைக்காதது காரணமா?
2019 டிசம்பரில் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட நிலையில்… சில மாதங்களுக்கு முன்பு வெ. இறையன்பு தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் கிருஷ்ணன் தலைமைச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் பேசப்பட்டது. கிருஷ்ணனும் தலைமைச் செயலாளர் பதவியை விரும்பினார். இது தொடர்பாக அவர் முதலமைச்சர் ஸ்டாலினிடமும் கூட பேசியிருந்தார். ஸ்டாலினும் இது தொடர்பாக கிருஷ்ணனிடம் சில வாக்குறுதிகளை அளித்தார் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்கிறார்கள். ஆனாலும் இறையன்பு பணி ஓய்வு பெற்ற பிறகு தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான் மீண்டும் மத்திய அரசுப் பணிக்கே செல்ல கிருஷ்ணன் விரும்பி அதை தெரிவிக்க வேண்டிய இடத்தில் தெரிவித்தார் என்றும் அதையடுத்தே அவர் மீண்டும் தற்போது மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார் என்றும் கோட்டை அதிகாரிகள் முணுமுணுக்கிறார்கள்.
10. அழைத்து வந்த கலைஞர்… அனுப்பி வைக்கும் ஸ்டாலின்
2011 இல் அமெரிக்காவில் பணியாற்றிய கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் தமிழ்நாட்டு பணிக்கு அழைத்து வந்தார். இப்போது ஸ்டாலின் ஆட்சியில் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார். தமிழ்நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடியான சூழலில் கிருஷ்ணனைப் போன்ற அதிகாரிகளின் ஆலோசனைகள் கண்டிப்பாக தேவை. குறிப்பாக வரும் ஜனவரி 2024 இல் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கும் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான பணிகளில் கிருஷ்ணன் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில்தான் இப்போது மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
விண்ணில் பாய தயாரானது ஆதித்யா எல் 1!
கவுதம சிகாமணி வழக்கு: சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!
Ithai madiri ai PTR anupividuvaargalo entru thonukirathu