”முதலமைச்சராக மட்டுமின்றி, நானும் ஒரு டெல்டாக்காரன் என்ற முறையில் மத்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது” என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 5) சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஏல விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பேசினர்.
அதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு மத்திய அரசின் அறிவிப்பாணை செய்தி கேட்டு உங்களை போலவே நானும் அதிர்ச்சிக்கு ஆளானேன்.
உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தின் நகலை நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கு அனுப்பினேன்.
அவரிடம் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து நம்முடைய எதிர்ப்பை, பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நீங்கள் அவரிடம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டேன். அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் சம்பந்தப்பட்ட மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் வெளியூரில் இருக்கின்ற காரணத்தால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. எனவே டி.ஆர்.பாலு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அப்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு நிச்சயமாக நாங்கள் மதிப்பளிப்போம். கவலைப்பட வேண்டாம்.” என்று மத்திய அமைச்சர் தெரிவித்ததாக டி.ஆர்.பாலும் என்னிடம் கூறினார்.
எனவே முதலமைச்சராக மட்டுமின்றி, நானும் ஒரு டெல்டாக்காரன் என்ற முறையில் அங்கு அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என்பதை உறுதியாக தெரிவித்துகொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனை கூறியதும், அவையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி முதல்வரின் கருத்துக்கு வரவேற்பளித்தனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
கரன்ட்டை விட சோறுதான் முக்கியம்: நிலக்கரி விவகாரத்தில் வானதி