14 புதிய தொழில் முதலீடு, 46,000 பேருக்கு வேலைவாய்ப்பு… அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

அரசியல்

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (அக்டோபர் 8) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ரூ.38,698 கோடி மதிப்பிலான 14 புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, “இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.38,698 கோடி மதிப்பீட்டில் 14 புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 46,931 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மின்னணு துறை, குறைந்த மின் அழுத்த பேனல்கள், மொபைல் போன் தயாரிப்புக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள், உயர்தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென் பொருட்கள், பாதுகாப்புத்துறை உபகரணங்கள், மருத்துவத்துறை ஊசி மருந்துகள், தோல் அல்லாத காலணிகள் தயாரிப்பு, பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த 14 முதலீடுகள் பெறப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 9 ஆயிரம் கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி நிறுவனத்தில் 13,180 கோடி முதலீட்டில் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் பிஎஸ்ஜி குழுமத்தின் லீப்பிரின் எனர்ஜி நிறுவனத்தில் 10,375 கோடி முதலீட்டில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீம் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ஃபிரி டிரெண்டிங் நிறுவனத்தில் 1000 கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும் இந்த முதலீடுகள் வரப்பெற்றிருக்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன் சர்க்யூட் நிறுவனத்தில் 1,395 கோடி முதலீட்டில் 1033 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய வகையிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அசன் சர்க்யூட் நிறுவனத்தில் 612 கோடி முதலீட்டில் 1, 200 பேருக்கு குறிப்பிடத்தக்க வகையில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் முதலீடுகள் பெறப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

10 மாவட்டங்களில் கனமழை: எங்கெங்கு தெரியுமா?

வினேஷ் போகத் வெற்றி… 20 ஆண்டுகளுக்கு பிறகு ஜுலானா தொகுதியை பிடித்த காங்கிரஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0