தமிழ்நாட்டுக்கு ‘திரும்பினார்’ ஆளுநர் ஆர்.என்.ரவி

அரசியல்

தமிழ்நாடு அரசின் இலச்சினை, தமிழ்நாடு என அச்சிட்டு ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், திராவிடம், புதிய கல்விக் கொள்கை, சனாதனம், ஆரியம், பட்டியலின மக்கள், திருக்குறள் ஆகியவை குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கின. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கையெழுத்திட்டு ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் கடிதம் கொடுத்தனர்.


மாநில ஆளுநர்களைத் தகுதி நீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யக்கோரும் தனிநபர் மசோதாவை திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தாக்கல் செய்தார்.

இவ்வாறு ஆளுநருக்கும் அரசு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று அழைப்பதை விடத் தமிழகம் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் திமுக கூட்டணி அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று குரல் எழுப்பினர். அப்போது ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் அழைப்பிதழிலும் தமிழ்நாடு என்பதற்குப் பதிலாகத் தமிழக ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் இலச்சினைக்குப் பதில் இந்திய அரசின் இலச்சினை இடம் பெற்றிருந்தது.

இதற்குக் கண்டனம் தெரிவித்ததோடு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பொங்கல் விழாவைப் புறக்கணித்தன. அதோடு தமிழ்நாடு சர்ச்சை குறித்து டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி அடங்கிய குழுவினர் குடியரசுத் தலைவரைச் சந்தித்து ஆளுநருக்கு எதிராக மனு கொடுத்தனர்.

இதன்பின் டெல்லி சென்று வந்த ஆளுநர் உடனடியாக தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சை குறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டார்.


அதில், “காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்கத் தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது கண்ணோட்டத்தைத் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ, அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பாடு” என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் வரும் 26ஆம் தேதி குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஆளுநர் வெளியிட்ட அழைப்பிதழ் பேசுபொருளாகியுள்ளது.


பொங்கல் விழா அழைப்பிதழில் இந்திய அரசின் இலச்சினையும், தமிழக ஆளுநர் என்றும் குறிப்பிட்டிருந்த நிலையில், குடியரசு தின விழா அழைப்பிதழில், தமிழ்நாடு அரசின் இலச்சினையும், தமிழ்நாடு ஆளுநர் என்றும் திருவள்ளுவர் ஆண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

பிரியா

பிக் பாஸ்: சலசலப்பை ஏற்படுத்திய அசீமின் வெற்றி!

கிச்சன் கீர்த்தனா: அவரைக்காய் பிரியாணி!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.