அமெரிக்காவில் இருந்து இ-ஆபீஸ் வழியே அரசு பணியை மேற்கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (செப்டம்பர் 6) கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இதுவரை எவ்வளவு கோடி முதலீடுகள் செய்யப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டோம். ஆனால் முடியாது என்கிறார்கள். மக்கள் தெரிந்துகொள்வதற்காக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நோக்கியா, பேபால், ஆப்டம், நைக் என ஏற்கனவே தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த தொழிற்சாலைகளுடன் தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று கூறினார்.
மேலும் அவர், “தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் வெளிநாட்டில் சென்று சைக்கிள் ஓட்டுவது, ஜிம்முக்கு செல்வது என இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் என பரவலாக செய்திகள் வருகிறது. இதுகுறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும். இது அவரது கடமை” என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 7) ஒரு பதிவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அதில், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன.
அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் e_office வழியே பணி தொடர்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, BNY Mellon நிறுவனத்துடன் AI முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது என்று மற்றொரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை சான்பிரான்சிஸ்கோவில் 1300 கோடி, சிகாகோவில் 3050 கோடி ரூபாய் முதலீட்டு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Paralympics 2024: பாரிஸில் புதிய சாதனை படைத்த இந்தியா!
இறங்கிய தங்கம் விலை… இன்றைய நிலவரம்!