மணல் குவாரி சோதனை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 24) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் குவாரிகளில் மணல் எடுப்பதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் படி கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்தையா மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிது.
இதனை தொடர்ந்து நவம்பர் 20-ஆம் தேதி முத்தையா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
இந்தநிலையில் சுரங்கம் மற்றும் தாதுக்கள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது. எனவே மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்புவதற்கும், விசாரணை நடத்துவதற்கும் அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர மோகன் அமர்வில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் முறையீடு இன்று செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்தனர். தமிழக அரசு தரப்பில் அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக இன்றைய தினமே மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நவம்பர் 27-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நிர்மலா சீதாராமன் மக்களை குழப்புகிறார்: ஸ்டாலின் தாக்கு!
மன்னிப்பு கேட்ட கௌதம்: துருவ நட்சத்திரம் ரிலீஸ் கேன்சல்!