அமைச்சர் கே.என்.நேரு பொது இடங்களில் வெளிப்படையாக இயல்பாகவே இருந்து பழகியவர். இதனாலேயே அவரை ஒருமையில் பேசிவிட்டார், இவரை ஒருமையில் பேசிவிட்டார் என்றெல்லாம் இன்றைய சமூக ஊடக காலங்களில் விமர்சனத்துக்கு ஆளானவர். சென்னையில் மேயர் பிரியாவை, அமைச்சர் நேரு ஒருமையில் பேசி மிரட்டியதாக ஒரு வீடியோ வெளியானது. அதற்கு மேயர் பிரியா, ‘அமைச்சர் என் தந்தையை போன்றவர். அந்த உரிமையில் பேசினார்’ என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 10) சேலத்தில் மீண்டும் தன் சக அமைச்சரான தா.மோ. அன்பரசனை மிகவும் வெளிப்படையாக ஒருமையில் பேசியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
சேலம் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் வியாபாரிகள் மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தொழிலாளர் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனும், மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் அமைச்சர் கே.என்.நேருவும் கலந்துகொள்வதற்காக வந்தனர்.
கூட்டத்திற்கு முன்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைக்க வந்தனர், கண்காட்சியின் முன் ரிப்பன் கட்டப்பட்டு தயாராக இருந்தது. கத்திரிக்கோலை எடுத்த அமைச்சர் கே.என்.நேரு அதை தா.மோ. அன்பரசனிடம் கொடுத்து, ‘நீ தொறய்யா…’ என்றார். அதற்கு தா.மோ.அன்பரசன், ‘நீங்களே தெறங்க….’ என்று சொல்கிறார். அப்போது சிரித்துக் கொண்டே அமைச்சர் நேரு, ’தொறய்யா… ஒரு வேலையுமே செய்யாம மந்திரியா இருப்பியா?’ என்று அன்பரசனை நோக்கி சிரித்துக் கொண்டே சொல்லி அவரிடமே கத்திரிக்கோலை கொடுத்து கண்காட்சியை திறந்து வைக்கச் செய்தார்.
நேரு தன் சக அமைச்சரை நோக்கி கிண்டலாக பேசியது அங்கே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
–ஆரா
10% இடஒதுக்கீடு: இறுதி தீர்ப்பை காங்கிரஸ் ஏற்கும்!
குஜராத் தேர்தல்: மனைவியா… சகோதரியா – ஜடேஜா யார் பக்கம்?
.