செந்தில் பாலாஜி கைது: சிபிஐக்கு ஸ்டாலின் வைத்த செக்!

Published On:

| By Monisha

cancell permission to cbi

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிஐ-க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியைத் திரும்ப பெறுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நேற்று (ஜூன் 13) காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர், “நெஞ்சுவலி ஏற்படும் அளவிற்கு நெருக்கடி கொடுத்து, மனிதநேயமற்ற முறையில் பாஜகவின் அமலாக்கத்துறை நடந்து கொண்டுள்ளது” என்று கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) வழங்கப்பட்டிருந்த பொதுவான அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை, இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது.

இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற்று, விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

இந்தோனேசியா ஓபன்: இந்திய வீரர்கள் மோதல்!

”கெட் வெல் சூன்”: ரிஷப் பண்டை உற்சாகப்படுத்தும் ரசிகர்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share