சிறப்புக் கட்டுரை: வள்ளுவரை மிஞ்சுகிறதா கலைஞரின்  திராவிட எழுதுகோல்? 

அரசியல்

‘என்னிடமிருந்து செங்கோலைக்கூட பறித்துக்கொள்ள முடியும்; ஆனால் எவரும், எந்த சக்தியும் எனது எழுதுகோலைப் பறித்துவிட முடியாது’  என்பது கலைஞரின் புகழ் மிக்க பொன்மொழிகளில் ஒன்று. கலைஞரின் மொழி அவரது காலத்தைத் தாண்டியும்  பலிக்கும் என்பதற்கு  இதோ மெரினா கடலில் அமைய இருக்கும் கலைஞரின் பேனா நினைவுச் சின்னமே  சாட்சி.

2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி  காலமான கலைஞருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஸ்டாலின் தலைமையிலான அரசு, அவருக்குப் பல்வேறு இடங்களில் சிலைகளை நிறுவிவருகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் கலைஞருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. 

மேலும், கலைஞரின்  எழுத்தாற்றலைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு, கடலில் 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா போன்ற நினைவுச் சின்னத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் அரசு சார்பில் கலைஞருக்கு, நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2.23 ஏக்கர் பரப்பளவில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மெரினாவில்  உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தொலைவில் கடலுக்குள்  134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா போன்ற நினைவுச் சின்னத்தை நிறுவ தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த நினைவுச் சின்னத்தைப் பொதுமக்கள் காணும்வகையில் கலைஞரின் நினைவிடத்தில் இருந்து அதாவது அவருடைய நினைவிடத்தின் பின்பக்க கேட்டிலிருந்து, நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் (மொத்தம் 650 மீட்டர்) அமையும் வகையில் ஒரு பாலம்  கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என்று பெயரிடப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞர், அரசியல் மட்டுமல்லாது, எழுத்திலும் சிறந்த ஆளுமையாகத் திகழந்தார். அவருடைய எத்தனையோ இலக்கியங்கள் இன்றும் பெயர் சொல்லும் அளவுக்கு விளங்கி வருகின்றன. அப்படிப்பட்ட கலைஞருக்கு இந்த பேனா நினைவுச் சின்னத்தை கடலில் வைப்பதற்குத்தான் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. என்றாலும் கலைஞரை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு இந்தப் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த சின்னம் மிகச் சிறந்த சுற்றுலா மையமாகவும் விளங்கும் என்கிறார்கள் நோக்கர்கள்.

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “80 ஆண்டு பொது வாழ்க்கையில் கலைஞர் எழுதாத எழுத்தில்லை; பேசாத பொருளில்லை. அவருடன் இணைந்த எழுதுகோல் சின்னமான – வலிமை வாய்ந்த கருத்தாயுதமான பேனாவை அடையாளப்படுத்தி ஒரு நினைவுச் சின்னத்தை பேனா வடிவில் 134 அடி உயரத்தில், கடலுள் கண்ணாடிப் பாலம் மூலம் சென்று பார்த்து வியக்கும் அருமையான ஒரு சின்னத்தை தமிழ்நாடு அரசு சார்பில் வைப்பது மிகப் பொருத்தமே ஆகும்” என்கிறார்.
மேலும் அவர், “இது கலைஞர் என்ற ஒரு தனி மனிதருக்கான சிறப்பு மட்டுமல்ல; எழுத்துரிமையில் எதனையும் எதிர்கொண்டு வென்றுகாட்ட முடியும் என்ற சரித்திர உண்மைக்காகவும், சாசுவதமான சரித்திரச் சான்றாகவே அது திகழும்” என்பதுடன், “வங்கக் கடற்கரையில் அந்த வரலாற்றுச் சின்னம் வைரமாக ஒளி பெறட்டும்” என்கிறார்.

இப்படி, ஒருபுறம் இந்த நினைவுச் சின்னத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கும் நிலையில், மறுபுறம் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் திருவள்ளுவரின் 133 அடியைவிட, ஓர் அடி (134) அதிக உயரத்துக்கு வைக்கப்படுவது ஏன்? கலைஞர் வைத்த திருவள்ளுவர் சிலையின் சாதனையை முறியடிக்கும் வகையில் இந்த நினைவுச் சின்னம் வைக்கப்படுகிறதா? என்ற கேள்விகள் பலரிடமும் எழுந்திருக்கின்றன.
இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடமே தொடர்புகொண்டு கேட்டோம். ”தலைவர் கலைஞருக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து தமிழக முதல்வரோ, பொதுப்பணித் துறை அமைச்சரோ யாரும் இதுவரை அறிவிக்கவில்லை. 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தவரே தலைவர் கலைஞர்தான். அப்படிப்பட்ட கலைஞரின் நினைவிடத்திலிருந்து அந்தப் பேனா நினைவுச் சின்னத்தைப் பார்ப்பதற்கான அளவு 134 அடியாக இருக்கலாம். அது, அதைவிட குறைவாகவும் இருக்கலாம் அல்லது அதிகரிக்கவும்படலாம். மொத்தத்தில் அது எத்தனை அடி என்பது இறுதிவடிவம் பெறும்போதுதான் தெரியவரும்” என்றார்.

குமரிக் கடலோர வள்ளுவரை விட சென்னைக் கடலோர கலைஞரின் பேனா உயரமா என்பது நிறுவப்படும்போது நிச்சயம் தெரியத்தான் போகிறது!
ஜெ.பிரகாஷ்

செப்டம்பருக்குள் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சு.

+1
0
+1
0
+1
0
+1
3
+1
3
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *