தமிழகத்தில் உள்ள கல்வி முறையை சிலர் குறை சொல்வதை எந்தநாளும் ஏற்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, ”தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது. பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசிய போது ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு குறித்த பார்வையும், அறிவுத்திறனும் குறைவாக இருந்ததை அறிந்து கொண்டேன்” எனத் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த கருத்து பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை வண்டலூரில் ஆசிரியர் தினத்தையொட்டி சிறந்த ஆசிரியருக்கான ’டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ வழங்கும் விழா இன்று (செப்டம்பர் 5) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் ஆளுநரின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார்.
அவர், “மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டுகிற கல்விமுறை தான் சிறந்த கல்விமுறை. அந்த வகையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டு கல்வி முறை தான் மாணவர்களை ஏன், எதற்கு என சிந்திக்க வைக்கக்கூடிய சிறந்த கல்விமுறையாக இருக்கிறது.
நம்முடைய தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த எத்தனையோ பேர் நாட்டின் முன்னணி மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக உள்ளனர். நம்முடைய பாடத்திட்டத்தில் படித்த வீரமுத்துவேல் தான் தற்போது இஸ்ரோவில் உயர் பொறுப்பை வகித்து வருகின்றார்.
அப்படி இருக்கும்போது, தமிழகத்தில் உள்ள கல்வி முறையை சிலர் குறை சொல்வதை எந்த நாளும் ஏற்க முடியாது. அப்படி குறை சொல்பவர்கள் நம்முடைய ஆசிரியர்களை, மாணவர்களை அவமதிப்பதற்கு சமம். அதனை தமிழக முதலமைச்சர் ஒருநாளும் அனுமதிக்கமாட்டார். மேலும் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான் வருங்காலத்தில் சாதிக்க போகிறார்கள்” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உடைந்து விழுந்த சிவாஜி சிலை… தள்ளிப் போகும் மகாராஷ்டிர தேர்தல் தேதி: பதற்றத்தில் மோடி…
கோட் படத்தில் ஒரு கார் வருது… அதுல ஒரு பேரு வருது!