“இன்னும் பேசுங்கள்” : ஆளுநருக்கு முதல்வர் சூடான பதில்!

அரசியல்

ஆளுநர் தினசரி இப்படி தொடர்ந்து பேச வேண்டும், அப்போது தான் நமக்கு எழுச்சி ஏற்படும் என்று காட்டமாக பதிலளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்த நிலையில், ‘நாம் கேட்பதால் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும், ஆளுநர் பேசியதற்கு பதிலளித்து பேசியுள்ளார்.

தேனாம்பேட்டையில் நடைபெற்ற நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், “கல்வியிலும், சுகாதாரத்திலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் மாநிலத்தில் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கக் கூடிய ஒருவருக்கு மட்டும் அது புரியவில்லை.

அவர் திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தொடர்ந்து தினம் தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களை குழப்பக்கூடிய வகையில் கூறி வருகிறார்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை அவர் தொடர்ந்து இப்படி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கும் ஒரு எழுச்சி ஏற்படும்.

நம்மை ஆளாக்கிய கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3ஆம் தேதியில் இருந்து கொண்டாட தொடங்கியிருக்கிறோம். இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட இருக்கிறோம். ஏனென்றால் இந்த அரசு அவருடைய அரசு.

கலைஞரின் பாதையில் நல்வாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்சி ஏற்றது முதல் நான் தொழில்துறை நிகழ்ச்சியில் தான் அதிகம் பங்கேற்கிறேன். அதற்கு அடுத்து மருத்துவ துறை நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.

கொரோனா தீவிரமாக பரவிய காலத்தில் தான் ஆட்சிக்கும் வந்தோம். அதனை கட்டுப்படுத்தினோம். அமைச்சர் மா.சுப்பிரமணியனின் பணி மாரத்தான் போன்று இருக்கும். அந்த சமயத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மட்டுமல்ல, அனைவரும் மருத்துவ துறை அமைச்சராகத்தான் இருந்தோம். அதனால் தான் கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி பெற்றோம். அதற்கு அதிகாரிகள் துணை நின்றார்கள்.

இந்திய அளவில் சுகாதாரத் துறையில் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. இதனை அவர் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.

பொதுவாக ஒரு மாநிலத்தின் வளர்ச்சி குறியீடுகளில் ஒன்றாக மக்கள் நல்வாழ்வு துறையும் உள்ளது. அதுமட்டுமின்றி தனிநபரின் சிகிச்சை செலவுகள் குறைவாக இருப்பதும், நம் மாநிலத்தின் மருத்துவ துறை சிறப்பினை வெளிப்படுத்துகிறது.

அந்த அடிப்படையில் தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் 3 கோடிக்கும் அதிகமானோர் தொடர் சேவைகளை பெற்று வருகின்றனர்.

இந்த திட்டத்தை உலக சுகாதார அமைப்பே பாராட்டியிருக்கிறது. இதையெல்லாம் குறை சொல்கிற அவர் படித்து பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பை அனைவரும் போற்றுகின்றனர்.

நான் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு முதலீட்டார்களை ஈர்ப்பதற்காக சென்றேன். இதைகூட எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்தார் என்பது உங்களுக்கு தெரியும். ஏனென்றால் அது அவர் புத்தி” என்று விமர்சித்தார்.

500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள்

தமிழ்நாட்டில், 2021-2022ல் 593 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள், 2022-23ல் 115 மையங்கள் என மொத்தம் 708 மையங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்றன.

இவற்றில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 140 உட்பட கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் என 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை ஜூன் 5ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்குள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மற்ற மாவட்டங்களில் உள்ள மையங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பிரியா

மோடியை கேட்பீர்களா ஆளுநரே?: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

மே மாத சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: யாருக்கு கிடைக்கும்?

mk stalin angry reply to Governor
+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *