இந்திய ஒற்றுமை பயணத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர், உயிரிழந்தது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது ராகுல், மகாராஷ்டிராவில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த யாத்திரையில், தமிழகத்தைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த கணேசனும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டார். காங்கிரஸ் தொண்டரான இவர், அக்கட்சியின் பல்வேறு பொறுப்புகளை ஏற்று, திருமணம் செய்துகொள்ளாமலேயே முழுநேர தொண்டராக கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார்.
இவர், குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு நடைப்பயணங்கள் தொடங்கி, தற்போதைய பாதயாத்திரை வரை அனைத்திலும் கலந்துகொண்டவர். இதனால் அவர், ‘யாத்திரை கணேசன்’ என கட்சியினரால் அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 11) அதிகாலை 2.30 மணியளவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், விபத்தில் கணேசன் உயிரிழந்தார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்ததுடன் இன்று தனது நடைபாதை தொடங்கிய போது மௌன அஞ்சலி செலுத்தினார்.
அவரது மறைவு குறித்து ராகுல் காந்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில், “எங்கள் சக யாத்ரி, ஸ்ரீபி.கணேசன் ஜி மறைவு ஆழ்ந்த வருத்தம். அவர் காங்கிரஸின் அர்ப்பணிப்புள்ள ஊழியர், அவர் கடந்த 3 தசாப்தங்களாக கட்சியின் ஒவ்வொரு யாத்திரை மற்றும் பிரச்சாரத்திலும் பங்கேற்றார்.
பாரத் ஜோடோ யாத்திரையில் கட்சியின் உண்மையான வீரரையும், அன்புத் துணையையும் இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினருக்கும் நலம் விரும்பிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்காகவும் காங்கிரஸ் கட்சிக்காகவும் அவரது அர்ப்பணிப்பு நம் நாட்டை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நம் அனைவருக்கும் உத்வேகமாக பணியாற்றும்” என தெரிவித்துள்ளார்.

அதுபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை பயணத்தில் தம்மை இணைத்துக்கொண்ட யாத்திரை கணேசன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டபோது காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்பியும் தென்மாநிலங்களுக்கான நடைப்பயண பொறுப்பாளருமான ஜோதிமணி, “தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட இந்திய ஒற்றுமைப் பயண யாத்ரிகள் தங்களில் ஒருவராக இருந்து மறைந்த அண்ணன் யாத்திரை கணேசன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ஒரு எளிய காங்கிரஸ் தொண்டனுக்கு கட்சியின் கடைசி வழியனுப்பு நிகழ்வு மனதை கணக்கச்செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்