தமிழகத்திற்கு வருகிற காவிரி நீரின் அளவை குறைக்கக்கூடிய செயலை கர்நாடகத்தில் உள்ள எந்த அரசு செய்தாலும் தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் நேற்று பெங்களூரில் நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகா மாநிலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மேகதாது மற்றும் மகதாயி அணை திட்டங்களை விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
“2000 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நீரை தமிழ்நாடு பயன்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் விவசாயம் பாதிக்கப்படுகிறது. தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடக அரசு குறைக்கக்கூடாது.
அப்படி குறைத்தால் தமிழகம் பாதிப்பிற்குள்ளாகும். அதன்பிறகு இந்திய ஒருமைப்பாடு என்று சொல்வதில் பயன் இருக்காது.
தமிழகத்திற்கு வருகிற தண்ணீரின் அளவை குறைக்கக்கூடிய செயலை கர்நாடகத்தில் உள்ள எந்த அரசு செய்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
அந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு வழங்கும். நமக்கு வழங்கிய தண்ணீரை விட அதிகம் கேட்கவில்லை.
நமக்கு வழங்கப்படுகின்ற தண்ணீர் குறைக்கப்படாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்.
அதில் இடையூறு ஏற்படும் என்றால் உலக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு கூட தமிழக காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“செங்கோல் ஒரு பரிசுதான்”: என்.ராம் விளக்கம்!
விரைவில் வேளச்சேரி – மவுண்ட் பறக்கும் ரயில்!