தயிர் பாக்கெட்டுகளில் இந்தி: ஸ்டாலின் கண்டனம்!

Published On:

| By Jegadeesh

ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி பெயரை அச்சிடக் கூறிய மத்திய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 29 ) கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களுக்கு உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாடு ஆணையமான FSSAI கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.

அதில், அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பாண்ட்லே தயிர் பாக்கெட் மீது, ஆங்கிலத்தில் curd என எழுதி அதற்கு கீழ் தஹி (Dahi) என இந்தியில் அச்சிட வேண்டும் என்று FSSAI அறிவுறுத்தி இருந்தது.

மேலும், வேண்டுமென்றால் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 29 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்), தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.

மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தி திணிப்பை நிறுத்துங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பொன்னியின் செல்வன் 2: இன்ஜினியர்களை பாராட்டிய ரஹ்மான்

கர்நாடக தேர்தல்: கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel