மணிப்பூருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள்: ஸ்டாலின் கடிதம்!

Published On:

| By Jegadeesh

cm stalin letter to manipur cm

மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவிடும் பொருட்டு ரூ. 10 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்திட ஒப்புதல் வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்குக்கு இன்று (ஆகஸ்ட் 1) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. தமிழர்களின் உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் எனது கவனத்துக்கு வந்துள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசுவலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்துக்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

இந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்த வேண்டும். இதன்மூலம் தமிழக அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப இயலும்” என்று தெரிவித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை… செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர்!

செந்தில்பாலாஜி வழக்கு: வாதங்களை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!