காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை நாளை (செப்டம்பர் 7) தொடங்குகிறார். இந்த நடை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் சில அரசியல் கட்சித் தலைவர்கள் பாதயாத்திரை மேற்கொண்டிருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், எம்.ஜி.ஆரை எதிர்த்து பால் கமிஷனுக்காக மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நடைப்பயணம் மேற்கொண்டார்.
அதுபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பூரண மதுவிலக்கு, காவிரி நீர் உரிமை, முல்லைப் பெரியாறு உரிமை, அதிமுக அரசின் ஊழல், ஸ்டெர்லைட், நியூட்ரினோ உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்காக தமிழகம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டார்.
வாழ்க்கையில் தன்னுடைய பெரும்பாலான நாட்களை நடைப்பயணத்திலேயே கழித்தவர் என்றால், அது வைகோ ஒருவராகத்தான் இருக்க முடியும். இந்த வரிசையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இதுபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 2015ஆம் ஆண்டு ’நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்’ மேற்கொண்டது ஒரு மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

கலைஞர் வைத்த பெயர்!
2016ம் ஆண்டு நடைபெற இருந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்க களத்தில் இறங்கினார், ஸ்டாலின். இதற்காக 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டார்.
இந்தச் சூறாவளி சுற்றுப்பயணத் திட்டத்திற்காக அப்போதைய திமுக தலைவர் கலைஞரைச் சந்தித்த ஸ்டாலின், “அப்பா! இதற்கு ஒரு பெயரை நீங்கள்தான் சூட்ட வேண்டும்” என்று கேட்டாராம்.
இந்த திட்டத்திற்கு பெயர் வைப்பதற்காக அன்று இரவு (ஸ்டாலின் பெயர் கேட்ட நாள்) முழுவதும் கலைஞர் தூங்கவில்லையாம். பின்னர் மறுநாள் காலையில் வந்த ஸ்டாலினிடம், ‘நமக்கு நாமே’ என்று எழுதிக்கொடுத்திருக்கிறார்.
அதன்படி உருவானதுதான் இந்த ’நமக்கு நாமே பிரச்சார நடைப்பயணம்’.
இதை, 2015ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார், ஸ்டாலின்.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையருகே ஸ்டாலின் தொடங்கிய இந்த ’நமக்கு நாமே’ விடியல் மீட்புப் பயணம், 2016 பிப்ரவரி 12ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் நிறைவடைந்தது.
இந்தப் பயணத்தின் நான்காம் கட்டம் சென்னையில் தொடங்கியது. அப்போது மழையால் சில நாள்கள் இந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டார், ஸ்டாலின்.

குமரியில் தொடங்கி சென்னையில் முடிந்த நடைப்பயணம்
மழைக்குப் பின்னர் ஜனவரி 6ம் (2016) தேதியன்று சென்னையில் ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியவர், பிப்ரவரி 12ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் முடித்தார்.
இடையில் ஒரு சில நாட்கள் வேறு சில கழக நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். மொத்தத்தில் 146 நாட்களை இந்தச் சூறாவளிப் பயணத்தில் கழித்தார். இதன்மூலம் 3 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சந்தித்தார்.
இந்த பயணத்தில், 234 சட்டமன்றத் தொகுதிகளில், டவுன் ஹால் கூட்டங்கள், திறந்தவெளிக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தி விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், சுயஉதவிக் குழுக்கள், நெசவாளர்கள்,
மீனவர்கள், தொழில் முனைவோர், தொழில்துறை வல்லுநர்கள், தொழிலாளர்கள் எனச் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் நேரடியாகச் சந்தித்து, அவர்களின் விருப்பங்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார், ஸ்டாலின்.

அவை, திமுக ஆட்சியில் நிவர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கை விதையையும் அவர்கள் மனதில் விதைத்தார். மேலும் இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, ஸ்டாலின் அனைத்து தரப்பினரோடும் பழகியதுடன், அவர்கள் செய்த தொழில் மற்றும் செயல்களுடன் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார்.
பொதுமக்களுடன் உற்சாகம்!
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனம் ஆடிய ஸ்டாலின், அவர்களுடைய பாரம்பரிய இசைக்கருவிகளையும் இசைத்து மகிழ்ந்தார். தஞ்சையில் பயணம் செய்தபோது கண்டியூர் அருகே வயலில் இறங்கி நாற்று நாட்டார். திருவண்ணாமலையில் மாடுகளை ஏரில் பூட்டி நிலத்தில் உழுதார்.
விழுப்புரத்தில் நெசவாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற அவர், அங்கிருந்த தறியை நெய்து பார்த்தார். அதே விழுப்புரத்தில், விளையாட்டு மைதானத்துக்கு சென்ற ஸ்டாலின், மைதானத்தில் இளைஞர்களுடன் கிரிக்கெட், கால்பந்து, இறகுப்பந்து விளையாடினார்.
கரூரில் சிலம்பம் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களை சந்தித்துப் பேசிய ஸ்டாலின், தானும் சிலம்பம் சுற்றி அவர்களை உற்சாகமூட்டினார். சில இடங்களில் சைக்கிள் மிதித்தபடி வலம்வந்தார். பஸ்ஸிலும் ஏறி பயணிகளிடம் உரையாடினார். ஆட்டோவின் படியில் நின்று பொதுமக்களுக்கு கையசைத்தார்.

இப்படி, தொடர்ந்து தான் பயணித்த சாலையோர உணவகங்களில் டீ குடித்த ஸ்டாலின், திருநெல்வேலியில் பிரபல இருட்டுக்கடை அல்வாவையும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவாவையும், மதுரையில் ஜில்ஜில் ஜிகர்தண்டாவையும் ருசித்து சாப்பிட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் வாரச்சந்தைக்கு போன ஸ்டாலின், பக்கோடா, உணவுகளை ருசித்தார். இந்த சுற்றுப் பயணத்தில், வழக்கமான வேட்டி, சட்டை அணியாமல் பேண்ட், டி சர்ட் அணிந்து மக்களை சந்தித்த ஸ்டாலின், ஆலமரத்தடி, பொதுமேடை என அமர்ந்து மக்களிடம் பேசியது சற்றே வித்தியாசமாகத்தான் இருந்தது.
ஆனால் ஐ.டி. நிறுவன ஊழியர்களை சந்தித்தபோது மட்டும் கோட் சூட் அணிந்து கெட்அப் மாறினார். பயணத்தின்போது ஸ்டாலின் சென்ற இடமெங்கும் உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள், அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்!
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் திசை திருப்பிய கதையும் உண்டு. என்றாலும், இந்த நடைப்பயணம் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார், ஸ்டாலின். இந்த நடைப்பயணம் வெற்றிகண்டதற்கு முக்கியக் காரணமே அவர் எல்லா மக்களிடமும் எளிமையாகப் பழகியதுதான்.
ஸ்டாலினின் இந்தப் பயணம் குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், “நான் நீதிகேட்டு திருச்செந்தூருக்கு நெடும்பயணம் மேற்கொண்டதுதான் என் நினைவுக்கு வருகிறது. ‘நமக்கு நாமே’ என்ற பெயரே எல்லோருடைய இல்லங்களிலும் இரண்டறக் கலந்துவிட்ட சொல்லாகியிருக்கிறது.
மொத்தத்தில் ஸ்டாலினின் இந்தப் பயணம் வெற்றிப் பயணம்; கழக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய புதுமைப் பயணம்; இந்தப் பயணம் தம்பி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமானதொரு மைல் கல்” எனப் பாராட்டியிருந்தார்.
ஆனால், எதிர்க்கட்சிகளோ இந்த திட்ட பயணத்தை கடுமையாக விமர்சித்தன.
முக்கியமாக, ஸ்டாலினின் இந்தப் பயணம் குறித்து அவருடைய சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியே கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவர், “ஸ்டாலின் இந்தப் பயணம் நகைச்சுவை நேரமாக இருக்கிறது” என்றார். அதுபோல் அன்புமணி ராமதாஸ், “மு.க.ஸ்டாலின் தன் சிறுவயது ஆசையை நிவர்த்தி செய்துகொள்கிறார். இதனால், எந்த பயனும் இல்லை” என விமர்சித்திருந்தார்.

ஆனால், ஸ்டாலின் மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணம்தான் 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்டிருந்த திமுகவை, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் எழுந்து நிற்கவைத்தது.
தவிர, 2016ம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்றத் தேர்தலில் 89 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபை சென்றார் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமின்றி அந்த ஆண்டு, 1.1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சியைப் பறிகொடுத்திருந்தது. அதற்கு கைமேல் பலன் கொடுத்தது, இந்த நமக்கு நாமே நடைப்பயணம்தான் என்பது திமுகவின் கணக்காக இருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
தமிழகம் கண்ட பாதயாத்திரைகள் 2: தலையாய பிரச்சினைகளுக்கு விடை கேட்டு, நடையாய் நடந்த வைகோ