தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (மார்ச் 1 ) மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில்,காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நான் என்றும் உங்களில் ஒருவன். மு.க.ஸ்டாலின் எனும் நான் நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன், மக்களுக்காக கவலைப்படக்கூடிய தலைவனாக இருப்பேன்.
தமிழ்நாட்டு மக்கள் கட்டளையின்படி முதலமைச்சராக செயல்பட்டு வருகிற நான், தொண்டர்களின் கட்டளையை ஏற்று திமுக தலைவராக செயல்பட்டு வருகிறேன்.
பேரறிஞர் அண்ணாவை போல எனக்கு பேசத் தெரியாது, தலைவர் கலைஞரைப் போல எனக்கு எழுதத் தெரியாது. ஆனால் அவர்களைப் போல் எனக்கு உழைக்கத் தெரியும் எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று கூறினார்களோ, அதையெல்லாம் சாதிக்க முடியும் என்று கூறியவர் அண்ணா.
14 வயதில் கோபாலபுரம் இளைஞர் திமுகவை ஆரம்பித்து மக்கள் பணியாற்றத் தொடங்கினேன்.
நாடக மேடைகளில் கனல் தெறிக்க வசனங்கள் வாயிலாக உழைத்தேன். அதனாலேயே அவசர நிலை காலத்தில் திருமணமான ஐந்தே மாதத்தில் சிறைக்குப் போனேன்.
பொதுவாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று வசந்த மாளிகைக்கு அனுப்பியது போல அனுப்பி வைத்தார் தலைவர் கலைஞர்.
இந்த 55 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் என் கால் படாத கிராமம், நகரம், மாநகரம் இல்லை. சாலைகள் இல்லாத புழுதிக் காட்டிலும் கொடியேற்றி வைத்தேன்.
வானுயர் கட்டிடங்களுக்கு இடையிலும் கொடியேற்றி வைத்தேன். எனக்கு எழுபது வயது ஆகிவிட்டது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை., நினைத்துப் பார்த்தால் எல்லாம் நேற்று நடந்ததைப் போல இருக்கிறது.
மார்ச் 1 பிறந்தநாள் என்று சொல்லும்போதுதான் வயது ஞாபகம் வருகிறது. எனக்கு எழுபது வயது என்று சொல்லும்போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்.
கடந்த பிறந்தநாள் விழாவில் ராகுல் காந்தி பேசும்போது, ‘நான் இந்த விழாவுக்காக புறப்பட்டபோது என் தாயாரிடம், ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்காக செல்கிறேன். அவருக்கு என்ன வயது தெரியுமா என்று கேட்டேன்.
தெரியாதே என்றார். 69 வயது என்றேன். என் தாயார் அதை நம்பவில்லை. பிறகு கூகுள் செய்து பார்த்த பிறகுதான் நம்பினார்’ என்று பேசினார்.
வயது என்பது முகத்தில் இல்லை. மனதில் கொள்கை உறுதியும் இலட்சிய உறுதியும் அன்றாட பணியாக இருக்குமானால் வயதாவதில்லை,. லட்சிய வாதிகளுக்கு என்றும் வயதாவதே இல்லை. உங்கள் ஆதரவால் நாளுக்கு நாள் நான் இளமையாகிக் கொண்டே இருக்கிறேன்.
மு.வ.ஜெகதீஸ் குமார்
பொதுக்கூட்ட மேடையில் ஃபரூக் அப்துல்லாவின் முக்கிய வலியுறுத்தல்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அகிலேஷ் யாதவ்
