காலை உணவுத் திட்டம் மன நிறைவை தருகிறது: முதல்வர்!

அரசியல்

டெல்டா மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் பயின்ற திருக்குவளையில் உள்ள பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை இன்று (ஆகஸ்ட் 25) துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், “வாழ்விலோர் பொன்னாள்’ என்று சொல்கின்ற வகையில், இந்த நாள் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதைவிடச் சிறப்பு என்னவென்றால்? இந்த இடம்! இந்த ஊர்! இந்த திருக்குவளை மண்ணில் உதித்த ஒரு சூரியன், தமிழ்நாடு முழுமைக்கும் ஒளி வீசியது. ஏன், இந்தியாவோட தலைநகர் வரை அதனுடைய வெளிச்சம் பரவியது. அந்த சூரியனுடைய பேர்தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட பெருமைக்குரிய நம் தமிழினத் தலைவர் கலைஞர் படித்த தொடக்கப் பள்ளியில் இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை விரிவாக்கம் செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

தமிழ்நாட்டோட முதலமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், இந்த காலை உணவுத் திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது. இன்னும் சொல்லவேண்டும் என்றால், படிப்புக்காகவும், வேலைக்காகவும் பேருந்தில் செல்லும் நம்முடைய சகோதரிகள், கட்டணமில்லாமல் ‘விடியல் பயணத்தை’ மேற்கொள்ளும்போதும், உயர்கல்வி பெறும் அரசுப் பள்ளி மாணவிகள் ’புதுமைப் பெண்’ திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறும் போதும், அவர்களை விட எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி ஏற்படும். ஏனென்றால், பலருடைய மகிழ்ச்சிக்கு நான் காரணமாக இருக்கிறேன் என்ற அந்த உணர்வில் அப்படி பெருமகிழ்ச்சி உண்டாகும்.

அடுத்த மாதம் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. உங்களுக்குத் தெரியும். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15. அன்றைக்கு, குடும்பதலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ தொடங்க போகிறோம். அது என்னுடைய மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்க போகின்றது.

இப்படி மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்ற திராவிட மாடல் அரசினுடைய திட்டங்களில் முக்கியமான ஒன்றுதான் இந்த காலை உணவுத் திட்டம்.

கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், மதுரை ஆதிமூலம் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். மாணவச் செல்வங்களுக்கு காலை உணவு பரிமாறினேன். அவர்களோடு உட்கார்ந்து உணவு சாப்பிட்டேன். இப்போதும் இங்கே தொடங்கிய திருக்குவளைப் பள்ளியில், கலைஞர் படித்த பள்ளியில் தொடங்கியபோது, அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டுதான் வந்திருக்கிறேன்.

Image

மதுரையில் நான் தொடங்கினேன். அன்றைய நாளிலிருந்து, 1 இலட்சத்து 14 ஆயிரம் பிள்ளைகளுக்கு காலை உணவு தரப்பட்டது. அதை மேலும் விரிவுபடுத்தும் நம் எண்ணம் தான் இன்றைக்கு செயல்வடிவமாகி, 17 இலட்சம் பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று மணிமேகலை காப்பியம் சொன்னபடி, உயிர் கொடுக்குற அரசாக, நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. எங்கள் தாத்தா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தந்தை முத்துவேலர் வாழ்ந்த இந்த திருக்குவளையில், தந்தையாகவும், தாயாகவும் இருந்த கலைஞர் பிறந்த இந்த திருக்குவளை மண்ணில் அவருடைய மகன் கருணாநிதி ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பது என்பது, அதன் மூலமாக, நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மட்டுமல்ல; கலைஞரின் மகனாகவும் பெருமைப்படுகிறேன். இதைவிட எனக்கு வேறென்ன பெருமை வேண்டும்?

Image

பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கிய தலைவர் கலைஞர் படித்த பள்ளி இது. அவர் படிக்கின்றபோது, ஒரு அரசியல் கட்சித் தலைவர் ஆவார் என்றோ, முதலமைச்சர் ஆவார் என்றோ நிச்சயமாக நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், அவருக்குள் இருந்த தமிழ்ப் பற்றும் – எழுத்துத் திறனும் – சிந்தனை ஆற்றலும், பள்ளியில் படிக்கின்றபோதே, அவரை மெல்ல மெல்ல தலைவராக ஆக்கியது.

அந்த பெருமை என்பது இந்த திருக்குவளை பள்ளிக்கும் – திருவாரூர் பள்ளிக்கும்தான் உண்டு. “உருக்குலையா மங்கையவள் ஒளிமுகத்தை முத்தமிட கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை” என்று உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் போற்றப்பட்ட இந்த அழகிய திருக்குவளை கிராமத்தில் முத்துவேலருக்கும்-அஞ்சுகம் அம்மாவுக்கும், அருந்தவப் புதல்வராக பிறந்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

‘என்னை என் தாயும் தந்தையும் படி படி என்று சொன்னாலும் நான் படித்தது ஈரோட்டுப் பள்ளியும், காஞ்சி கல்லூரியும்தான்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்.

திருக்குவளையில் தொடக்கப் பள்ளி, அப்போது 5-ஆம் வகுப்பு வரை மட்டும் இருந்ததினால், மேல்படிப்புக்கு தலைவர் கலைஞர் அவர்கள் திருவாரூருக்கு சென்றார். அங்கே சென்று பள்ளியில் சேருவதற்கு என்னென்ன போராட்டம் நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். நெஞ்சுக்கு நீதியில் அவரே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். பல நிகழ்ச்சிகளில் அதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். போராடி, வாதாடி அதற்குப் பிறகு திருவாரூரில் 6-ஆம் வகுப்பு சேருகிறார். திருவாரூரில் அவரை அள்ளி அணைத்து, அவருக்கு அரசியல் ஆர்வத்தை ஊட்டி, அவருடைய உள்ளத்தில் இருந்த கனலைத் தூண்டி விட்டது.

Image

சிறுவர் சீர்திருத்த சங்கம் தொடங்கினார். தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் அமைத்தார். ஆதிக்க இந்திக்கு எதிராக கொடி பிடித்து போராட்டம் நடத்தினார். ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.

இப்படி, ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்று சொல்வதற்கு ஏற்றது போல, பிற்காலத்தில் கலைஞர் என்ன ஆவார் என்பதை உணர்த்தின இடம்தான் திருக்குவளை பள்ளியும் – திருவாரூர் பள்ளியும்.

ஒரு சின்ன கிராமத்தில், சாதாரண குடும்பத்தில், சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த காலத்தில் பிறந்து, இதே பள்ளியில் ஆரம்பப் பாடம் கற்று, திருவாரூரில் வளர்ந்து, தன்னோட விடாமுயற்சியால், அயராத உழைப்பால், சளைக்காத போராட்டக் குணத்தால் வெற்றிச் சிகரங்களை தொட்டவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் சொன்னது, ‘வரலாற்றில் நமக்கான இடம், சலுகையால் கிடைக்கக் கூடியதாக அல்லாமல், போராடிப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும் என்று சொல்வார். ஏன், கடற்கரையில், தான் ஓய்வு கொண்டிருக்கிற இடத்தையும் போராடிப் பெற்றவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் படமாக அல்ல, பாடமாக – நம்பிக்கை மிகுந்த வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் தமிழ்நாட்டு மாணவர் சமுதாயத்தினுடைய பசிப்பிணி போக்கும் திட்டத்தை அவர் படித்த இந்த பள்ளியிலிருந்து தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிக்கும் விரிவாக்கம் செய்ய நான் வந்திருக்கிறேன்.

ஏழை, எளியோர் வீட்டுப்பிள்ளைகள் – ஒடுக்கப்பட்ட குடும்பத்தின் பிள்ளைகள் – பள்ளிக்குப் போவது எந்த காரணத்தாலேயும் தடைப்படக் கூடாது என்றுதான் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். அதற்காகத்தான் சமூகநீதிக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. வகுப்புவாரி உரிமை என்று, இடஒதுக்கீடு தரப்பட்டது. கல்வி பெற வறுமை – சாதி என்று எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்று தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் நினைத்தார்கள்.

அவர்களுடைய வழித்தடத்தில் நடக்கின்ற நான், அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றுகின்ற இடத்திற்கு வந்து அதையெல்லாம் இப்போது செயல்படுத்துகிறேன். தொடர்ந்து செயல்படுத்துவேன். இதற்கான தொடக்கம், திராவிட இயக்கத்தோட தாய் அமைப்பான நீதிக்கட்சியினுடைய தலைவராக இருந்த வெள்ளுடை வேந்தர் தியாகராயர் அவர்கள் தான்” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அதிமுக பொதுக்குழு செல்லும்: எடப்பாடிக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: துவக்கி வைத்த ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *