எளியோரின் ஏந்தல்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ரவிக்குமார்

“வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்
-வள்ளுவர்

’ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்’ என அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் விளக்கம் கூறுவார்.

செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதில் முதன்மையானது எளிய மக்களை இனம் கண்டு ஆதரிப்பதாகும். அதை சிறப்பாகச் செய்து எளியோரின் ஏந்தலாகத் திகழ்கிறார் நம் முதலமைச்சர். ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் செய்திருக்கும் சாதனைகளை ஒப்பு நோக்கினால் இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் அவற்றைச் செய்ய 20 ஆண்டுகளாவது ஆகும்.

தமிழ்நாட்டில் ஆதிதிராவிட மக்கள், பழங்குடி மக்கள், விளிம்புநிலையில் வாழும் நாடோடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அகதிகள் – இவர்களுக்காக தனிக்கவனம் செலுத்திப் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகின்றார்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும்கூட நாட்டில் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தீர்ந்தபாடில்லை. எனவே அரசானது எளிய மக்களுக்கு ஏற்றம் தரும் திட்டங்களைத் தீட்டுவதோடு அந்த மக்களைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். அதை சரியாக உணர்ந்திருப்பவர் நமது முதலமைச்சர் ஆவார்.

ஆதிதிராவிட மக்களுக்குப் பாதுகாப்பாக இயற்றப்பட்ட வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு மாநில அளவில் விழிப்பு கண்காணிப்புக் குழு முதலமைச்சரின் தலைமையில் அமைக்கப்பட வேண்டும்.

tamilnadu cm mk stalin support

அதை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டி அந்த வழக்குகளின் நிலையை ஆராய வேண்டும் என சட்டத்தில் இருந்தாலும் அது பெரும்பாலான மாநிலங்களில் நடைமுறையில் இல்லை. தான் பொறுப்பேற்றதும் அந்த குழுவை அமைத்ததோடு மட்டுமின்றி அதை காலமுறைப்படி கூட்டி நடவடிக்கைகளையும் எடுத்து வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 46 இன் அடிப்படையிலும், உறுப்பு 338 இல் கூறியுள்ளதற்கேற்பவும் இந்தியாவிலுள்ள எஸ்சி, எஸ்டி மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தேசிய அளவில் எஸ்சி, எஸ்டி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 46 ஆவது திருத்தத்தின் மூலம் அந்த ஒரு நபர் ஆணையம் என்பது பல உறுப்பினர்கள் கொண்ட ஆணையமாக மாற்றியமைக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு அது தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையம் என பெயர் சூட்டப்பட்டது.

தேசிய அளவிலான ஆணையம் அமைக்கப்பட்டதுபோல மாநில அரசுகள் மாநில எஸ்சி ஆணையங்களை உருவாக்கவேண்டும் என்று அந்த சட்டம் அறிவுறுத்துகிறது. அதனடிப்படையில், மாநில அளவிலான எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டன.

தமிழ்நாட்டிலும் அதுபோல மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்தை உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம். உடனடியாக அந்த கோரிக்கைமீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநில ஆணையம் அமைப்பதற்கான சட்டத்தை (Tamil Nadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act, 2021) நிறைவேற்றியதோடு, அந்த ஆணையத்துக்குத் தகுதிவாய்ந்தவர்களை நியமித்து அது சிறப்பாக செயல்படுவதற்கும் முதலமைச்சர் வழிவகை செய்துள்ளார்.

2021 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சி ஆதிதிராவிட மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கிற ஆட்சியாக இருந்தது. பாஜகவின் சனாதனக் கொள்கைக்கு ஏற்ப வெகுமக்களின் கல்வியை சீரழிக்கத் துணைபோனது. அதன் காரணமாக எஸ்சி மாணவர்கள் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைக்காமல் நூற்றுக் கணக்கானோர் படிப்பைப் பாதியிலேயே கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு தான் இந்த அவலநிலை மாற்றப்பட்டது. பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி உயர்கல்வி பயிலும் மாணவர்களும் இப்போது படிப்பு உதவித் தொகையைப் பெறுவது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

ஆதிதிராவிட சமூகத்து மாணவர்களும் அயல்நாட்டில் சென்று ஆராய்ச்சிக் கல்வி பெறுவதற்கான திட்டத்தைத் தலைவர் கலைஞர் ஊக்குவித்தார். அப்போது ’ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்’ (Overseas Scholarship ) பெறுவதற்கு வருமான வரம்பு 3 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது.அடுத்துவந்த அதிமுக ஆட்சியில் அந்த வருமான வரம்பு உயர்த்தப்படவில்லை. அதனால் அந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு எவருக்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

திமுக ஆட்சி அமைந்ததும், நிதிநிலை அறிக்கையில் ‘ ஆதிதிராவிட மாணவர்களுக்கான ‘ஓவர்சீஸ் ஸ்காலர்ஷிப்’ திட்டம் செம்மைப் படுத்தப்படும்’ என அறிவிக்கப்பட்டது.
முன்னேறிய பிரிவு மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இருப்பதுபோலவே ஆதிதிராவிட சமூக மாணவர்களுக்கும் ஆண்டு வருமான வரம்பு 8 லட்சம் என முதலமைச்சர் அறிவித்தார்.

அதனால் இப்போது எஸ்சி எஸ்டி மாணவர்கள் அயல்நாடுகளுக்குச் சென்று ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு எளிதாகியிருக்கிறது.

முதலமைச்சரால் புது வாழ்க்கையைப் பெற்ற சமூகம் நரிக்குறவர் சமூகம் ஆகும். தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 60 ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் அதற்காகப் பலமுறை முயற்சி செய்யப்பட்டது.

1964ஆம் ஆண்டில் இந்திய ஒன்றிய அரசு கொள்கையளவில் நரிக்குறவர்களைப் பழங்குடியினராக ஏற்றுக் கொண்டுவிட்டது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் அவர்களுக்குப் பழங்குடியினருக்கான சலுகைகள் 1974ஆம் ஆண்டு வரை அளிக்கப்பட்டன.

tamilnadu cm mk stalin support

ஆனால் அவர்களைப் ’பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து முறையாக அறிவிப்புச் செய்வதற்கு முன்பு இப்படி சலுகைகளைத் தரக்கூடாது’ என ஒன்றிய அரசு 1974ஆம் ஆண்டில் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதிய காரணத்தால் அப்போது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தற்காலிகமாகச் சேர்த்து உத்தரவிட்டார்.

ஆனால் படிப்பு உதவித்தொகை, மனைப்பட்டா, அடிப்படை வசதிகள் ஆகியவற்றைப் பெறுகின்ற விஷயத்தில் அவர்கள் தொடர்ந்தும் பழங்குடியினருக்கான சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் அந்த ஆணையில் அறிவித்தார். அவர் செய்த அந்தத் தற்காலிக ஏற்பாடே அரை நூற்றாண்டாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு அவர் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் அதுபற்றி ஒன்றிய அரசுக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார். (கடித எண்: 17789/ADW-10 /2004-1 நாள் 14.8.2006). ஆனால் அதற்குப் பிறகும் கூட ஒன்றிய சமூக நீதி அமைச்சகம் அதில் முடிவெடுக்கவில்லை, அவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவில்லை.

tamilnadu cm mk stalin support

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் நரிக்குறவர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களோடு உணவருந்தினார். அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுத்தார். அதற்கென பட்டாக்கள் வழங்கப்பட்டன. அத்துடன் அவர்களைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக 2023 குளிர்காலக் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர் சமூகம் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியவர் முதலமைச்சர் ஆவார்.

அகதி முகாம்களின் பெயரை மறுவாழ்வு முகாம்கள் என மாற்றியதோடு அவர்கள் அனைவருக்கும் நிரந்தர வீடுகள் கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது நமது அரசு. மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் என விளிம்புநிலைப் பிரிவினர் அனைவரது நலன்களுக்காகவும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

சிறுபான்மையினரின் நோக்கிலிருந்து சமூகத்தைப் பார்த்து ஆட்சி செய்யும் நம் முதலமைச்சர் எளிய, சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு எதிரான பெரும்பான்மைவாதம் என்னும் பேராபத்திலிருந்து தமிழ்நாட்டைக் காக்கும் காப்பரணாகவும் திகழ்கிறார். அவர் நீடு வாழட்டும்! இந்த நிலம் செழிக்கட்டும்!

மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை!

ஒரேநாளில் இரண்டு முதல்வர்களுக்கு வாழ்த்து கூறிய பிரதமர்

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *