பட்ஜெட்: குடிமைப் பணி தேர்வு… ஆண்டுக்கு 1000 மாணவர்கள்

அரசியல்

குடிமைப் பணி தேர்விற்கு ஆண்டுக்கு ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உயர்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறித்து,

“மின்னல் வேகத்தில் மாறிவரும் தொழில் சூழலுக்குத் தேவைப்படும் மனித வளத்தை உருவாக்குவதற்கு 2,877 கோடி ரூபாய் செலவில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தலைசிறந்த திறன் நிலையங்களாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது.

வரும் கல்வியாண்டிலேயே இப்பணிகள் முடிக்கப்பட்டு புதிய பாடப்பிரிவுகளில் சேர்க்கை நடைபெறும்.

இதன் அடுத்தகட்டமாகத் தொழில் துறையுடன் இணைந்து, தொழில் துறை 4.0 தரத்திற்கு ஏற்ப அரசு பல் தொழில்நுட்ப கல்லூரிகளை திறன்மிகு மையங்களாக மாற்றும் திட்டத்தை வரும் ஆண்டில் அரசு தொடங்கும்.

இத்திட்டத்தில் 54 அரசு பல்தொழிற்நுட்ப கல்லூரிகள் 2,783 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாகத் தரம் உயர்த்தப்படும்.

தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும் பல தொழில்நுட்ப கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த திறன் பயிற்சியை வழங்குதல், திறமையான பணியாளர்களை உருவாக்குதல் போன்ற நோக்கங்களுடன் 120 கோடி ரூபாய் செலவில் சென்னை அம்பத்தூரில், தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சி மற்றும் திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

இந்த மையத்தில் இயந்திர மின் அணுவியல் , இணைய வழி செயல்பாடு, அதிநவீன வாகன தொழில்நுட்பம், புள்ளிய பொறியியல் மற்றும் உயர்தர வெல்டிங் போன்ற தொழில்நுட்பங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

நான் முதல்வன் திட்டத்திற்கு வரவு செலவு திட்டத்தில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திறன் பயிற்சி கட்டமைப்பைப் பெருமளவில் அதிகரிக்க தற்போது உள்ள தொழிற்சாலைகள் தொழில் பயிற்சி மையங்களாகப் பயன்படுத்தப்படும்.

இளைஞர்களுக்கு தொழிற்சாலையிலேயே பயிற்சி அளித்திட (internship) தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். இத்திட்டத்திற்கு இந்த ஆண்டு 25 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.

கிருஷ்ணகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்படும். பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு அடிப்படை வசதிகள் 1000 கோடி ரூபாய் செலவில் 5 ஆண்டுகளில் மேம்படுத்தப்பட உள்ளன.

நடப்பாண்டில் 26 பல்தொழில்நுட்ப கல்லூரிகளில், 55 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள், கூடுதல் ஆய்வகங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணிகள் வரும் நிதியாண்டிலும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

குடிமைப் பணித் தேர்வு மாணவர்களுக்கு மேம்பட்ட பயிற்சி மற்றும் பயிற்சி பொருட்கள் வழங்கும் திட்டத்தை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாட்டுத் திறன் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும்.
ஓவ்வோராண்டும் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம்10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கு 2023-24 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக உயர்கல்வித் துறைக்கு 6,967 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மோனிஷா

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய்: பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

பட்ஜெட்: புதிதாக 1 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை!

tamilnadu buget meeting today march 20 2023
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *