தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 20) 2023 – 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 -ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அதையடுத்து ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று பின்னர் சட்டமன்ற கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் 2023 – 24 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று (மார்ச் 20) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
திமுக அரசு ஆட்சியமைத்த பிறகு தாக்கல் செய்யப்படவுள்ள 3 வது நிதிநிலை அறிக்கை இதுவாகும். இன்று காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
முன்னதாக, சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக வரி வடிவ பட்ஜெட்டிற்கு மாறாக டிஜிட்டல் முறையில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டும் டிஜிட்டல் முறையில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நிதியமைச்சர் மேஜையின் மீது வைக்கப்பட்டுள்ள மடிக்கணினியைப் பார்த்து பட்ஜெட் உரையை வாசிப்பார். அவை உறுப்பினர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மடிக்கணினி மூலம் பட்ஜெட் உரையைப் பார்த்து தெரிந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமை தொகை குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது.
சிலிண்டருக்கு மானியம் வழங்குதல், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு, கல்விக் கடன் தள்ளுபடி ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் உரை முடிந்த பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.
அந்த கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும், என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்படும். வேளாண் பட்ஜெட் தாக்கல் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மேலும், கடந்த அக்டோபர் மாதம் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதால் இந்த முறை சட்டமன்ற கூட்டத்தொடரில், மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மோனிஷா
உக்ரைன் சென்ற ரஷ்ய அதிபர் புதின்
அண்ணாநகர் டவர் பூங்கா: இன்று முதல் அனுமதி!