முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சீன மொழியில் தமிழக பாஜக வாழ்த்து தெரிவித்துள்ளது.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் உட்பட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக கூட்டணி கட்சித் தலைவர்களான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மு.க.ஸ்டாலினை அறிவாலயத்தில் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
எதிர்கட்சி தலைவர்களான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
On behalf of @BJP4Tamilnadu, here’s wishing our Honourable CM Thiru @mkstalin avargal a happy birthday in his favourite language! May he live a long & healthy life! pic.twitter.com/2ZmPwzekF8
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 1, 2024
இந்த நிலையில் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கபட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து தற்போது வைரலாகியுள்ளது. அதில், முதல்வர் ஸ்டாலினுக்கு பிடித்த சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதாகவும், அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவுக்கான புதிய ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி தொடர்பாக திமுக சார்பில் நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் சீன கொடி இடம் பெற்றிருந்தது.
அதனை விமர்சித்து பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் திமுகவை கடுமையாக சாடியிருந்தனர்.
இந்த நிலையில் அதனை விமர்சிக்கும் விதமாகவே தற்போது சீன மொழியில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளங்களில் தமிழக பாஜக பரபரப்பை கிளப்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’பம்பரம்’ சின்னம் : தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு… வைகோ ரியாக்சன்!
சின்னத்திரை டூ வெள்ளித்திரை: ரக்ஷிதா மகாலட்சுமியின் ‘அடுத்த’ பயணம்!