சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாஜக சார்பில் கொடிக் கம்பங்களை வைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக பாஜக துணைத்தலைவர்கள் கருநாகராஜன், டால்பின் ஸ்ரீதர், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று (நவம்பர் 2) மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணை தலைவர் கருநாகராஜன், “தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனைத்து கட்சிகளும் கம்பங்களை ஏற்றியுள்ளனர். ஆனால் அந்த இடங்களில் பாஜக கொடிக் கம்பங்களை வைக்க மட்டும் அனுமதி அளிக்க மறுக்கின்றனர் .
தேசிய அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சி மத்தியில் ஆட்சியில் உள்ள ஒரு கட்சிக்கு இப்படி ஒரு செயலை செய்து வருகின்றனர். நேற்று மட்டும் 1400-க்கும் மேற்பட்ட பாஜக நபர்களை கைது செய்துள்ளனர். இதற்காக 5 ஆயிரம் காவல் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை ஏற்றுகொள்ள முடியாது.
எனவே மாநகராட்சி பகுதிகளில் கொடிக் கம்பங்களை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் வழங்கி உள்ளோம். அவர் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முறைப்படி அனுமதி வழங்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். மாநகராட்சி பகுதிக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்தது போல தலைமை செயலாளர் மற்றும் தமிழக டிஜிபி ஆகியோரை சந்திக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழக்கு: இறுதி விசாரணை எப்போது?
ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது!