தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 23) காலை 10.30 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
மார்ச் 17-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
“தேசிய தலைமை, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்” என்று தெரிவித்திருந்தார். அவரது பேச்சு தமிழக அரசியலில் மிக முக்கியமான விவாதமானது.
இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமையவுள்ள இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா திட்டத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று (மார்ச் 22) சென்னையில் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் அண்ணாமலைக்கும் டெல்லி தலைமைக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறதா என்ற கேள்விகள் எழுந்தது.
இந்தநிலையில், மார்ச் 26-ஆம் தேதி பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை அண்ணாமலை சந்திக்க உள்ளார் என்று தகவல் வெளியான நிலையில்,
இன்று (மார்ச் 23) காலை 10.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை அண்ணாமலை சந்திக்கிறார்.
அண்ணாமலை டெல்லி பயணம் தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
தமிழாக்கத்தில் அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள்: தமிழ்நாடு அரசாங்கத்தின் போற்றத்தக்க திட்டம்!
தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அச்சுறுத்தல்!