டிஜிட்டல் திண்ணை: மோடி சர்வே- முருகனுக்கு புது அசைன்மென்ட்: தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் சில இன் கமிங் ஆடியோ கால்கள் வந்தன. பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் பேசி முடித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல்  எப்போதுமே இருக்கக் கூடிய விஷயம்தான். ஆனால் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு  அவருக்கும் அவரைத் தவிர இருக்கும் பிற தலைவர்கள் அனைவருமே அண்ணாமலையோடு முரண்பட்டு வருவதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

இதற்கிடையில் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கும்  அண்ணாமலைக்கும் இடையே உரசல்கள் அதிகமாயின. அண்ணாமலை தலைவரானதும் இனிமேல்  எல்.முருகன் அனாவசியமாக தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வரக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாஜக வட்டாரங்களிலேயே கூறினார்கள். இதை உறுதிப்படுத்துவது போல எல்.முருகன் சென்னையில் இருந்தபோதும் கூட தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருவதை தவிர்த்தார் அல்லது குறைத்துக் கொண்டார்.

tamilnadu bjp Annamalai

இந்த நிலையில்தான் விநாயகர் சதுர்த்தி அன்று கமலாலயத்துக்கு வந்து விநாயக சதுர்த்தி நிகழ்வில் கலந்துகொண்டார் இணை அமைச்சர் எல்.முருகன். அதோடு மட்டுமல்லாமல்  தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில்  தனி அறை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.   ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சமீப மாதங்களாக கமலாலயத்துக்கு வருவதையே குறைத்துக் கொண்டுவிட்ட சூழலில் அவருக்கு கமலாலயத்தில் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டு  கமலாலய ஊழியர்களே தங்கள் கைகளை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறார்கள்.  அறை ஒதுக்குவது இவ்வளவு  முக்கியத்துவமா என்று கேட்டால் பாஜகவில் அது முக்கியத்துவமானதுதான்,

‘மாநில பாஜக அலுவலகங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். இதற்கு முன் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தார். அப்போது  பொன்.ராதாகிருஷ்ணனுக்கு  கமலாலயத்தில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.  அவர் தேர்தலில் தோற்ற  பிறகு ஒரு நாள், ‘ நாளை மாலைக்குள் உங்கள் கமலாலய அறையை காலி செய்துவிடுங்கள்’ என்று டெல்லியில் இருந்து பொன்னாருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

tamilnadu bjp Annamalai

தனக்கு அறை ஒதுக்கப்படவில்லை என்றால்  தலைவர் அறையில் அவருக்கு எதிரில் உள்ள இருக்கைகளிலோ, அல்லது மற்ற நிர்வாகிகளின் அறைகளிலோதான் சென்று உட்கார வேண்டியிருக்கும். இது ஓர் கௌரவக் குறைச்சல்தான். பொன்னாரின் நெருங்கிய நண்பரான அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன்,  அவருக்கான அறையை மீட்டுத் தர பெரிதும் முயற்சி செய்தார். ஆனால் அவராலேயே அப்போது முடியவில்லை. கடைசியில்,  ‘சாரிஜி’ என்று பொன்னாரிடம் சொல்லிவிட்டார் கேசவ விநாயகன்.

இந்த பின்னணியில் இப்போது மத்திய அமைச்சர் முருகனுக்கு கமலாலயத்தில் அறை ஒதுக்கப்பட்டிருப்பதற்கு கூட கேசவ விநாயகன் தான்  காரணம் என்றும் இல்லை இல்லை இது நேரடியான டெல்லி உத்தரவு என்றும் சொல்கிறார்கள் தமிழக பாஜகவில் இருக்கும் மூத்த ஆர்,எஸ்.எஸ்.,காரர்கள்.

tamilnadu bjp Annamalai

கடந்த ஜூலை 28, 29 தேதிகளில் சென்னை வந்து சென்றார் பிரதமர் மோடி.  அவர் வந்து சென்ற பிறகு தமிழகத்தின் அரசியல் நிலைமை, தமிழகத்தில் பாஜகவின் நிலைமை ஆகியவை பற்றி தனியார் நிறுவனம் மூலம் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில்  முக்கிய அம்சங்களில் ஒன்றாக,  ’மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்கள் தமிழக மக்களிடம் போதிய அளவு சென்றடையவே இல்லை.  தமிழக பாஜக தலைவர்கள் சர்ச்சைப்  பேச்சுகளை அதிகம் பேசுகிறார்களே தவிர, மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றிய பாசிடிவ் ஆன பிரச்சாரமே இல்லை’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆகஸ்டு 19 ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில்,  தமிழ்நாட்டுப் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன் -அமித் ஷா கோபம் என்ற தலைப்பில்  செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

இந்த ரிப்போர்ட்டுக்குப் பிறகுதான் தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக மோடி அரசில் பங்கேற்றிருக்கும் எல்.முருகனுக்கு கமலாலயத்தில் அறையே ஒதுக்கப்படவில்லை என்ற விவரமும் டெல்லியின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. உடனடியாக இதுகுறித்து விசாரிக்கப்பட்டது. ‘நம் மத்திய அமைச்சருக்கு நம் கட்சி அலுவலகத்தில் அறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் நாம் என்ன அரசியல் செய்கிறோம்?  மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க நினைக்கும் தமிழகத்துக்குப் புள்ளிகள், அல்லது மத்திய அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று முயற்சிக்கும் புள்ளிகள் முருகனை எங்கே சென்று சந்திப்பார்கள்? ’என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உடனடியாக முருகனுக்கு கமலாலயத்தில் அறை ஒதுக்கியிருக்கிறது டெல்லி. 

tamilnadu bjp Annamalai

முருகனுக்கு மட்டும் அறை ஒதுக்கப்பட்டது என்றால் அது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் என்பதால் தமிழகத்தின் மக்கள் பிரதிநிதிகளான பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  மோடி ஆட்சியின் சாதனைகளை தமிழக மக்களிடத்தில் எடுத்துச் செல்வதற்கான முதல் கட்டம்தான் முருகனுக்கு கொடுக்கப்பட்ட இந்த அங்கீகாரம்,  மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அடுத்தடுத்து முருகனுக்கு இன்னும் சில முக்கிய அசைன்மென்ட்டுகள் இருக்கின்றன என்கின்றன கமலாலய வட்டாரங்கள். இந்த விவகாரத்தில் அண்ணாமலை தலை அதிகமாக உருட்டப்படுகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து  ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப். 

குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 திட்டம் தேவையா?: பாஜக கேள்வி!

+1
0
+1
3
+1
1
+1
3
+1
2
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published.