இன்று கூடுகிறது சட்டமன்றம்… டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம்!

Published On:

| By Selvam

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 9) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இன்றைய கூட்டத்தொடரில் மதுரை மேலூர் வட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

அவை தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முகமது கனி, எஸ்.ஆர்.ஜெயராமன், செல்வராஜ் உள்ளிட்ட 15 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது.

தொடர்ந்து பொதுக்கணக்கு குழுத்தலைவரும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான செல்வப்பெருந்தகை, 2024 -25-ஆம் ஆண்டுக்கான பொதுக் கணக்கு குழுவின் அறிக்கைகளை தாக்கல் செய்வார். பொது நிறுவனங்கள் குழு தலைவரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் பொது நிறுவனங்கள் குழு அறிக்கைகளை தாக்கல் செய்ய உள்ளார்.

இதனையடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், 19.10.2022-ஆம் நாளன்று பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறைப்படுத்துதல்) திருத்த சட்டமுன்வடிவை திரும்ப பெறக்கோரி அனுமதி கோர உள்ளார்.

2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொதுக்கட்டடங்கள் ( உரிமம் வழங்குதல்) திருத்தச் சட்ட முன்வடிவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்கிறார். அதேபோல, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கீதா ஜீவன் ஆகியோர் தங்கள் துறை சார்ந்த சட்டமுன்வடிவுகளை அறிமுகம் செய்கின்றனர்.

இதனை தொடர்ந்து மதுரை மேலூர் வட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அரசினர் தனித்தீர்மானத்தை கொண்டு வர உள்ளார்.

அந்த தீர்மானத்தில் “மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

இத்தகைய இன்றியமையாத மற்றும் முக்கியக் கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசுகளின் அனுமதியின்றி, மத்திய அரசு ஏலம் விடக்கூடாது என்று கடந்த 3.10.2023 அன்று, தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. இந்த எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாது, மத்திய அரசு இத்தகைய ஏல நடவடிக்கையை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.

இந்த டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோயில்கள், சமணச் சின்னங்கள், தமிழ் சின்னங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துக்கள், பஞ்சபாண்டவர் படுகைகள் போன்ற பல வரலாற்றுச் சின்னங்களை உள்ளடக்கியதாகவும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

இப்பகுதி ஒரு பல்லுயிர்ப் பெருக்கத் தலமாக, கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நிலையிலும், அப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமம் மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளதை, தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும், ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால், அப்பகுதி மக்கள் இதனை எதிர்த்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இப்பகுதியையும், இப்பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஒப்பந்தம் வழங்கிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கைவிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே வலியறுத்தியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு பிறகு தனித்தீர்மானமானது நிறைவேற்றப்படும்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்… அதிபர் ஆசாத் தப்பியோட்டம்!

டாப் 10 நியூஸ்: முதலீட்டு உச்சி மாநாட்டில் மோடி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share